முதலில் வார்டு கவுன்சிலராகிட்டு பேசுங்க…. ஒரு பைசா நிதி பெற்று தர துப்பில்லாத அண்ணாமலைக்கு வாய்ச்சவடால் ஏன்? உதயகுமார் விளாசல்

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தானில், அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி: பாஜ மாநில தலைவராக உள்ள மெத்தப் படித்த மேதாவி, அவதார புருஷர், தமிழகத்தை மீட்க வந்த கிருஷ்ண பரமாத்மா என கூறிக்கொள்ளும் அண்ணாமலை, தமிழகத்தின் நலனுக்காக என்ன செய்தார்? ஒன்றிய அரசிடம் இருந்து ஒரு பைசா நிதி வாங்கித்தர துப்பில்லை… நீ ஏன் வாய் சவடால் பேசுகிறாய்? டெல்லிக்கு போ… தமிழக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி வாங்கு. மழை பேரிடர்களுக்கு நிதி வாங்கு. அப்படி எதையும் செய்யாமல் வாய்ச்சவடால் எதற்கு?

மானமுள்ள, ஈரமுள்ள தலைவனாக, உள்துறை அமைச்சரிடம் இருந்து தமிழகத்திற்கு எந்த நிதியை நீ பெற்றுக்கொடுத்தாய்? தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. நான் சவாலாக கேட்கிறேன். புள்ளிவிபர மேதாவியே… தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி பட்டியலை வெளியிட தயாரா? தேர்தலுக்காக 8 முறை பிரதமரை கூட்டி வந்தாய். இப்ப தமிழர்கள் மீதான பாசம் எங்க போச்சு. எல்லா நிதி நிலை அறிக்கையிலும் திருக்குறள் வாசித்தீர்கள். இப்போ ஏன் அய்யன் திருவள்ளுவரை மறந்தீர்கள்.

அதிமுகவே இருக்கக் கூடாது என பேசி விட்டு, இப்ப எங்களின் கீழ் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது என்ன மனநிலை? உங்களின் பகல் கனவு தமிழகத்தில் பலிக்காது. முதலில் வார்டு கவுன்சிலராகி, பின் சட்டமன்ற உறுப்பினர் எனும் அளவு உயர்ந்து விட்டு பேசுங்கள். கற்பனை உலகில் வாழும் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவம் வேண்டும். காலணா பிரயோசனம் இல்லாத, நியமனப் பதவியில் இருக்கும் உனக்கு, அதிமுக குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* அண்ணாமலை வாயால் கெட்டது பாஜ
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ கூறுகையில், ‘தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் வாயால்தான் தனி மெஜாரிட்டியுடன் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த பாஜ இன்றைக்கு மைனாரிட்டியாகி, கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் டெல்லி நிர்வாகிகள் அண்ணாமலை மீது கடுப்பில் உள்ளனர். அதனால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். எடப்பாடி பாஜவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டார். ஆனாலும் கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை முயற்சி செய்கிறார். பாஜ எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பாஜ புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது’ என்றார்.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்