திருவாசகத்தில் சமயநெறியும் பக்தி நெறியும்

தமிழ் பக்தியின் மொழி. தமிழில் தோன்றிய பக்தி இலக்கியங்கள் அனைத்துலகும் போற்றும்படி அமைந்துள்ளன. பக்தி இயக்கத்தில் திருமுறைகள் ஆற்றிய பணி அளவிடற்கரியது. அவ்வாறு அமைந்த பக்தி உலகில் திருவாசகம் தலைமை பெற்றுள்ளது. திருவாசகம் தலைமையும் தாய்மையும் உடையது. மாணிக்க வாசகரால் எழுதப்பட்ட இத்திருவாசகத்தில் அமைந்துள்ள தமிழ் எளியதமிழ், இனிய தமிழ், என்புருக்கும் அன்புத் தமிழ் நினைந்து நினைந்து பாடுதற்கேற்ற இயல்புடையது.

சைவப் பெருநெறி காட்டும் புகழ்நூல்கள் பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் திகழ்வது மாணிக்கவாசகரின் திருவாசகம் திருககோவையார் ஆகிய இரு நூல்களாகும். திருவாதவூரடிகள் அருளியய தீஞ்சுவைப்பனுவலான திருவாசகத்தில் சிவபுராணம் முதலாக அச்சோப்பதிகம் ஈறாக மொத்தம் ஐம்பத்தொரு திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. அவற்றிலுள்ள திருப்பாடல்கள் மொத்தம் 658 ஆகும்.

இப்பதிகத்திலமைந்த பாடல்களில் நகை, அழுகை முதலிய சுவைகள் விரவி வருவதை உணர முடியும். திருவாசகம் பக்தி நூல், ஞான நூல் என்று யாவராலும் நன்கு அறியப்பட்டதாயினும், அது சிறந்த பல இலக்கிய நயங்களை உடையதாகவும் விளங்குகிறது. ‘‘மாணிக்க வாசகருடைய திருவாசகத்தை உள்ளன்போடு பாடும்போது அது கருப்பஞ்சாறு, தேன் பால், செழுங்கனித் தீஞ்சுவை கலந்த இன்பத்தைத் தந்து ஊன், உயிர் ஆகியவற்றுள் கலந்து திகட்டாமல் இனிப்பதாகும்’’ என்கிறார் வள்ளலார்.

திருவாசகத்தில் சமயம்

மெய்ப்பொருளால் கடவுளைச் சிவன் என்ற பெயரால் அழைத்து வணங்குகின்ற சமயம் சைவ சமயம், சிவனை வழிபடுவோர் அனைவரும் சைவரே, அன்பே அடிப்படையாகவும், அறத்தைத் துணையாகவும் கொண்டு அமைந்த இல்வாழ்க்கையே சைவ சமய வாழ்வின் அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சைவ சமயத்தின் தத்துவத்தைத் திருமூலர் அன்பு, சிவம், தனித்தனியானது அல்ல இரண்டும் ஒன்றே என்று கூறுகிறார்.

சைவ சமய நெறிகள்

எதனைத் தொடங்கும் பொழுதும் நமச்சிவாயத்தைக் சொல்லி தொடங்க வேண்டும். ஆதலால் திருவாசகத்தை மாணிக்க வாசகர் ‘‘நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!!” என்று தொடங்கியிருக்கிறார். திருவாசகப் பாடல்கள் அனைத்தும் விலைமதிக்கப்பெறாத வைரங்கள். அவற்றில் முதலிடம் பெறுவது சிவபுராணமாகும். இதில் அனைத்துத் தத்துவக் கருத்துகளும் அடங்கியுள்ளது. சைவ சமயத்தில் திருநீறு அணிவது எங்ஙனம் ஓர் ஒழுக்கமாகக் காட்டப்படுகிறதோ அவ்வண்ணமே சிவாய நம என்றும் நம சிவாய என்றும் உச்சரித்தலும் ஓர் ஒழுக்கமாகக் கொள்ளப்படுகிறது. ‘‘நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாஅழ்க’’ (திரு.1 சிவபுராணம்) என்று பரம்பொருளை நமசிவாய என்ற ஐந்தெழுத்துப்பெயரால் சிவபுராணத்தில் முதல் வாக்காக வைத்து மாணிக்கவாசகர் இறைவணக்கம் பாடுகிறார்.

‘‘நமசிவாய என்ற அம மந்திரம் குறிக்கும் பொருளை உலகத்தவர் உணர்ந்து ஓதி உய்வார்களாக என்னும் பொருள்படவே’’ நமசிவாய வாஅழ்க என்று கூறினார். திருவைந்தெழுத்தைச் சிகாரம் முதலாகக் கூறுதல் ஆகம வழக்கு. திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக வந்து சிவாய நம என்றே வாதவூரருக்கு உபதேசித்தார் என்பர். எனினும் நகாரம முதலாகக் கூறுதல் மறைவழக்காதலின் தமிழ் மறையாகிய திருவாசகத்தை நமசிவாய என்று மணிவாசகர்) தொடங்கியுள்ளார்.’’

(ஜி. சுப்பிரமணியபிள்ளை, திருவாசகநெறி ப.209) சைவ சமய இறைவனான சிவபெருமான் எளியவர்களுக்கு மிக எளியவராகிக் காட்சித் தருபவன. ஐந்தெழுத்தை ஓதுவார்கள். வஞ்சம் அற்றவராய், பொய் இல்லாத மெய்யராய், உண்மை அன்பராய், மனம் தூயராய் இருத்தல் வேண்டும். ஒழுக்கமில்லாத அற்பர்கள் எத்துனை முறை ஓதினாலும் இம்மந்திரம் பலனளிக்காது என்பது அப்பர் வாக்கு. திருவாசகத்தில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன.

முப்பொருள் உண்மைகள்

சைவ சித்தாந்தம் கூறும் உண்மைகள் மூன்று

1.தானே அறியும் பொருளான பதி (இறைவன்)

2.அறிவிக்க அறியும் பொருட்களான பசுக்கள் (உயிர்கள்)

3.அறிவித்தாலும் அறியாத பொருள்களான பாசம் (ஆணவம் ஃ கன்மம் ஃ மாயை)பதி உண்மை முப்பொருள்களுள் முதன்மைப் பொருள் பதியாகும்.

‘‘ஆதியனே…
எல்லாவுயிர்க்கும் ஈறாய் ஈறின்மை
எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீ தோற்ற இல்லாய்!
ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தம் இலான்’’
இத்திருவாசக வரிகள் மூலம் சிவபெருமானை ஊழிக்காலத்தில் சங்காரகாரணனாக விளங்குவான் என்றும் இறைவன் ஒன்றாய் வேறாய், உடனாய் இருப்பவன் என்றும் அறியமுடிகிறது. இப்பாடலடிகள் பதி உண்மையை உணர்த்தி நிற்கிறது.

பசு உண்மை

‘பசு’ என்பது ஆன்மா அல்லது உயிர் ஆகும். இதனைச் சிவஞா சித்தியார்
‘‘பசுத்துவ முடைய வாகிப் பசுவென நிற்கும் ஆன்மா’’ என்று கூறுகிறது. திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பசு (உயிர்) உண்மையைப்
‘‘பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகிபோற்றி
எல்லா உயிர்க்கும்பசு பாசம் அறுத்தருளி’’

என்கிறார். மேலும் பசு அளாதி அறிவித்தால் அறியும் இயல்பு உடையது. இத்தகைய உயிர்களின் பிறவிகள் பல என்பதை மாணிக்க வாசகர்.

‘‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாய்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றகுத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறவியும் பிறந்திளைத் தேன்’’ என்று பாடுவதின் மூலம் அறியமுடிகிறது.

பாச உண்மை
பாசம் என்பது கட்டு அல்லது தளை என்பதாகும். மாணிக்கவாசகர் பாசம் என்ற சொல்லையே
‘‘பாசமாம் பற்று
பாசவினை
பசு பாசம் அறுத்தானை
பாச வேரறுக்கும்’’
என்பன போன்ற பல வரிகளில் விளக்குகின்றார். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் உயிர்களுடன் நிற்பவை ஆகும். ஆணவ, மலத்தை மாணிக்கவாசகர் மலம் மாய இருள போன்ற சொற்களால் கையாளுகிறார். இதனை,

‘‘மலங்கி னேன கண்ணின் நீரை மாற்றி
மலங் கெடுத்த பெருந்துறை’’
என்னும் வரிகளால் அறியலாம்.

சமயமார்க்கம்

சமய மார்க்கத்தை இருவகையாகப் பிரிக்கலாம். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம். ‘‘பக்தி மார்க்கம்’’ சமயக் கோட்பாடுகளை விவரிப்பது. ‘‘ஞான மார்க்கம்’’ அச்சமயக் கோட்பாடுகளுக்குள் புதைந்திருக்கும் மெய்யுணர்வுக் கோட்பாடுகளைக் கூறுவதாகும். இவை இரண்டும் தனித்து இயங்காமல் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து அமையும். திருவாசகம் பொதுவகையில் பக்தி மார்க்கத்தைச் சார்ந்தே அமைகின்றது.

திருவாசகத்தில் முதற்கண் அமையும் ‘‘சிவபுராணம்’’ என்ற பக்தி பாடல் சிவனது அளாதி முறைமையான பழமையையும் அல்லது ‘‘சிவன் எல்லையற்ற காலப் போக்கில் நிரந்தரமான பரம்பொருள்’’ என்பதையும் குறிக்கும் பக்தி பாடலாகும். இவ்வுலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தூய தன்மை வாய்ந்தவனாகிய. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தன்மையனாக விளங்கக்கூடிய. பரம்பொருள் ‘‘நமசிவாய’’ என்ற ஐந்தெழுத்துப் பெயரால் திருவாசகத்தில் முதல் பதிகமாகிய ‘‘சிவபுராணத்தில்’’ முதல் வாக்காக வைத்து மாணிக்கவாசகர் இறை வணக்கம் பாடுகிறார். நமசிவாய அந்த முதல் வாக்கையே அனைத்து மகா வாக்கியங்களில் போற்றிச் சைவப்பெருமக்கள் தியானத்துக்குரிய வாக்காகக் கருதுகிறார்கள்.

மகாவாக்கியம்

உலகில் சமயங்கள் பலவகையாக இருப்பினும் வேதங்களின் ‘‘ஆணை” (அல்லது உறுதிமொழி)யும் ஆகமத்தில் ‘‘ஆணை’’ (அல்லது உறுதிமொழி)யும் அச்சமயங்களால் பின்பற்றப்படும் மகாவாக்கியமாக ஏற்பட்டு அம்மகா வாக்கியத்தைத் தியானிப்பதால் அது அச்சமய மெய்யுணர்வுக் கோட்பாடாக மாறிவிடுகிறது.

‘‘இறைமை மெய்யுணர்வில் நம்பிக்கை கொண்ட மதங்கள் அனைத்தும் அவரவர் சமயங்களில் ‘‘மகாவாக்கியம்’’ அல்லது ‘‘மூலமந்திரத்தை’’ உச்சரித்துத் தியானிப்பதால் இறையருள் கிட்டும் என்பது அம்மதத்தின் உறுதிமொழி அல்லது ஆணையாகும். மணிவாசகப் பெருமான் இறைவன்பால் கொண்ட பக்திப் பரவசத்தால் பாடியுள்ள ஒப்பற்ற பக்திப் பாடல்களைக் கொண்டுள்ள திருவாசகத்தில் ‘‘நமசிவாய அல்லது ‘‘சிவாயநம’’ என்று ‘‘மூல மந்திரமாகிய’’ மகாவாக்கியத்தின் மேல் நம்பிக்கை கொண்டவராய் இருந்தார். அதுவே சைவ சமயத்தின் மூல மந்திரமாக இருப்பதை நாம் அறிகிறோம்.’’ (முனைவர் இந்திரா சோமசுந்தரம்-திருவாசகத்தில் ஒரு திறனாய்வு ப.257-258).

சிவாய நம, நமசிவாய என்னும் இந்த ஐந்தெழுத்து மூல மந்திரத்தைத் துதித்தால் சிவனையே துதித்தல் ஆகும். இம்மந்திரம் உலக மயக்கத்திலிருந்து விடுபட உதவுவதாகும். சைவ சமயத்தாரின் மூல மந்திரமாக இது அமைகிறது.

சைவசித்தாந்தக் கொள்கை

மனிதர்கள் செய்யும் செயல்கள் இரு வகைப்படுகின்றன. அவை நல்வினைகள் தீவினைகள் என்று இருவகைப்படும் அவற்றில் நல்வினை செய்பவர்கள் சொர்க்கத்திற்கும் தீவினை செய்பவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள் என்பது இதன் கொள்கை எந்த நன்மையும் எதிர்பாராமல் தன்னலமின்றி பிறர்க்கு நல்வினைகள் செய்பவர்கள் ‘முக்தி’ அதாவது உயர்ந்த பரமபதம் அல்லது பேரின்பத்தை அடைகிறார்கள்.

‘விரதமே பரம் ஆக, வேதியரும்
சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்’
(திரு.4 போற்றித்திரு அகவல் 50,51)
சிவபெருமானின்
ஐந்து தொழில்கள்

சமயத்தவர்கள் பலரும் இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்கள் செய்கிறான் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சைவ சித்தாந்தக் கொள்கையின்படி முத்தொழிலுடன் மறைத்தல் என்ற தொழிலும் அருளல் என்ற தொழிலும் இறைவன் செய்கின்றான். ஆகவே இறைவன் ஐந்து வகைத் தொழில்கள் புரிகிறான் என்று கூறுகிறது.

திருவாசகத்தில் பக்திச் சுவை

திருவாசகத்தின் சிறப்புகள் பலவற்றுள் தலையாயது பக்திச் சுவை. இச்சுவை திருவாசகத்தில் நிரம்பியுள்ளது குறித்து இந்நூல் ‘‘திருவாசகத்தேன்’’ என்றே கூறப்படுகிறது.

‘‘தொல்லை யிடும்பிறவிச் சூழ்ந்த தளைநீக்கி
அல்லலறுத் தாணந்த மாக்கியதே எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகமென்னுற தேன்’’
(திருவாசகம் நூற்சிறப்பு வெண்பா- கழக வெளியீடு)

உலகப் பொருள்களில் மிக இனிய பொருள்தேன். அது நறுமணம் மிக்க உயர்ந்த மலர்களினின்றும் அருமையாகச் சேகரிக்கப் பெறுவது உண்ணும்பொழுது நாவிற்கு இனிமை தருவது. உண்டபின் உடல் நோயைப் போக்கி உடலுக்கு உறுதி பயப்பது. நெடுங்காலம் கெடாமல் இருக்கும் ஆற்றல் உடையது. இத்தேனைப்போன்று திருவாசகமும் சிறப்புத் தன்மையுடையதாய் அமைகின்றது.

திருவாசகத் தேன்

முத்தொழில்கள் செய்யும் சிவபெருமான் மனிதப் பிறவிக்கு முத்தியிலும் பரமுத்தி அளிப்பவர் ஆவார். இதனை உணர்ந்த மாணிக்கவாசகர்.
‘‘கொள்ளேன் புரந்தான் மால்அயன் வாழ்வு
குடிகெடினும்
நள்ளேன் நின்தடி யாரொடல் லால்நர
கம்புகினும்’’
திருவருளாலே இருக்கப்பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெய்வம் உத்தமனே என்று பாடுவதன் வாயிலாக தாம் சிவபெருமானையன்றிப் பிறதெய்வங்களை மனதிலும் எண்ணாத தன்மையைச் சுட்டுகின்றார். பஞ்சபூதங்களின் வடிவாய் நிற்கும் இறைவன் உண்மையும் இன்மையுமாய் இருப்பவன். தலைவனாகவும் அனைவரையும் இயக்குபவனாயும் உள்ளவன் என்பதை,

‘‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாதி யானெனதென் றவரவரைக்
கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே’’

என்று அழகுபடச் சுட்டுகிறார்.
இறைவன் பழைமைக்குப் பழைமையானவன் புதுமைக்குப் புதுமையானவன். பழைமை புதுமை என்பது காலத்தத்துவத்திற்கு உட்பட்ட கருத்து ஆனால் இறைவன் அத்தத்துவத்தைக் கடந்து நிற்பவனாகின்றான். இதனை,
‘‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போர்த்துமப் பெற்றியனே’’
என்கிறார் மாணிக்கவாசகர்.

‘‘இறைவன் கருணையை நாடுதல்’’
மனிதன் உலகில் குற்றம் செய்வது இயல்பு. அக்குற்றத்திலிருந்து விடுபட இறைவனை வேண்டி மனம் வருந்தினால் அவன் மன்னிக்கப்படுகிறான் என்கிறது திருவாசகம். மனம் உருகி அழுதால் அவனைப் பெறலாம் என்று மணிவாசகப் பெருமான் கூறுகிறார்.

இதனை
‘யானே பொய் என்
நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’’
(திரு.5. திருச்சதகம் 90)
மாணிக்கவாசகர் பொற்பாதங்களையுடைய இறைவன்பால் அன்பு கொண்டு மனம் உருகி வேண்டுவதால் இறைவனின் கருணையைப் பெறமுடியும் என்கிறார்.

எனவே திருவாசகம் சொல்லழகோடும் பொருள் அழகோடும் இம்மை வாழ்வில் மக்கள் இறைவனருள் பெறவும் அத்திருவருளைக் கொண்டு மறுமை வாழ்விற்கு மக்களை இட்டுச்செல்வதாகவும் உள்ளது. தம்முள் ஆன்ம விசாரணையைக் கொண்டு அதனால் இறைவனை உணர்ந்த மாணிக்கவாசகர் பாடிய பாடல் பெரும் தத்துவ விளக்கம் கொண்டுள்ள பாங்கு நினைந்து நினைந்து இன்புறத்தக்கதாகும். தொல்லை இரும்பிறவி சூழம் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தமயமாக்கும் திருவாசகத்தேனைப் பருகி நாமமாம் நமசிவாயத்தை நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்று மாணிக்கவாசகர் வழியிலேயே வாழ்த்தி என்றும் இறைவன் புகழ் ஏத்துவோம்.

முனைவர் இரா. கீதா

Related posts

மனதிற்கினியான்

சங்கரனும் நாராயணனும் இணைந்த கோலம்

சகல கலைகளையும் அருளும் சரஸ்வதி