ராஜராஜன் முன் கிளியாய் தோன்றிய காளி

ராஜராஜன், சோழதேசத்தின் திரும்பிய பக்கமெல்லாம் விண்முட்டும் கோயில்கள் எழுப்பினான். புராண விஷயங்களை கற்சிலைகளாக வடித்தான். மக்களை மதத்தோடு இறுக்கப் பிணைத்தான். அவர்களின் பாதங்களை மதம் சொல்லும் தர்மத்தின் திசை நோக்கித் திருப்பினான். சூரிய சந்திரர்கள் உள்ளவரை எல்லோர் நெஞ்சிலும் நீங்காது நிறைந்தான். ராஜராஜன் ஒவ்வொரு பகுதிக்கும் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் செல்வது வழக்கம். தன் தேசத்து மக்கள் தன்னிடம் சொல்லமுடியாத பிரச்னைகள் ஏதேனும் உள்ளதா எனக் கூர்ந்து கவனிப்பான் அவன்.குடந்தை எனும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள திருபுவனம், திருவிடை மருதூர், திருநாகேஸ்வரம், ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் நகர்வலம் செல்லும்போது இந்த மூன்று ஊர்களின் மையமாகவும், மன்னனின் குலதெய்வமாகவும் விளங்கிய வடபத்ரகாளியம்மன் கிளி உருவத்தில் மன்னனுக்கு வழிகாட்டியாக முன்னே செல்வாள். அவனும் காளியின் இருப்பை பலமுறை உணர்ந்து களிப்புற்று, கண்மூடி நினைத்து நெஞ்சு குளிர்ந்து வணங்கியிருக்கிறான். சில சமயம் காளியும் தன் நிஜசொரூபம் மறைத்து கிளி உருவத்திலேயே அவன் முன்னே பறந்து செல்வாள். அதன் வழியாய் பேரரசனும் நடந்து செல்வான். கிளி காளியாகக் காட்சி தராதா என்று ஏங்குவான்.

ஒருநாள் இரவில் மரத்தின் அருகே கண்மூடி அமர்ந்த அவன்முன் சட்டென்று அந்தக் கிளி தோன்றியது. ராஜராஜன் பிரமித்தான். அந்தக் கிளி மெல்ல பேசத் தொடங்கியது! ‘‘நான் உரல், உலக்கை சத்தம் ஒலிக்காத ஊரில், எந்த திசையிலும் எதிரொலிக்காத சன்னாபுர வனத்தில் குடிகொண்டுள்ளேன். எப்பணியைத் தொடங்கினாலும் எம்மை வந்து தொழுது தொடங்கு. தடைகள் அகன்று வெற்றி காண்பாய்” என்று சொன்னது. பிறகு மெல்லப் பறந்து சென்றது.காளியம்மன் திருவாய் மலர்ந்து பகர்ந்ததை அருள்வாக்காய் ஏற்றுக்கொண்ட மாமன்னன் மறுதினமே தன் குழுவோடு சன்னாபுரவனம் நோக்கி நடந்தான். வனத்தின் மையத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்த காளியைக் கண்டு பிரமித்தான். அவளின் அந்த உக்கிர உருவத்தின் செஞ்சிவப்பில் தானும் ஒளிர்ந்தான். கண்களின் கனலில் தெறித்த சிவப்பில் செம்மையானான். அகமும் புறமும் அவளின் அருளில் நனைந்து வஜ்ரமாய் மாறினான். அவளின் திருவடி
களில் தன் சிரசைப் பதித்து பரவசமாய் கிடந்தான். மெல்ல எழுந்து தன் அரண்மனை நோக்கி நடந்தான்.

ராஜராஜசோழன் தான் பழையாறையில் இருந்த காலம் வரை வடபத்ரகாளியம்மனை தரிசிக்காது எந்த செயலையும் தொடங்கியதில்லை. அவளின் ஆணையில்லாது சிறு அசைவும் செய்ததில்லை. எந்தப் போராயினும் அவளின் நிலம் தொழுது, அவள் நிழல் பதிந்த மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டு, பிறகுதான் யுத்தகளம் நோக்கி நடப்பான். வெற்றிகள் பல குவித்து பார் முழுதும் சோழப்பெருமையை நிலை நாட்டினான்.மாமன்னன் தரிசித்த அந்த வடபத்ரகாளி, சன்னாபுரத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். அம்மனின் எதிரே ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஆலமரம் ஒன்று விழுதுகள் பரப்பி வானுயரமாய் நிற்கிறது. அது, காளி ஒரு பெரிய குடையின் கீழ் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. காளியின் ஆட்சியால் இனம் புரியாத ஓர் அமைதி அந்த வனம் முழுதும் பரவிக்கிடக்கிறது. அவளின் எல்லைக்குள் வருவோரை மெல்லச் சூழ்ந்துகொள்கிறது.

கோயில் முகப்பிலுள்ள அசுரனை வதம் செய்யும் காளியின் சுதை சிற்பம் பார்ப்போரை பரவசப்படுத்தும். மெல்ல கோயிலின் கருவறைக்குச் சென்று வடபத்ரகாளியைப் பார்க்க, அத்தோற்றம் நம்மை மிரளவைக்கிறது. அச்சந்நதியை பெருஞ்சக்தியின் அதிர்வுகள் சுழன்றபடி உள்ளது. நம் கண்கள் வடபத்ரகாளியை விட்டு விலகாது ஒன்றிக்கிடக்கும் அற்புதச் சந்நதி அது. பார்க்கப் பார்க்க சிலிர்ப்பூட்டும் பேருருவம் உடையவள் அவள். நாக்கை வெளியே துருத்திக்கொண்டும், நாற்புறங்களிலும் பரவிய பதினாறு கரங்களில் ஆயுதங்களோடும், தம் காலடியில் வீழ்ந்து கிடக்கும் அசுரனை சூலம் கொண்டு வதம் செய்யும் காளியின் முகத்தில் கருணை பொங்கி வழிகிறது. நாக்கை நீட்டி பெருஞ்சிரிப்பாய் இருக்கும் காளியின் உதட்டோரம் மறைந்திருக்கும் மெல்லிய புன்னகையைப் பார்க்க உள்ளம் உவகை கொள்ளும்.

கோயிலை வலம்வரும்போது இடது ஓரத்தில் இன்னொரு வடபத்ரகாளி காட்சி தருகிறாள். ஒரு காலத்தில் இரு சிலைகளும் ஒரே இடத்தில் இருந்ததாகச் சொல்கின்றனர். பிறகு எப்போது தனியே அமர்ந்தனர் என்று சொல்ல இயலவில்லை. ஆனால் மூலவரைப்போலவே சாயல் கொண்ட அற்புதக் காளியான இவளுக்கு வடபத்ரகாளி என்பதுதான் பெயர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட காளியின் சிலை அது. அதற்கும் தனியே பூஜைகள் நடைபெறுகிறது.எந்தவிதமான தீயசக்திகளும் இங்கு நெருங்கமுடியாது. இவளை நினைத்து தொடங்கும் எந்தக் காரியமும் வெற்றியாகவே முடியும். சுற்றியுள்ள எண்ணற்ற கிராமங்களுக்கு இவளே தாய். மிகச் சிறந்த வழிகாட்டி. பல நூறு குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். அவர்கள் குடும்பப் பாரத்தை இவள் பாதத்தில் இறக்கிவைத்து நிம்மதியாய் இல்லம் நோக்கி திரும்புகின்றனர். எத்தனை சோதனைகள் வந்தாலும் இவள் முன்பு கைகூப்பி வேண்ட, அத்தனையையும் சிதறடித்து விடும் வல்லமை உடையவள் இந்த வடபத்ரகாளி. இந்தக்காளி இருவித தோற்றத்தோடு ஒரே கோயிலில் தனித்தனி சந்நதிகளில் அமர்ந்திருப்பது மிக அரிதான விஷயம். அங்கிருக்கும் ஆலமரத்தின் கீழே வாராஹி அம்மன் வீற்றிருக்கிறார். சிறிய கோயில்தான், ஆனால் சக்தி மிகுந்த கோயில்.

தாமதமாகும் திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றிற்காக வடபத்ரகாளியம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். மாவிளக்கு போட்டு, எலுமிச்சம்பழ மாலை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள். கூடிய விரைவில் திருமணமும் முடிந்து, குழந்தைச் செல்வம் பெற்று காளியன்னையின் முன்பு நன்றியால் கண்ணீர் சொரிந்து நிற்பது இங்கு சகஜமானது. அது தவிர பல்வேறு விஷயங்களுக்காகவும் வேண்டிக்கொண்டு வருகிறார்கள். குறைகள் தீர்ந்து நிம்மதியோடு திரும்புகிறார்கள்.இக்கோயில் நாள்தோறும் பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் பகல் 1 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் கோயிலே திருவிழா கோலம் காணும்.கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது சன்னாபுரம். கும்பகோணத்திலிருந்து மினி பேருந்துகளும், திருநாகேஸ்வரத்திலிருந்து ஆட்டோ வசதிகளும் உள்ளன.உங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் இந்த சன்னாபுரக் காளியை தரிசித்திடுங்கள். வற்றாத வளங்கள் பெற்றிடுங்கள்.

Related posts

கருவூர்த் தேவர்

புரந்தரதாசரின் ஆசையை நிறைவேற்றிய விஜயதாசர்!

நம்மாழ்வாரும் நாடி நாடி நரசிங்கனும்…