ஆந்திராவில் ஏடிஎம்களில் நிரப்ப வேண்டிய ரூ.2.20 கோடி பணத்துடன் தலைமறைவான ஊழியர்: அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை அடிப்பு, 12 மணிநேரத்தில் பிடித்து கைது செய்த போலீசார்

திருமலை: ஆந்திராவில் ஏடிஎம்களில் நிரப்ப வேண்டிய ரூ.2.20 கோடி பணத்துடன் தலைமறைவான ஒப்பந்த ஊழியரை 12 மணிநேரத்தில் பிடித்து போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் தனியார் நிறுவன ஊழியராக வாசம்ஷெட்டி அசோக் பணி புரிந்து வருகிறார். இவர் தினமும் வங்கியில் இருந்து பணம் பெற்று ஏடிஎம் மையங்களில் நிரப்புவது வழக்கம். அவ்வாறு நேற்று வாசம்ஷெட்டி அசோக் எச்.டி.எப்.சி. தானவாயிபேட்டா கிளையில் இருந்து வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வேண்டிய ரூ.2 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

அப்போது அங்கு வாகனத்துடன் காத்திருந்த பாதுகாவலர்களை ஏமாற்றி திடீரென பணத்துடன் தலைமறைவானார். நீண்ட நேரம் ஆகியும் அசோக் வராததால் வங்கியின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அசோக் பணத்துடன் எப்போதே சென்றதாக வங்கி ஊழியர்கள் கூறினர். பணத்துடன் அசோக் தலைமறைவானது தெரியவந்தது. இதனையடுத்து தனியார் நிறுவன மேனேஜ்மென்ட் நிறுவனத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை வைத்து ராஜமுந்திரி முதலாவது நகர காவல் நிலைய போலீசார் 6 தனிப்படை அமைத்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அசோக் பணத்துடன் காரில் தப்பி சென்றதை கண்டுபிடித்தனர். ஆனால் போலீசார் காரை கண்டுபிடித்து விடுவார்கள் என அறிந்த அசோக் காரை அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் கொத்தப்பேட்டையில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்நிலையில் அசோக் சொந்த ஊரான கபிலேஸ்வரம் மண்டலம் மாச்சர்லா மிட்டாவில் இரவு முழுவதும் போலீசார் காத்திருந்தனர்.

அப்போது யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருக்க அசோக் மொட்டையடித்துக் கொண்டு வீட்டில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். நேற்று அதிகாலையில் அசோக் வீட்டிற்குள் சென்று கைது செய்தனர். பின்னர் கொள்ளையடித்த ரூ.2.20 கோடியே 50 ஆயிரம் பணத்தை காருடன் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாரை கிழக்கு கோதாவரி மாவட்ட எஸ்பி நரசிம்மமூர்த்தி பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

Related posts

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்தின் மொயின் அலி