ஆந்திர மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் தடுக்க துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தி போலீசார் ஒத்திகை: பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்

திருமலை: ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 13ம்தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. ஆந்திர தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்திருந்தது. வாக்குப்பதிவு நாளில் மாநிலம் முழுவதும் 33 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக சிறப்பு புலனாய்வுக்குழு கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் குழு ஆய்வு செய்து டிஜிபி ஹரீஷ்குமாரிடம் 150 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். வாக்குப்பதிவு நாளில் நடந்த சம்பவம் போன்று வாக்கு எண்ணிக்கை நாளிலும் (ஜூன் 4ம்) வன்முறைகள் நடக்குமோ? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நேற்றுமுன்தினம் மாலை பிரகாசம் மாவட்டத்தில் ேபாலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

அதன்படி பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்றுமுன்தினம் மாலை ஒரு கும்பல் கூடியது. அந்த கும்பல் ஆயுதங்களுடன் வாக்கு எண்ணும் மையம் நோக்கி சென்றது. அப்போது 10க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் போலீசார் அங்கு குவிந்தனர். அப்போது கலவர கும்பல் திடீரென பஸ் நிலைய வளாகத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று வாகனங்களில் ஏற்றினர். இருப்பினும் கலவரக்காரர்கள் போலீசாரை மீறி வாக்கு எண்ணும் மையம் அருகே முன்னேறி சென்றனர்.

இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அதன்பின்னர் மீண்டும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த ஒத்திகை சுமார் 45 நிமிட நேரம் நடந்தது. இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம் நடந்து முடிந்தபிறகு இவை அனைத்தும் போலீசாரிடம் ஒத்திகை என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு