அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி நடைபயணம் தோல்வியால் சனாதனத்தை பற்றி புலம்புகிறார்

சேலம்: நடை பயணம் தோல்வி அடைந்ததால், சனாதனம் குறித்து அண்ணாமலை புலம்பிக் கொண்டிருக்கிறார் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை நேற்று காலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் பொதுமக்கள், இறை தொண்டர்கள் என அனைவராலும் பாராட்டப்படும் வகையில் ஆயிரமாவது கோயில் கும்பாபிஷேக விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

கடந்த 2 ஆண்டில் ரூ.5,213 கோடி மதிப்பிலான கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 1,044 கோயில்களுக்கு 2 ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.140 கோடியில் 137 கோயில்களில் திருப்பணி தொடங்கி நடக்கிறது. நடப்பு நிதியாண்டில் 1000 ஆண்டுகள் பழமையான 87 கோயில்களில் ரூ.60 கோடியில் திருப்பணி மேற்கொள்ளவுள்ளோம். மன்னர் காலத்து கோயில்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

அண்ணாமலையின் நடைபயணம் படுதோல்வியை சந்தித்துள்ளது. அவர், சனாதனத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறுதல் இருப்பதை, பெண்ணின் கற்புடன் தொடர்புபடுத்தி புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ஆட்சியின் மீது குறை சொல்ல முடியாததால் சனாதனம் பற்றி அவர் புலம்பி வருகிறார். உப்பு சப்பில்லாத பிரச்னையை கிளப்புகிறார். வேலையற்ற வீணர்களின் பொழுதுபோக்கு பேச்சாகவே இதை கருதுகிறேன். தமிழ்நாட்டில் சமத்துவத்தை பின்பற்றும் ஆட்சி நடக்கிறது. ஒன்றிய பாஜ அரசின் தோல்வியை மறைக்கும் விதமாக மக்களை திசைதிருப்பும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.

நாங்கள் மக்களுக்கான இறைபணியை செய்துகொண்டே இருக்கிறோம். சனாதனத்தை ஏற்றவர்களை எதிர்க்கவில்லை. சனாதனத்தில் உள்ள கோட்பாடுகளைத்தான் எதிர்க்கிறோம். அதாவது, பெண்கள் கல்வி கற்கக்கூடாது, குலக்கல்வி முறை, உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றைத்தான் எதிர்க்கிறோம். மக்களிடம் உயர்வு, தாழ்வு கூடாது, தீண்டாமையை ஒழிக்க வேண்டும், சமத்துவம் ஏற்பட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். இந்துக்களை மனதார வரவேற்றே ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு