தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததால் ஆவேசம்; ஒன்றிய பட்ஜெட்டின் நகலை கிழித்து வீசிய காங். கவுன்சிலர்கள்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: தமிழகத்துக்கு நிதி ஒதுக்காத ஆவேசத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டின் நகலை சென்னை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று காலை ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் கவுன்சிலரும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அப்போது அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கை குறித்து பேசினர்.

அப்போது மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேர் திடீரென எழுந்து நின்று ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காத, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் சிவராஜசேகரன் தனது கையில் வைத்திருந்த ஒன்றிய பட்ஜெட்டின் நகலை கிழித்து எரிந்து வீசினார். அதே போன்று காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த ஒன்றிய பட்ஜெட்டின் நகலை கிழித்தெறிந்து மன்றத்துக்குள் வீசினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது எம்.எஸ்.திரவியம், ”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு திட்டத்துக்கும் ஒரு பைசா கூட ஒதுக்காமல் தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து விட்டது. அவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது