அண்ணாமலை பாவம் செய்ததால் நடைபயணம் நடத்தப்படுகிறது: கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

தண்டையார்பேட்டை: அண்ணாமலை நடைபயணம் பாவம் செய்ததற்காக நடத்தப் படுகிறது என சவுகார்பேட்டையில் நடந்த கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதி திமுக சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு, பொதுக்குழு உறுப்பினர் கலைச்செல்வி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

இதையடுத்து, அமைச்சர் சேகர்பாபு, சுற்றுச்சூழல் பணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், கர்ப்பிணி பெண்கள் பேறு காலங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து மருத்துவர் என்ற முறையில் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் 100 நிகழ்ச்சிகள் நடத்துவதாக முடிவு செய்து முதற்கட்டமாக 40 நிகழ்ச்சிகள் என நலத்திட்ட உதவி, பட்டிமன்றம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 130 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ₹10,000 உதவித்தொகை மற்றும் நலத்திட்ட பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது. அண்ணாமலை என்னதான் குட்டிக்கரணம் அடித்து நடைபயணம் செய்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணி 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றிபெறும். பாரதி ஜனதா கட்சிக்கு திமுக சிம்ம சொப்பணமாக விளங்குகிறது.

ராகுல் காந்தி நடை பயணம் செய்தது இந்தியாவை மீட்டெடுக்க, அண்ணாமலை நடைபயணம் செய்வது அவரை முன்னிலைப்படுத்ததான். திமுக பொறுத்தவரை மக்களுக்காக ஆட்சி மூலமும், கட்சி மூலமும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் ஆணைக் கிணங்க தொடர்ந்து செய்து வருகிறது. அண்ணாமலை நடைபயணம் பாவம் செய்ததற்காக நடத்தப்படுகிறது, திமுக எந்த பாவமும் செய்யாததால் நடைபயணம் செய்ய அவசியமில்லை. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில், சென்னை மாநகர மேயர் பிரியா, திமுக பகுதி செயலாளர்கள் முரளி, ராஜசேகர், மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு