அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் பதவியை அமைச்சர் உதயநிதி ராஜினாமா

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மாதந்திர ஆட்சிமன்றக் குழு (சிண்டிகேட்) கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன், துணைவேந்தர் வேல்ராஜ் உட்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சிண்டிகேட் உறுப்பினர் மாற்றத்துக்கு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அண்ணா பல்கலை. அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘2021-ம் ஆண்டு சிண்டிகேட் குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே விளையாட்டுத் துறையின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளதால், அண்ணா பல்கலை. சிண்டிகேட் உறுப்பினர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். ஏனெனில், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிண்டிகேட் குழுவில் இடம்பெற முடியும். அதேபோல், ஆளுநரின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ரஞ்சனி பார்த்தசாரதி ஒய்வு பெற்றதால் அவருக்கு மாற்றாக மாற்று நபரை நியமிக்க ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதுதவிர தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் மாற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக புதிய செயலர் சிண்டிகேட் உறுப்பினராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மேலும், தொழிற்சாலைகள் சார்பில் குழு உறுப்பினராக சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்’’என்றனர். இதுதவிர தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேராசிரியர்கள் கட்டாய விருப்ப ஒய்வில் அனுப்பவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக மாற்று நபரை பரிந்துரை செய்ய அரசிடம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !