சென்னை அண்ணா அறிவாலயம் முகப்பில் திமுக பவள விழா இலட்சினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயம் முகப்பில் திமுக பவள விழா இலட்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் அண்ணாவால் 1949ம் ஆண்டு தொடங்கப்பட்டு கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட திமுக எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024ம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது. பவளவிழாவையொட்டி திமுக கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் திமுகவிற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். திமுக கொடி பறக்காத திமுகவினர் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் – அலுவலகங்கள் – வணிகவளாகங்களில் கட்சிக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். திமுகவின் பவளவிழாவுக்காக தமிழ்நாடு முழுவதும் திமுகவின் கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் திமுகவின் 75வது பவள விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயம் கட்டிடத்தின் முகப்பில் பவள விழா இலட்சினை நிறுவப்பட்டுள்ளது.

இந்த இலட்சினையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் கனிமொழி, தயாநிதிமாறன், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, மாதவரம் சுதர்சனம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்