ஆந்திராவில் அதிகாலை பயங்கரம் செம்மரக்கட்டை கடத்தலை தடுத்த போலீஸ்காரர் மீது கார் ஏற்றி கொலை: திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குன்றேவாரிபள்ளி சந்திப்பு அருகே வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் நேற்று அதிகாலை ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து கர்நாடக பதிவெண் கொண்ட கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிரடிப்படையினர் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினர் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இந்த சம்பவத்தில் அதிரடிப்படை போலீஸ்காரர் கணேஷ்(30) பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிரடிப்படை போலீசார், அந்த காரை விரட்டிச்சென்றனர். இதனால் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்த 3 பேர் தப்பியோடினர்.

காரில் பதுக்கி கடத்திய செம்மரக்கட்டைகள் மீது அமர்ந்து சென்ற 2 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் காரை சுற்றிவளைத்தனர். பின்னர் அதில் இருந்த 2 பேரை கைது செய்தனர். அந்த காரில் 7 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்