அண்ணா பல்கலை உலகளவில் 200 ரேங்கிற்குள் கொண்டுவர எம்ஐடி, உறுப்பு கல்லூரிகள் சிறந்த பங்களிப்பை அளிக்கும்: துணை வேந்தர் வேல்ராஜ் நம்பிக்கை

தாம்பரம்: அண்ணா பல்கலைக்கழகத்தை உலக அளவில் 200 ரேங்கிற்குள் கொண்டுவர எம்ஐடி கல்லூரி உட்பட உறுப்பு கல்லூரிகள் சிறந்த பங்களிப்பை அளிக்கும், என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் 75ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சர்வதேச மாநாடு, தேசிய கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முன்னாள் கல்லூரி தலைவர், முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் பேராசிரியர்கள், முன்னாள் ஊழியர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, கல்லூரி நிறுவனர் ராஜம் தபால் தலை மற்றும் 75ம் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கலந்துகொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகத்தில் ஒன்றாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எம்ஐடி கல்லூரி செய்திருக்கின்ற சாதனைகள் அதிகமானது. பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை எம்ஐடி கல்லூரி அளித்துள்ளது. இன்னும், 2 நாட்கள் எம்ஐடி முன்னாள் மாணவர்கள் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த உள்ளார்கள். இறுதிநாள் நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 4 முக்கிய வளாகங்களில் எம்ஐடி கல்லூரி முக்கியமானது.

அண்ணா பல்கலைக்கழகம் உலக அரங்கில் 850 ரேங்கிலிருந்து 383 ரேங்கிற்கு வந்துள்ளது. இந்தியாவில் 7 ஐஐடிகள் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அடுத்து 10வது ரேங்கில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் 4 வருடத்தில் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த சமயத்தில் உலக அளவில் 200 ரேங்கிற்குள் வருவதற்கு எம்ஐடி கல்லூரி உட்பட அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள 4 கேம்பஸ்களில் உள்ள கல்லூரிகளும் உலக அரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை உலக அரங்கில் கொண்டு வருவதற்கு பாடுபடுவோம், என்றார். நிகழ்ச்சியில் ஏடிபிடி தலைவர் வேலுசாமி, ஜேஎஸ்டபுள்யு ஸ்டீல் தலைவர் முருகன், டெல்பி டிவிஎஸ் தலைமை திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி