சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்புலி மர்மச்சாவு: வனத்துறை விசாரணை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் உள்ளன. புலிகளை பாதுகாக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், அவ்வப்போது புலிகள் இறப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகம் கொத்தமங்கலம் வனப்பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வறண்ட நீரோடையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் வனவிலங்குகள் ஏதாவது இறந்து கிடக்கிறதா? என தேடி பார்த்தனர். அப்போது உடல் அழுகிய நிலையில் புலி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜ்குமார் அறிவுரையின் பேரில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேஷ் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம், புலியின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டார். இதில் உயிரிழந்த புலி 5 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரிய வந்தது. உடல் அழுகிய நிலையில் உள்ளதால் இறப்புக்கான காரணத்தை அறிய புலியின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஐதராபாத் உயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகளுக்கு பின்பு புலி இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புலியின் உடல் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீ மூட்டி எரிக்கப்பட்டது.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு