சின்னமனூர் அருகே ரேஷன் கடையை உடைத்த ‘அரிசிக்கொம்பன்’ யானை: மணலாறு மலைக்கிராம மக்கள் பீதி

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் பேரூராட்சி மணலாரு மலைக்கிராமத்தில் அரிசிக்கொம்பன் யானை முகாமிட்டு நேற்று இரவு ரேஷன் கடை கதவை உடைத்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், யானை இரங்கல், மூலத்துறை, தோண்டி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்த அரிசிக் கொம்பன் யானை, கடந்த 2 ஆண்டுகளில் 12 பேரை கொன்றுள்ளது. இந்த யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கேரள வனத்துறை மற்றும் போலீசார் 5 கும்கி யானைகளுடன் 8 முறை மயக்க மருந்து செலுத்தி, அரிசிக்கொம்பனை பிடித்து, தமிழகத்தின் எல்லை அருகே உள்ள தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் விடுவித்தனர்.

இந்நிலையில், அரிசிக் கொம்பன் யானை கடந்த 6ம் தேதி தேக்கடி வழியாக தமிழக எல்லையான இரவங்கலாறு மலைப்பகுதிக்குள் நுழைந்தது. மணலாறு அணை பகுதிகளை சுற்றி ஹைவேவிஸ், மேகமலை, ஆனந்த எஸ்டேட், சில்வர் குடுசு, 10வது கொண்டை ஊசி வளைவு ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்தது. நேற்று இரவு வெண்ணியாறு எஸ்டேட் பகுதியில் புகுந்து, அங்குள்ள கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை தகர கதவை உடைத்தது. மற்றொரு கதவை உடைக்க முடியாததால், அரிசி மூட்டைகள் தப்பின. தொடர்ந்து அப்பகுதியில் அரிசிக்கொம்பன் முகாமிட்டிருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், சின்னமனூர் அருகே உள்ள தென்பழனி மலையடி வாரத்தில் கடந்த 9 நாட்களாக வனத்துறை, போலீசார் என 40 பேர் கொண்ட குழுவினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் யானை கழுத்தில் ரேடியோ காலர் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Related posts

கிண்டலடித்த தன்கர் டென்ஷனான கார்கே: வெடித்தது வார்த்தை போர்

மக்களவையில் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பேச்சுக்களை மீண்டும் சேர்க்க வேண்டும்: சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

காங்கிரஸ் அல்லாதவர், டீ விற்றவர் 3ம் முறை பிரதமரானதால் எதிர்க்கட்சிகளுக்கு வருத்தம்: பாஜ எம்பிக்களிடம் மோடி பேச்சு