ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் திருவடித் தாமரைகளில் அமரும் வண்டு!

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மன்னார்குடி ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் திருக்கோவிலை அபிமான ஸ்தலம் என்று பார்த்தோம். இப்படியிருக்கும்போது இந்தப் பெருமாளுக்கு பாசுரம் சேவிக்க வேண்டுமெனில், எப்படி பாசுரம் சேவிப்பது என்று பார்க்கும்போது ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யார்கள் ஒரு விஷயத்தை காண்பித்துக் கொடுத்திருக்கிறார்கள். அது என்ன என்பதை இப்போது பார்ப்போமா! பாசுரங்களில் வண் துவராபதி என்று எந்தெந்த பாசுரங்களில் வருகிறதோ அது துவாரகையை சொல்லக்கூடியது. ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களில் வண் துவராபதி என்று வரும். இந்த வண் துவராபதி என்பது உயர்ந்த அழகான என்று துவாரகையை குறிக்கக்கூடியது. ஆனால், இங்கு மன்னார்குடி என்பது தட்சிண துவாரகையாக இருப்பதால், அந்த துவாரகையை குறிக்கக் கூடிய பாசுரமாக இருந்தால் கூட, தட்சிண துவாரகையை குறிக்கக் கூடிய மன்னார்குடிக்கும் இந்த பாசுரங்களை சொல்லலாம் என்பதும் பெரியவர்களின் அபிப்ராயம்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஶ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்தில் அவர் ஒரு விஷயம் செய்தார். அது என்னவெனில், திருவாய்மொழியில் இருக்கக் கூடிய பத்து பாசுரங்களை முழுமையாக ராஜகோபாலனுக்கே சமர்ப்பணம் செய்தார். தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும்? அன்னைமீர்… என்று தொடங்கும் பாசுரத்தில் பத்தாம் பாடலை பாருங்கள். உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் அவனை அல்லால்நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் !மனனப்படும் மறைவாணனை வண் துவாராபதி மன்னனை ஏத்துமின் எத்துதலும் தொழுது ஆடுமேஇப்படி ஸ்ரீ மணவாள மாமுனிகள் சமர்ப்பணம் செய்வதற்கு காரணம் என்னவெனில், பத்துப் பாசுரத்தின் கடைசியில் பத்தாவது பாசுரத்தில் ஆழ்வார் வண் துவராபதி என்று குறிப்பிடுகிறார். இந்த வண் துவராபதி என்பது துவாரகையை குறிப்பிட்டிருந்தாலும், இந்த வார்த்தையானது தட்சிண துவாரகையான மன்னார்குடியையும் குறிப்பிடுவதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால், இந்த பாசுரங்கள் அனைத்தும் ஸ்ரீவித்யா ராஜகோபாலனுக்கு சமர்ப்பணம்.

ஆனால், இன்னொரு விஷயம் உண்டு. தமில் இலக்கணப்படி இந்த வண் துவராபதி என்று எழுதும்போது அதை சேர்த்து எழுத வேண்டுமென்று ஒரு விஷயம் உண்டு. அதைச் சேர்த்து எழுதினால் வண் துவராபதி என்பது என்ன ஆகுமெனில், வண்டுவராபதி என்று மாறும். நாம் பிரித்துப் படிக்கும்போது வண் துவராபதி என்று படிப்போம். ஆனால், அது பாசுரத்தில் வண்டுவராபதி என்று இருக்கும். தமிழ் இலக்கணப்படி இந்த வார்த்தைகள் சேரும்போது ‘ட’ காரம் வரும். இப்போது, இங்கு வண்டு வராபதி என்று இருப்பதால் இதிலொரு சூட்சுமம் இருக்கிறது. நாம் ஆரம்பத்திலேயே , மன்னார்குடி தலமானது அதாவது மன்னார்குடி க்ஷேத்ரமானது சம்பகாரண்ய க்ஷேத்ரம் என்று பார்த்தோம். சம்பகம் அல்லது செண்பக மலர்கள் பூத்துக்குலுங்கும் ஆரண்யமாக இருக்கிறது. இங்கு செண்பக மலர்களுக்கு ஒரு தன்மை உண்டு. எல்லா பூக்களிலிலேயும் வண்டு வரும். வண்டு உட்காரும். ஆனால், செண்பக மலர்களில் வண்டு அமராது.

அது செண்பக மலர்களிடம் இருக்கக் கூடிய ஒரு தன்மை. அப்படி செண்பக மலர்கள் நிறைந்திருக்கக் கூடிய காடாக, செண்பகாரண்யமாக இருப்பதால், அங்கு வராது. அதனால், வண்டு வரா பதி. இதை பிரித்தால் வண் துவராபதி என்கிற மன்னார்குடியான செண்பகாரண்யமாக எடுத்துக் கொள்ளலாம். தட்சிண துவாரகையாக இருக்கக் கூடிய மன்னார்குடியாக எடுத்துக் கொள்ளலாம். அதனால், இரண்டு வகையிலேயும் அது மன்னார்குடிக்கு பொருந்துவதால், வண் துவராபதி என்று நிறைவடையக் கூடிய அந்த பத்துப் பாசுரங்களையும் மணவாள மாமுனிகள் ராஜகோபாலனுக்காக சமர்ப்பணம் செய்தார். இதில் ஒரு சூட்சுமமான விஷயம் என்னவெனில், வண்டு வராபதி என்று சொல்லும்போது இந்த செண்பக மலர்களில் வண்டு மொய்க்காது அதனால், மன்னார்குடிக்கு வண்டு வராபதி என்கிற பெயர் வந்தது என்று பார்த்தோம். இதில், என்னவொரு விஷயமெனில், செண்பக மலர்கள் நிறைய மலர்ந்திருக்கிறது. இதிலெல்லாம் வண்டு போய் மொய்க்கவில்லை. அப்போது இந்த வண்டு எங்கு போயிற்று என்றால், இந்த மலர்ந்திருக்கக்கூடிய செண்பகமலர்களெல்லாம் இந்த உலகம் என்று எடுத்துக் கொள்வோம். இந்த வண்டு என்று சொல்லக் கூடிய விஷயமானது நம்முடைய மனதை குறிப்பிடுகிறது. அப்போது ராஜகோபாலனைப் பார்த்த மனது என்னாகிறதெனில், எப்படி செண்பக மலரினிடத்தில் போகாமல், ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் பாதத் தாமரையில் உட்கார்ந்து கொள்ளுமோ அதுபோலவே, ராஜகோபாலனை தரிசித்த மனமானது வெளியில் இருக்கக் கூடிய உலகத்திற்கு போகாமல் ராஜகோபாலனின் பாதத்திலேயே சென்று அமர்ந்துகொள்ளும்.

அப்படியான நம் மனதை ஈர்க்கக் கூடிய, மனதாகிய வண்டை ஈர்க்கக்கூடிய பாத பத்மங்கள் (தாமரைகள்) உடையவனே ஸ்ரீவித்யா ராஜகோபாலன். அப்பேர்ப்பட்ட ராஜகோபாலனை ஒருமுறை தரிசித்தால்கூட மீண்டும் மீண்டும் நம் மனம் அவனின் பாதத் தாமரைகளை நோக்கியே செல்லும் என்பது மகான்களின் வாக்காகும்.
(வளரும்)

 

Related posts

மனதிற்கினியான்

தர்மம் கூடவே வரும்!

ஏடுக்கும் சக்தி தந்த ஏக தந்தன்