எண்ணூர் பகுதியில் அமோனியா கசிவு விவகாரம் யார் காரணமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை: தேசிய பசுமை தீர்ப்பாயம் உறுதி

சென்னை: சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை எடுத்தது. இந்த விசாரணை நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழக்கறிஞர் வாதிடுகையில், கோரமண்டல் நிறுவனம் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. அதன் கட்டமைப்புகள் குறித்து கடல்சார் வாரியம் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்தார். கோரமண்டல் நிறுவனம் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், 8 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நீதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பாய உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாகவே நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாசுக்கட்டுபாடு வாரியம் அவ்வப்போது நிறுவனத்தில் ஆய்வு நடத்தியதா, ஏன் அதை செய்யவில்லை. அந்த பகுதி மக்களுக்கு வாயு கசிவின் விளைவு தெரியுமா, மக்கள் கடல் பகுதியில் இருந்தார்களா அல்லது வீடுகளில் இருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதா என தொடர் கேள்வி எழுப்பினர். கோரமண்டல் நிறுவனம் 5 மடங்கு அதிகமாக அமோனியாவை சேர்த்து வைத்ததே காரணம் என மாசுக்கட்டுப்பாடு வாரியம் குற்றம் சுமத்துகிறது.

அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். விபத்து நடைபெறுவது இயற்கை, விபத்து நடந்தது என்பதற்காக நிறுவனத்தை மூடிவிட முடியாது. ஆனால் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொழில்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம். 40 ஆண்டுகள் குழாய்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், தற்போது அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அமோனியா வாயு கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என தெரிவித்து, கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

பழைய குற்றால அருவியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்க தற்காலிக அனுமதி

3 புதிய குற்றவியல் சட்டங்களும் 90- 99 சதவீதம் பழைய குற்றவியல் சட்டங்களின் கட், காபி, பேஸ்ட்தான் : ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 12 விமானங்கள் முன்னறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி