ஆந்திராவில் இருந்து பைக்கில் கடத்தி வந்த 7.5 கிலோ கஞ்சா பறிமுதல்: காயலான் கடை உரிமையாளர் கைது

ஆலந்தூர்: தி.நகரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில், பைக்கில் கடத்தி வரப்பட்ட 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காயலான் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில், பரங்கிமலை மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை ஆய்வாளர் சிவா ஆனந்த் தலைமையிலான போலீசார், வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. அவ்வழியாக பைக்கில் வந்தவர், போலீசாரை கண்டதும் பைக்கை வேகமாக ஓட்டி தப்பிச்செல்ல முயன்றார்.

அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், கஞ்சாவை பெரிய பொட்டலங்களாக மடித்து பையில் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (48) என்பதும், பழைய பேப்பர், இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் இவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தி.நகர், கோயம்பேடு, திருவான்மியூர் போன்ற பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து