படை திரண்ட பட்டாளம்

திமுக இளைஞரணி மாநாடு எதிர்பார்த்த படியே தமிழ்நாடு மக்களின் உரிமைகள் மீட்பதற்கான எழுச்சி மாநாடாக நடந்து முடிந்துள்ளது. சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இளைஞர்களின் எழுச்சியோடு, வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு நேற்று நடந்தது. கோட்டை போல முகப்பு வடிவம், திமுக வரலாற்றை விளக்கிடும் வண்ண ஓவியங்கள், திரும்பிய பக்கமெல்லாம் எல்இடி திரைகள், கொள்கை முழக்கங்கள் என தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இளைஞரணி மாநாடு நிறைவு பெற்றுவிட்டது. திமுக மாநாடு என்றாலே அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இந்திய அளவில் விவாதிக்கப்படும்.

அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மொத்தம் 25 தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றி தந்தார். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இன்று திகழும் நிலையில், மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்க நகர பேருந்துகளில் கட்டணமில்லாத பயணம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், அரிசிஅட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு என நல்ல பல திட்டங்களை தமிழகத்திற்கு அள்ளி தந்த முதல்வருக்கு இளைஞரணி மாநாட்டில் நன்றி தெரிவித்து தனித்தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மதுரை அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என கலைஞர் வழியில் அவரது புகழை போற்றி வரும் திமுக, தொடர்ந்து அவரது வழியில் மொழி, இன உணர்வோடு பயணத்தை தொடர இளைஞரணி மாநாட்டில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக இன்று சென்னை உருவாகி வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி, கேலோ இந்தியா போட்டிகள் ஆகியவற்றை திறம்பட நடத்தி இளைய சமுதாயத்தின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசுக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கவும் தயக்கம் காட்டவில்லை. தேசிய கல்வி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றே ஆக வேண்டியதன் அவசியம், ஒன்றிய பாஜ அரசின் பழிவாங்கும் அரசியல் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கேட்டும், ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க கோரியும் தீர்மானங்கள் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வியை காவிமயமாக்க பாஜ அரசு முயற்சித்து வரும் நிலையில், முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது.

அதில் ஒன்றிய பாஜவின் சர்வாதிகார போக்கை வீழ்த்த இம்மாநாடு சூளுரைத்தது. மாநாட்டில் படை திரண்ட பட்டாளமாய் பங்கேற்ற லட்சக்கணக்கான இளைஞர்களை பார்க்கும்போது, பாசிச பாஜ ஆட்சியை வீழ்த்த திமுக இளைஞரணி, முன்கள போர்வீரர்களாக களம் காண்பது தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை இந்த பட்டாளம் பறித்து தரும் என்ற நம்பிக்கையும் மிளர்கிறது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!