அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 129 காவலர்களுக்கு அண்ணா பதக்கம்: அரசு அறிவிப்பு

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 129 காவல்துறை அதிகாரிகளுக்கு ‘‘தமிழ்நாடு முதல்வரின் அண்ணா பதக்கத்தை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல்ரேகை பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாவின் பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இந்தாண்டு, காவல் துறையில் தலைமை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல்படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகை பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும், அவர்களின் சிறந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்” வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபுரிந்து வரும் மந்திரமூர்த்தி, மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 2023 டிசம்பர் 18ம் தேதி இரவு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும் மற்றும் மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி “தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்” வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த பதக்கங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் மற்றொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து டெல்டாவில் 50 இடங்களில் சாலை மறியல்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த மாஜி அமைச்சர் பவன் கட்சியில் ஐக்கியம்

வடலூர் வள்ளலார் பெருவெளி சைட் ‘பி’யில் மருத்துவமனை கட்ட ஐகோர்ட் அனுமதி!!