ஆன்மீக தகவல்கள்

திருக்கண்ணங்குடி

திருக்கண்ணங்குடியின் பழமைப் புராணச் சிறப்பை அறிய உதவுவது வடமொழியில் தோன்றிய கருடபுராணம் ஆகும். இக்கருட புராணத்தின் ஐந்தாவது இயலில் 320 பாடல்கள் இத்திருத்தலத்துப் பெருமையை எடுத்தியம்புகின்றன. நைமிசாரண்யத்தில் கூடியிருந்த முனிவர்களிடம், நாரதர் திருக்கண்ணங்குடியின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறார். கருவறையில் மூலவரான, லோகநாதப் பெருமாள் நின்ற கோலத்தில் எழிற்கோலம் காட்டுகிறார்.

மேலும் இப்பெருமாளின் இன்னொரு நாமம் ‘‘ஸ்ரீ தாமோதர நாராயணன்’’ என்பதாகும். பக்தியுலா மண்டபத்தின் மேல் பகுதியில், லோகநாயகித் தாயார் (உலகநாயகி) சந்நதி உள்ளது. அமர்ந்த கோலத்தில் அன்னையின் திரு உருவம் அமைந்துள்ளது. இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணங்குடியில் அமைந்துள்ளது. நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் சிக்கலில் இருந்து 2 கி.மீ. தூரத்திலும் இந்தக் கோவில் உள்ளது.

திருக்கண்ணமங்கை

திருமால் பாற்கடலைக் கடைந்தபோது இறுதியில் திருமகள் தோன்றினாள். திருமால் திருமகள் மீது பெருவிருப்புக் கொண்டார். திருமகளும் திருமாலைத் திருமணம் செய்துகொள்ள விழைந்தார். அவரை நேரில் காண வெட்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து பாற்கடலில் இருந்து வெளியேறிய தோற்றத்தினை மனத்தில் கொண்டு திருமாலைக் குறித்துச் சோழநாட்டில் அமைந்துள்ள ஆரண்யத்தில் தவமியற்றினார். இரண்டாம் திருச்சுற்றின் மையத்தில் மூலவரின் கருவறை அமைந்துள்ளது.

மூலவரின் திருப்பெயர் பக்தவத்சலப் பெருமாள் பத்தராவிப் பெருமாள் எனும் திருநாமமும் கொண்டு விளங்குகிறார். மூலவருடைய திரு உரு சுமார் 14 அடி உயரத்துடன் மிகவும் எடுப்பான தோற்றத்தில் விளங்குகிறது. மூலவரான பெருமாள் மிகப் பெரிய உருவத்துடன் கோயில் கொண்டுள்ள தலங்களுள் இதுவும் ஒன்று. தாயார் ‘‘அபிஷேகவல்லி’’ எனும் திருநாமம் கொண்டுள்ளார். இக்கோயில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கை எனும் ஊரில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவிலும், திருச்சேரையிலிருந்து சுமார் 15 மைல் தொலைவிலும் திருவாரூர் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

திருக்கண்ணபுரம்

இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோயிலுக்கு வந்த அரசனுக்கு, சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர், அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன், தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது, உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரி ராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது நம்பிக்கை. உற்சவர் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம். மிகவும் அருமையான திருத்தலம்.

மூலவர் திருப்பெயர் நீலமேகம். தாயார் பெயர் – கண்ணபுரநாயகி. உற்சவருடைய பெயர் சௌரிராஜப் பெருமாள். இத்திருத்தலத்துத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி என்பதாகும். மூலவர் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கிறார். இப்பெருமானின் திருநாமம் சௌரி என்பது, சௌரி என்னும் இச்சொல்லுக்கு ‘யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன்’ என்பது பொருள் இத்திருத்தலம், 75 சதுர் யுகங்களைக் கொண்டது. அமைவிடம்: இக்கோவில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருக்கண்ணபுரம் என்னும் ஊரில், நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

சைவ திருத்தலம் விளநகர்

நால்வராலும் பாடப்பெற்ற ராஜகோபுரத்துடன் கூடிய அழகிய சிவாலயம் ஒன்று விளநகரில் உள்ளது. சுவாமி பெயர் துறைகாட்டும் வள்ளலார், அம்பாள் பெயர் தோளியம்மை. இத்தல விருட்சம் தர்ப்பை. இத்திருக்கோயிலுக்கு சென்று பிராகாரம் வலம் வரும்போது துர்க்கை சந்நதி அருகில் உள்ள ஸ்தல விருட்சமான தர்ப்பையில் நினைத்த காரியம் வேண்டி முடிச்சு போட்டால் நாம் நினைத்த காரியம் கைகூடும் என்பது சான்றோர் வாக்கு. மயிலாடுதுறை தரங்கை சாலையில் 6 கி.மீ. தூரத்தில் விளநகர் உள்ளது.

ஓய்வெடுக்கும் ராமன்

ராவணனை வதைத்த களைப்பு தீர ஓய்வெடுக்கும் ராமபிரான்தான், வீரராகவராக திருவள்ளூரில் அருள்கிறார் என திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட தலம் இது. மூலவர் வீரராகவன், தாயார் கனகவல்லி எனும் வசுமதியோடு விஜயகோடி விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். நோய்களை தீர்ப்பதில் நிகரற்றவராக வைத்ய வீரராகவராக இத் தலப் பெருமாள் திகழ்கிறார். இங்குள்ள திருக்குளத்தில் சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெல்லம் கரைத்திட நேர்ந்து கொண்டால், அந்நோய்கள் நீங்கி விடுகின்றன.

ஓங்காரேஸ்வரர் (மத்தியபிரதேசம்)

ஓம்காரேஸ்வரர் அழகுமிக்க சுயம்பு லிங்கமாகும். ஓங்கார அமலேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் இதற்குண்டு. நர்மதா நதி தீர்த்தத்தில் அமைந்துள்ள தீவுப்பகுதியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ஓம் எனில் ஆத்மா எனும் ஆன்மிக மந்திரத்தின் சத்தியமான அர்த்தத்தை எடுத்து உணர்த்தி மனித வாழ்வில் ஒளி பெறச் செய்ததால் இப்பெயரால் சிறப்பிக்கப்படுகிறார்.

உழவாரப்படை

உழவாரம் என்பதற்கு மேன்மைப்படுத்தும் இடம் என்பது பொருள். ஆலயங்களையும் இறை  வழிபாட்டுக்கும் உரிய இடங்களையும் தூய்மைப்படுத்தி மேன்மைப் படுத்தும் ஆயுதமாக இருந்ததால் அது உழவாரப் படை எனப்பட்டது. இது முன்புறம் அகன்று (பாதி இலை) இலை போன்றும், அதன்பின் பகுதி நீண்ட கோலுடன் இணைந்து காட்சியளிக்கிறது. (இந்நாளைய தோசைக் கரண்டி போல) இலைப்பகுதியில் சிவலிங்கம் அல்லது நந்தியின் உருவம் அமைந்துள்ளது. ஆலயத்தைத் தூய்மை செய்யும் பணி இதன் பெயரால் உழவாரப்பணி என்றழைக்கப்படுகிறது. இந்த ஆயுதத்தை மலரிட்டு அன்பர்கள் வழிபடுகின்றனர். உழவாரம் என்னும் பெயரில் மதுரையிலிருந்து மாத இதழ் ஒன்றுவெளி வந்து சைவத்தைப் போற்றி வருகிறது.

பெருநகர் வைரவர்

பெருநகரில் எழுந்தருளியிருக்கும் வைரவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். இவர் பிற தலங்களிலுள்ள சேத்திர பாலகர் போன்றவரில்லை. பிரமனின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் தானே வைரவர் கோலத்துடன் தோன்றி அவனுக்குக் காட்சியளித்த நிலையாகும். அதனால் மண்டையோட்டு மாலைகள் மணிமாலைகள் நாய் வாகனம் முதலியவை இன்றிக் காட்சியளிக்கின்றார். சாக்த தந்திரர்கள் சிவபெருமானே வைரவராக இங்கு இருக்கின்றார் என்பர். இவருடைய கணங்களான வேதாளங்களைத் தூண்களில் காண்கிறோம். இவரை வழிபடுவதால் படிப்பில் உண்டாகும் தடைகள் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும்.

மூன்று நிலையில் அருள்

பரத்வாஜ முனிவருக்கும், கந்தர்வப் பெண் ஒருத்திக்கும் பிறந்த குழந்தையை பரமேஸ்வரனும், திருமாலும் பல்லவ மன்னன் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அக்குழந்தைக்கு பரமேஸ்வரன் என பெயரிட்டார் மன்னர். தக்க சமயத்தில் பெருமாள் அந்த பரமேஸ்வரனுக்கு 18 கலைகளை போதித்ததாகவும் அதற்காக இத்தலத்தில் எழுந்த, அமர்ந்த, கிடந்த நிலையில் அருளுவதாக தலபுராணம் கூறுகிறது. பெருமாள் பரமபதநாதன் எனும் பெயரில் தாயார் வைகுந்தவல்லியுடன் முகுந்த விமானத்தில் அருளும் கோயில் இது.

ராதாகிருஷ்ணன்

Related posts

திருச்செந்தூர் முருகன் அருளை பெற வழிபடும் முறை..!!

திரு இந்தளூர் பரிமள ரங்கநாதன்

சிதைவிலும் அழகு