வானவர்களின் பசி தீர்த்த ஸ்வாஹா தேவி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பிரம்மா உலகை படைத்துக் கொண்டிருந்தார். அப்போது தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரை சரணடைந்தார்கள். அவர்களை கண்டு முகமலர்ந்து ஆசி வழங்கினார் பிரம்மா. ‘‘எங்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்த தேவர்கள், பிரம்மனின் பாதம் பணிந்தார்கள்.அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்ற பிரம்ம தேவர், திருமாலை மனதார சரண் புகுந்தார். திருமால் அவர்கள் அனைவர் முன்னேயும் தோன்றினார். வேள்வியில் ரிஷி முனிவர்கள் சேர்க்கும் அவிர்பாகத்தை புசிக்குமாறு தேவர்களை பணித்தார் திருமால். ஆனால் அங்கே தான் சிக்கலே தோன்றியது.

அந்தணர்கள் வேள்வித் தீயில் சேர்க்கும் அவிஸை அக்னியால் எரிக்க முடியவில்லை. எரித்தால் தானே அக்னியால் அந்த அவிஸை தேவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்?. ஆகவே தேவர்களின் பசிப் பிணி தீர்ந்த பாடு இல்லை. ஆகவே அவர்கள் மீண்டும் பிரம்ம தேவனை சென்று வணங்கினார்கள். விஷயம் அறிந்த பிரம்ம தேவர் மீண்டும் நாராயணனை சரணடைந்தார். நாராயணர், பிரம்மனையும் மற்ற தேவர்களையும் ஆதி சக்தியை சரணடைய சொன்னார்.

அவரது சொல்படி அனைவரும் அம்பிகையை வணங்கி நின்றார்கள். அவர்களுக்காக மனம் கனிந்த பராசக்தி, தனது அம்சமாக ஸ்வாஹா தேவியை தோற்றுவித்தாள். ஸ்வாஹா தேவி கருமை நிறத்தவளாகவும் அழகே வடிவானவளாகவும் இருந்தாள். அவளை கண்டு அதிசயித்த பிரம்மனும் தேவர்களும், இந்த ஸ்வாஹா தேவி நிச்சயம் ஆதி சக்தியின் அம்சம் தான் என்று தீர்மானித்தார்கள். பிரம்ம தேவருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக விளங்கியது. ஆகவே அவர் ஸ்வாஹா தேவியின் அருகில் சென்று அவளை வணங்கினார்.

அவரை கண்ட ஸ்வாஹா தேவி என்ன வேண்டும் என்று வினவினாள். ‘‘தேவி! தாங்கள் எரிக்கும் சக்தியை அக்னிக்கு தரவேண்டும். நீங்கள் அவரை கணவனாக அடைய வேண்டும். அதனால் எங்கள் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும்’’ என்று பிரார்த்தித்து கொண்டார். அதை கேட்ட ஸ்வாஹா தேவி அதிர்ந்தாள்.

‘‘பிரம்ம தேவரே! என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? இந்த உலகம் அனைத்தும் அந்த திருமாலால் அல்லவா இயங்குகிறது. நீங்கள், இந்திரன், சங்கரன், அஷ்ட திக் பாலர்கள் என அனைவரும் அவரது ஆணை படி அல்லவா இயங்குகிறீர்கள்? அப்படி இருக்கும் போது, நானும் ஜெகன்னாதரான அவரை தானே அடைய விரும்புவேன்? என்னை நீங்கள் இவ்வாறு கேட்பது தவறு’’ என்று கடிந்து மொழிந்தாள். பிரம்ம தேவருக்கும் அதற்கு பிறகு என்ன சொல்வது என்று விளங்க வில்லை ஆகவே தனது நான்கு தலையையும் குனிந்து கொண்டார். பிறகு ஸ்வாஹா தேவியானவள், மகா விஷ்ணுவை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒற்றைக் காலில் லட்சம் ஆண்டுகள் தவம் செய்தாள்.

அவளது தவத்தால் மனம் உவந்தார் ஸ்ரீமந் நாராயணர். சங்கு சக்கர கதா தாரியாக கருடன் மீது அமர்ந்த படி காட்சி தந்தார். அவரது அற்புத தரிசனத்தை கண்டு, ஆனந்தப் பெருக்கில் ஸ்வாஹா தேவி மூர்ச்சை அடைந்தாள். அவளது அளவற்ற பக்தியால் திருமால் மகிழ்ந்தார். அவளை தூக்கி நிறுத்தினார். வேண்டும் வரம் யாது என்று வினவினார்.

ஆனந்தத்தில், உச்சியில் இருந்த ஸ்வாஹா தேவி, திருமாலை அடைய வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தாள். அதை கேட்ட திருமால் புன்னகை செய்தார். ‘‘தேவி இந்த ஜென்மத்தில் தாங்கள் அக்னியை அடைய வேண்டும் என்பது தான் விதி. அவருக்கு தகிக்கும் சக்தியை கொடுப்பவளாக அவரோடு நீ சேர வேண்டும். பிறகு நான் வராக அவதாரம் எடுக்கும் சமயம் நீ நாக்னிஜிதனுக்கு மகளாக நாக்னிஜிதீயாக அவதரிப்பாய். அப்போது நீ என்னை வந்து சேர்ந்து முக்தி அடையலாம்.’’ என்று வரம் தந்த பகவான் மறைந்தார்.

ஸ்வாஹா தேவியும் விஷ்ணுவின் ஆணை படி, அக்னி தேவனை கரம் பிடித்தாள். அக்னி தேவன் சாம வேதம் மந்திரங்களை ஜெபித்து அம்பிகையை வழிபட்டதன் பலனாக ஸ்வாஹா தேவியை அடைந்து தகிக்கும் சக்தி உடையவனாக ஆனான். அன்று முதல் வேள்வியில் ஸ்வாஹா என்று சொல்லி சேர்க்கப்படும் அவிர்பாகத்தை, ஸ்வாஹா தேவியின் உதவியோடு, தேவர்களிடம் அக்னி பகவான் சேர்த்து வருகிறார். மேல் கண்ட சரிதத்தை மிகவும் அழகாக தேவி பாகவதம் நமக்கு எடுத்துரைக்கிறது.

ஸ்வாஹா தேவியை பூஜிக்காமல் செய்யப்படும் எந்த ஒரு வேள்வியும் வீணாக தான் போகும் என்பது விதி. ஆதி சக்தியே ஸ்வாஹா தேவியின் வடிவாக இருக்கிறாள் என்பதை லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் ‘‘ஸ்வாஹா’’ என்ற நாமம் நமக்கு காட்டிக் கொடுக்கிறது. வானவர்களின் பசி போக்கி மனிதர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் ஸ்வாஹா தேவியை போற்றி வணங்குவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை