இங்க நா ராஜாவா இருக்கேன்… அண்ணாமலைக்கு கூஜா தூக்க நான் ஏன் அங்க போணும்… பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் அதிமுகவில் இணைவார்கள்

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் அதிமுகவில் ராஜாவாக உள்ளேன். பாஜவுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. கோவை அவிநாசி சாலை ரெசிடென்சி ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி அதிமுகவில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் பாஜவில் இணையும் விழா என கூறப்பட்டது. அந்த சமயத்தில் நான் ஓட்டல் அருகே உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றேன். இதனிடையே சமூக ஊடகங்களில் அம்மன் அர்ஜூனன் பாஜவில் இணைய இருப்பதாக தகவல் பரவியது.

அவினாசி சாலை என்பது பாஜவினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதிமுகவில் எந்த ஒரு அடிப்படை தொண்டனும் பாஜவில் இணைய மாட்டான். பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று மதியம் 2.15 மணிக்கு (நேற்று) அதிமுகவில் இணைகின்றனர். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததால்தான் பாஜவால் சட்டமன்றத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் உயிரை கொடுத்து உழைத்து வெற்றிபெற வைத்தோம். மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை பாஜவில் இணைத்ததுபோல் இங்கும் இணைக்க நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. இது வடநாடு கிடையாது. இங்கிருந்து ஒரு தொண்டனையும் கூட பாஜவில் இணைக்க முடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கோவையில் வெற்றி பெற்றால், நான் அரசியல் வாழ்வைவிட்டு விலகி கொள்கிறேன். எங்களால்தான் பாஜ சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது என்பதை மறுக்க இயலாது. தமிழகத்தில் கோவை அதிமுகவின் கோட்டை பாஜவால் தனித்து வெல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் கூறியவாறு பாஜ எம்எல்ஏ.க்கள் யாரும் நேற்று அதிமுகவில் இணையவில்லை. ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன் மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ டாக்டர்.சரஸ்வதி அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே, எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார் சமீபத்தில் பாஜவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.

Related posts

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை