பணம் குவிக்கும் பந்தல் காய்கறிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெய்யார் ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விற்றுவிட்டார். சக்திவேல், தேவராஜ் என்ற 2 மகன்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். மற்றொரு மகனான பாண்டுரங்கன் விவசாயத்தில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இதனால் தனது தந்தையுடன் இணைந்து, தெய்யார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது 5 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வருகிறார். கணினி பட்டதாரியான இவர் இப்போது காய்கறி சாகுபடியில் கலக்கலான லாபம் பார்க்கிறார். குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கர் நிலத்தில் பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், பாகற்காய் என்று கொடியில் படரும் காய்கறிகளை பயிர் செய்து வருகிறார். ஒருமுறை புடலங்காய் பயிர் செய்தால் அடுத்த முறை பீர்க்கங்காய், அடுத்த முறை பாகற்காய் என சுழற்சி முறையில் செய்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் பாண்டுரங்கனையும், அவரது தந்தையார் ஏழுமலையையும் சந்தித்தோம்.

“ நானும், அப்பாவும் சேர்ந்து காய்கறி சாகுபடி செய்கிறோம். நிலத்திற்கு தரமான உரங்களை இட்டு வளப்படுத்தி வைத்திருக்கிறோம். அதில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் தண்ணீரை சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக 5 ஏக்கருக்கு பயன்படுத்தி வருகிறோம். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதால் மருந்துகளை சொட்டுநீர்ப் பாசன குழாயில் கலந்து விடுகிறோம். இதனால் மருந்து தெளிக்கும் வேலை மிச்சமாகிறது. 45 நாட்களில் பீர்க்கங்காய், புடலங்காய்களை அறுவடை செய்யத் தொடங்குவோம். 60 நாட்கள் வரை கொடி அதிகம் ஓடாத நிலையில் மகசூல் அதிக அளவிற்கு கிடைக்கும். அதனைத் தொடர்ந்து கொடி படர்ந்து அதில் கிடைக்கும் மகசூல் அதிகமாக இருந்தாலும் எடை குறைவாகவே இருக்கும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு புதிதாக கொடி பந்தல் ஏற்படுத்த ₹1.25 லட்சம் வரை செலவாகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த அடுத்த விதைகள் நடுவதற்கு ₹50 ஆயிரம் வரை
செலவாகிறது. ஒரு ஏக்கர் பீர்க்கங்காய் பயிர் செய்தால் ₹5 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். செலவு போக ₹3 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.

ஒரு முறை மூங்கில் கம்பால் பந்தல் அமைத்தால் 7 வருடம் வரை அந்த கம்புகள் தாங்கும். முதல் முறை கம்புகளை நட்டு பந்தல் அமைத்து பயிர் செய்தால் 6 மாதத்தில் அறுவடை முடிந்துவிடும். அப்போது நடுவில் உள்ள கம்புகளை எடுத்துவிட்டு, உயரமான கம்புகளைக் கொண்டு பந்தலை உயர்த்துவோம். பின்னர் டிராக்டர் மூலமாக ஏர் உழுது மண்ைண பக்குவப்படுத்தி அடுத்த காய்கறிக்கு உடனடியாக தயார் செய்வோம். எந்த காய்கறியையும் தொடர்ச்சியாக பயிர் செய்வது இல்லை. இந்த முறை பீர்க்கங்காய், அடுத்த 6 மாத்திற்கு பிறகு புடலங்காய், அடுத்து சுரைக்காய், பாகற்காய் என மாற்றி மாற்றி விவசாயம் செய்வதால் ஆர்வமாக இதை செய்கிறோம். ஒரு பயிர் செய்தால் சலிப்பு ஏற்படும். மாற்றி, மாற்றி செய்யும்போது மனதுக்கு ஒரு புத்துணர்சி ஏற்படுகிறது. வேளாண்மை பொறியியல் பட்டதாரியான தர்மபுரியை சேர்ந்த செல்வம் என்பவரிடம் ஆலோசனை பெற்று மருந்து மற்றும் மீன் அமிலம், பஞ்சகவ்யம் உள்ளிட்டவைகள் பயன்படுத்துவதால் பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவாக இருக்கிறது. கொடி வகை காய்கறிகளை பயிர் செய்தால் செலவீனம் குறைவாகிறது. மேலும் கத்தரிக்காய், மிளகாய் போன்ற செடி வகை காய்கறிகளை பயிர் செய்வதால் பூச்சிக்கொல்லிக்காக அதிக செலவீனம் செய்ய நேரிடும். ஆனால் கொடி வகைகளில் அது போன்ற செலவீனம் மிகவும் குறைவு.

தற்போது பீர்க்கங்காய் பயிர் செய்து வருகிறேன். ஒரு ஏக்கருக்கு 12 டன் வரை பீர்க்கங்காய் அறுவடை செய்கிறேன். கிலோ ₹35க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொள்முதல் செய்கிறார்கள். வியாபாரிக்கான வாகனத்தில் தினந்தோறும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கொடுத்துள்ள டிரேயில் அடுக்கி வைத்தால் அதனை அவர்கள் கொண்டு வரும் இயந்திர தராசு மூலமாக துல்லியமாக எடை போட்டு சீட்டு வழங்கி விடுவார்கள். இதில் கிலோ ஒன்றுக்கு வண்டி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி, கமிஷன் உட்பட ₹5 வரை செலவாகும். மீதம் ₹30 கிலோ ஒன்றுக்கு கிடைக்கும். இதனால் 12 டன் பீர்க்கங்காய்க்கு ₹5 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.செலவீனங்கள் போக குறைந்த பட்சம் ₹3 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். நெல், கரும்பு பயிர் செய்தால் 3 மாதங்களுக்கும் வருடத்திற்கு ஒரு முறைதான் பணம் பார்க்க முடியும். ஆனால் பணப்பயிராக காய்கறி பயிர் செய்தால் தினந்தோறும் பணம் தரும்’’ என மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.
தொடர்புக்கு:
ஏ.பாண்டுரங்கன்: 63798 24980.

Related posts

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு