சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி இன்று காலை சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் விழா வெகு விமரிசையாக நடந்தது. உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நான்கு வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நடராஜர் கோயிலில் நாளை 18ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது. 19ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 20ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 21ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 22ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 23ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 24ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

26ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணியளவில் சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞான காச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 27ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு