அண்ணாமலை விளம்பரத்துக்காக திருமணம் செய்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்த திருமணம் கருணைத்தன்மை உடையது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மரத் தேர் செய்யப்படுகிறது. அதற்காக கோயிலின் நிதி மூலம் ரூ.49.50 லட்சமும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை ரூ.49.50 லட்சம் என மொத்தம் ரூ.99 லட்சத்தில் தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூஜை நேற்று காலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு, தேர் செய்வதற்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த தேரானது 36 அடி உயரமும், 14 அடி அகலமும், 5 அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் இதுவரை 51 மர தேர்கள் ரூ.31 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில்தான் குடமுழுக்குகள் அதிகம் நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 876 கோயில்களில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு 500 திருமணங்கள் அறிவித்து, முதல்கட்டமாக 34 திருமணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

அன்று மட்டும் தமிழகம் முழுவதும் மொத்தம் 219 திருமணங்கள் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய திருமணம் கருணை உள்ளத்தோடு நடத்தி வைக்கப்பட்ட திருமணம். ஆனால் பாஜ தலைவர் அண்ணாமலை நடத்திய திருமணம் விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட திருமணம். அதனால் தான் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர்களுக்கும் திருமணத்தை நடத்தி வருகிறார். விளம்பரத்திற்காக நடத்தப்படும் திருமணங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு அண்ணாமலை நடத்தி வைத்த திருமணமே சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கல்வராயன் மலைப் பகுதியில் சாலையை சீரமைக்க ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை

வடகிழக்குப் பருவமழை: சென்னையில் முன்னெச்சரிக்கையாக 48,664 மரக்கிளை அகற்றம்