அண்ணாமலை யாத்திரை பஸ்களை நிறுத்தி பாஜ ரகளை: 2 கி.மீ. நடந்து சென்ற பயணிகள்: முதுகுளத்தூரில் பரபரப்பு

ராமநாதபுரம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரையையொட்டி முதுகுளத்தூரில் பஸ்களை பாஜவினர் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். பாஜ நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி டிஎஸ்பி மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் நேற்றுமுன் தினம் துவக்கினார்.

இன்று காலை 9 மணிக்கு முதுகுளத்தூரில் பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் காலை 9 மணி முதலே பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதுகுளத்தூர் காந்தி சிலை பகுதியில் கூடியிருந்தனர். அதனால் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர், கமுதி-கடலாடி பிரதான சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், பாதயாத்திரை துவங்க 11.50 மணிக்கே அண்ணாமலை வந்தார். அப்போது அங்கு தொண்டர்களுடன் வந்த பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அந்தப் பகுதியில் பஸ்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்.

அங்கு பாதுகாப்பு பணியில் கமுதி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமர்பிரசாத் ரெட்டி, பஸ்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதோடு, டிஎஸ்பி மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டு கடும் வாக்குவாதம் செய்தார். பஸ்களை இயக்கக்கூடாது என்று கையை உயர்த்தி கோபமாக பேசினார். அவருடன் வந்த தொண்டர்களும் ஆவேசப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மாவட்ட தலைவர் தரணி முருகேசன், அமர்பிரசாத் ரெட்டியை அழைத்து சென்றார்.

பாஜவினர் செய்த ரகளையால் 1 மணிநேரத்திற்கும் மேலாக பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கைக்குழந்தைகளோடு இருந்த பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். பாஜ பாதயாத்திரை முடியும் வரை பஸ் கிளம்பிச் செல்லாது என்று முடிவெடுத்த பெண்கள் கைக்குழந்தையோடு, சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். பாதயாத்திரை என்ற பெயரில் பாஜவினர் பஸ்சை நிறுத்தி நடத்திய அராஜகம் அப்பகுதி மக்களை முகம் சுழிக்க வைத்தது.

Related posts

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்

ராகுல்காந்திக்கு எதிராக பேசினால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு