ஆனி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப்பெருமாள்‌ கோயிலில் தெப்ப உற்சவ விழா

திருவள்ளூர்: ஆனி அமாவாசையை முன்னிட்டு திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப்பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோயிலில் அமாவாசைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆண்டுதோறும் ஆனி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனி மாத தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

கோயில் அருகில், ஹிருதாப நாசினி என்ற குளம் உள்ளது. சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் ஆனி மாத முதல் நாள் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதில், உற்சவர் ஸ்ரீவைத்திய வீரராகவப்பெருமாள் தேவி, பூதேவி சமேதராக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளி கோயில் குளத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தெப்ப திருவிழாவில் பெருமாளை தரிசித்தால் நோய் தீரும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.

3 முறை குளத்தை வலம் வந்த பிறகு கோயிலுக்கு வைத்திய வீரராகவப்பெருமாள் சென்றார். ஆனி மாத தெப்பத்திருவிழாவில், திருவள்ளூர் மட்டுமல்லாது பெரியகுப்பம், ஈக்காடு, காக்களூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவப் பெருமாளை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர்கள் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி