அஞ்சுகிராமம் அருகே ஆதிதிராவிடர்களுக்கான இடுகாடு நிலத்தை அளந்து எல்கை நிர்ணயம்

*10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

நாகர்கோவில் : அஞ்சுகிராமம் பேரூராட்சி 2 வது வார்டுக்குட்பட்ட பரப்புவிளை பகுதியில் 150 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இடுகாடு அமைக்க சுமார் 20 சென்ட் நிலம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்தை தனியார்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது. எனவே இந்த நிலத்தை அளவீடு செய்து எல்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்த பகுதி மக்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையி்ல, பரப்புவிளை பகுதியில் ஆதி திராவிடர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட இடுகாடுக்கான நிலத்தை அளவீடு செய்து எல்கை கல் நடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் கதிர்வேல் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக நாகர்கோவில் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உத்தரவின் பேரில் ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் முருகன் தலைமையில் நில அளவையர்கள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து நேற்று எல்கை நிர்ணயம் செய்தனர்.

இந்த அளவீடு பணி அந்த பகுதி பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், அரசின் கவனத்துக்கு பிரச்சினையை கொண்டு சென்ற ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் கதிர்வேல் ஆகியோருக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் தங்கள் பகுதியில் நிழற்குடை ஒன்றும், அடிபம்பு ஒன்றும் அமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு