Monday, September 9, 2024
Home » அம்மன் ஆலயங்களில் வினோதமான நேர்த்திக்கடன்கள், வழிபாடுகள், சடங்குகள்

அம்மன் ஆலயங்களில் வினோதமான நேர்த்திக்கடன்கள், வழிபாடுகள், சடங்குகள்

by Porselvi

ஆடி மாதம் என்றாலே அம்மன் நினைவு வந்துவிடும். ஆடி மாதம் கடக மாதம். சந்திரனுக்கு உரிய மாதம். சந்திரன் தாயைச் சுட்டும் கிரகம். எல்லோரும் தங்கள் தாயாகக் கருதுவது அம்மனைத் தான். எனவே சந்திரன் அம்மனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இந்த மாதத்தில் தந்தை கிரகமாகிய சூரியன், தாய்க் கிரகமாகிய சந்திரனின் இல்லத்தில் பிரவேசிக்கிறார். சக்தியும் சிவனும் ஒன்றாகி நின்ற இம்மாதத்தில், சக்தியின் அம்சம் தூக்கலாக அருள் ஆட்சி செய்கிறது. நம் சமய மரபில் தாய்மைக்கு பெருமதிப்பு உண்டு. அம்மனுக்கு தனி ஆலயங்கள் உண்டு. ஆண் தெய்வங்களுக்குத் தனிக்கோயில் இருந்தாலும், அக்கோயிலிலும் தாய்த் தெய்வத்திற்கு தனி இடம் உண்டு. சைவ ஆலயங்களும் வைணவ ஆலயங்களும் தாயின் பெயர்கொண்டே அழைக்கப்படுகின்றன. சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் என்றும், புண்டரீகவல்லி சமேத கோவிந்தராஜபெருமாள் என்றும் அழைக்கப் படும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது. ஆனால், அம்மன் கோயிலை அழைக்கின்ற போது, நேரடியாக காளியம்மன், மாரியம்மன்,செல்லியம்மன் என்று அம்மன் பெயரை மட்டும் சொல்லியே அக்கோயிலைக் குறிப்பிடுவர்.

தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் இருந்தாலும் கூட, ஒவ்வொரு கோயிலிலும், ஆண்டில் ஏதேனும் ஓரிரு நாட்களோ, அல்லது சில நாட்களோ மட்டும் விழாக்கள் நடைபெறும். ஆனால் ஆடி மாதத்தில் மட்டும் தமிழகத்தின் பெரும் கோயில்களிலும், கிராமத்து கோயில்களிலும் ஆடிப் பெருவிழா, மாதம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும். முக்கியமாக கிராம மக்கள், மன மகிழ்ச்சியோடு, தங்கள் சொந்த வீட்டு விழாவாக தங்கள் தங்கள் ஊர்களில் உள்ள ஆலயங்களில் முழு ஈடுபாட்டோடு கொண்டாடுவர். இச்சிறப்பு வேறு எந்த மாதத் திருவிழாவுக்குமில்லை. முளைப்பாரி, செடல்எடுத்தல், கரகம், தீச்சட்டி ஏந்துதல், மாவிளக்கு, பால்குடம், பூக்குழி என எத்தனை எத்தனை விதமோ, அத்தனை அத்தனை கோலாகலம் ஆடியில் நடக்கும். கிராமக் கோயில்களில், எளிய மக்கள், தாங்கள் தொன்று தொட்டு பின் பற்றி வந்த மரபை கொஞ்சமும் மாற்றாமல் உற்சாகமாகக் கொண்டாடுவர்.தாங்கள் உண்ணும் எளிய உணவையே அம்மனுக்கு வைத்துப் படைப்பர். தங்களுக்குத் தெரிந்த பாடல்களையே தாலாட்டு, ஒப்பாரி என்று விதம்விதமாக பாடுவர். எந்த ஆகம விதிகளும். அந்நிய மொழிகளும் அவர்கள் ஈடுபாட்டிலும், வழிபாட்டிலும் குறிக்கிடுவதில்லை. அம்மனை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக, தங்கள் தாயாக, மகளாக, தங்களுக்குத் துணை நிற்கும் காவல் தெய்வமாகக் கருதுகின்ற அந்தப் பிணைப்பு ஆடிமாத அம்மன் திருவிழாவில் துடிப்பாக இருக்கும். அதுவே இவ்விழாக்களில் சிறப்பாகவும் இருக்கும்.

எத்தனை அம்மன்கள்? எத்தனை வழிபாடுகள்? எத்தனை விதமான நேர்த்திக்கடன்கள்? அதில் சிலவற்றை ஒரு தொகுப்பாகக் காணலாம்.

மருதாணி பூசிக்கொள்ளும் மதன மதுரவல்லி

மதுரை மேலமாசி வீதியில் மதன கோபால சுவாமி ஆலயத்தில் உள்ள தாயாரின் பெயர் மதன மதுரவல்லி. அமர்ந்த கோலத்தில் அழகாகக் காட்சி தரும் இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் ராகு கேது மற்றும் சுக்கிர தோஷங்கள் விலகும். மருதாணி அரைத்து தாயார் திருக்கரங்களில் நேர்த்திக் கடனாகப் பூசுகின்றனர்.

திருமணம் முடிந்தவுடன் தாலி காணிக்கை

சீர்காழிக்குப் பக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தில்லைவிடங்கன் எனும் திருத்தலம். தேவார மூவரில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை பிறந்த ஊர். மிகப்பழமையான இத்திருத்தலத்தில் விடங்கேஸ்வரன் காட்சி தருகின்றார். அம்மனின் திருநாமம் தில்லைநாயகி. இந்த அம்மன் திருமணத் தடைகளை நீக்கி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்தும் வரத்தைத் தருகின்றாள்.திருமணத்தடை உள்ளவர்கள் இங்கே வந்து வழிபடுகின்றனர். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளாக வந்து தாலியைக் காணிக்கையாக அளிக்கின்றனர்.

கால்பந்து விளையாட்டு காணும் ராஜராஜேஸ்வரி

பொதுவாகவே தெய்வ வடிவங்கள் கற்களாலும் உலோகங்களாலும் அமைக்கப்படும். ஆனால் கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு அருகில் ‘‘பொலவி’’ என்னும் ஊரில் ராஜராஜேஸ்வரி திருத்தலம் இருக்கிறது. இங்கு உள்ள ராஜராஜேஸ்வரி திருவுருவம் களிமண்ணால் செய்யப்பட்டு அற்புதமாக காட்சி தரும். இந்த ஆலயத்தின் சிறப்பு “பொலவி செண்டு” எனப்படும் கால்பந்து விளையாட்டு. இங்கு நடக்கும் உற்சவங்கள் எல்லாமே உப தெய்வங்களுக்குத்தான் நடைபெறுகிறது.

ராகு கேது தோஷங்கள் நீக்கும் கல்யாணி கதம்ப வனவாசி

கல்யாணி கதம்ப வனவாசி இது ஒரு அம்மனின் பெயர். சிதம்பரம் வீரபத்திரர் சாமி ஆலயத்தில் காட்சி தரும் இந்த அம்மன் மிக விசேஷமானப் பலன்களைத் தரக்கூடியவர். சந்திரனும் சூரியனும் இணைகின்ற அம்மாவாசை நாளில் மிகச் சிறப்பான பூஜைகள் நடைபெறும். மஞ்சள்புடவை சாற்றி வழிபட, திருமணத் தடைகள் விலகும். நாக பீடத்தோடு அம்மன் இருப்பதால் ராகு கேது தோஷங்கள் நீங்கும்.

பெண்களின் வேண்டுதலை நிறைவேற்றும் ஞானப்பூங்கோதை

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மாரப்பாளையம் என்கின்ற ஊரிலுள்ள அம்மன் மிக விசேஷம். வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரங்களோடு காட்சி தருவார். பெண்கள் தங்களின் எல்லாக் கஷ்டங்களுக்கும் தீர்வு காண இக்கோயிலில் வெள்ளிக்கிழமை திரளாகக் கூடுவார்கள்.

பில்லி சூனியம் நீக்கும் வசன குழி

சங்கரன்கோயில் கோமதி அம்மன் மிகப் பிரபலமான கோயில். ஆடித்தபசு இங்கே மிகவும் பிரசித்தம். சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணர்களாகக் காட்சி தரும் தலம். இங்கே உள்ள பல சிறப்புகளில் ஒன்று வசனக் குழி பள்ளம். இது தெய்வீக சக்தி வாய்ந்தது. பேய், பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, இந்த இடத்தில் பூஜை செய்வதால், சீக்கிரம் குணம் அடைகிறார்கள். இது தவிர குழந்தைகளைத் தத்து கொடுக்கும் சடங்கு இவ்வாலயத்தில் மிகவும் சிறப்பு.

ஆவாரம் செடிக்கு அம்மன் பூஜை

கோவை சாய்பாபா காலனியில் இருக்கிறது ராமலிங்க சௌடேஸ்வரி திருக்கோயில். இங்கு நடைபெறும் திருவிழாவில், ‘‘கத்தி போடும் திருவிழா’’ முக்கியமானது. யாக பூஜை செய்து, வெள்ளிக் கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்வார்கள். பிறகு யானை மீது கலசத்தை வைத்து கோயிலுக்கு வருவர். இளைஞர்களும் பெரியோர்களும் அம்மனை நினைத்துக் கொண்டு. ஆவேசமாக தங்கள் உடம்பில் கத்தி போட்டுக்கொள்வார்கள். இந்த விழா ஆரம்பிப்பதற்கு முன் ஆவாரம் செடிக்குக் காப்பு கட்டுவார்கள். சுயம்வர பார்வதி பூஜை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

மலை மலையாக அன்னதானம்

தென்காசிக்கு அருகில் செங்கோட்டையில் உள்ளது வண்டி மறிச்சி அம்மன். ஒரு குழந்தையாக வந்து திடீரென்று மாயமாக மறைந்து, மறைந்த இடத்தில் அம்மனாகக் காட்சிதந்த அற்புதம் இங்கே நடந்தது. இங்கே பல விழாக்கள் நடைபெற்றாலும், நவராத்திரியில் நடைபெறும் அன்ன தான விழா மிகவும் பிரசித்தம். மலை மலையாக அன்னம் வடித்து, வருவோர் அத்தனை பேருக்கும் வழங்குவார்கள்.

சங்கு சக்கரம் தாங்கிய அம்மன்

பொதுவாக மகாவிஷ்ணுவிடம்தான் சங்கு சக்கரங்கள் இருக்கும். ஆனால் கும்பகோணம்-காரைக்கால் மார்க்கத்தில் இலந்துறை என்னும் ஊரில் உள்ள அபிராமி அம்மனுக்கு அங்குள்ள பெருமாள் சங்கு சக்கரங்களை தந்துவிட்டார். அதனால் அம்மன் கையில் சங்கு சக்கரங்கள் இருக்கும். பெருமாள் வெறும் துளசி மாலையுடன் இருப்பார். இத்தலம் வியாசரால் பூஜிக்கப்பட்ட தலம்.

கரும்புத் தூளிப் பிரார்த்தனை

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் எத்தனையோ பிரார்த்தனைகள் உண்டு. அதில் ஒன்று கரும்புத் தூளி பிரார்த்தனை. குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வேண்டிக் கொண்டு குழந்தைப்பேறு பெறுகின்றனர். அப்படி பெற்றவர்கள், சீமந்தத்தின் போது அளிக்கப்பட்ட, சீமந்தப் புடவை வேஷ்டியை பத்திரமாக வைத்திருந்து, குழந்தை பிறந்த ஆறாவது மாதம், மஞ்சளில் நனைத்து, கரும்பு தொட்டில் செய்து குழந்தையைக் கிடத்தி, தந்தை முன்னும் தாய் பின்னுமாக மூன்று முறை வலம் வருகின்றனர்.

அம்மன் கோயிலில் ஒரு திவ்ய தேசம்

வைணவ திவ்ய தேசங்கள்-108. அந்த 108ல் ஒரு பெருமாள், தனிக்கோயிலாக இல்லாமல், அம்மன் கோயிலுக்கு உள்ளேயே இருக்கிறார். அப்படி உள்ள அம்மன் கோயில் காமாட்சி அம்மன் கோயில். அங்கே உள்ள பெருமாளுக்கு கள்வர் என்ற திருநாமம். திருமங்கையாழ்வார் இப்பெருமாளைக் குறித்து பாடி இருக்கிறார். இந்த அம்மன் கோயிலில் முக்கியமான விசேஷம் நவாவரண பூஜை.

குமரி அம்மனுக்கு குருதி பூஜை

கன்னியாகுமரியில் காட்சி தருகின்ற குமரி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. ஒரு காலத்தில் இந்த அம்மனுக்கு மிருகத்தை பலியிட்டு அதன் ரத்தத்தை பூஜை பொருளாகப் பயன்படுத்தினர். ஆனால் இப்பொழுது அப்படிப்பட்ட வழிபாடுகள் இல்லை. ஆயினும் அதன் நினைவாக, மஞ்சள் நீரில் சுண்ணாம்பு கலந்து, சிவப்பு வண்ணமாக்கி, குருதி பூஜை நடத்துகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வேண்டிக் கொண்டு கன்யா பூஜை நடத்தினால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

முப்பெரும் தேவியர் ஒன்றாகக் காட்சி தரும் கோயில்

திருச்சிக்கு அருகே திருவானைக்கோயில் பிரசித்தமானது என்பது உங்களுக்குத் தெரியும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி மீது அலாதியான பக்தி மிக்கவர் காஞ்சி பெரியவர். அக்காலத்தில் அவர் திக்விஜயம் செய்யப் புறப்பட்டபோது, தரிசித்த முதல் கோயில் இந்தக் கோயில்தான். இக்கோயிலில் நூத்தி எட்டு இடங் களில் பிள்ளையார் திருவுருவம் இருக்கிறது. அகிலாண்டேஸ்வரி அம்மன் மீது பாடலை இயற்றாத பக்தர்களே இல்லை. காளமேகப் புலவர் முதற்கொண்டு கவிஞர் வாலி வரை, தங்களுக்குப் புலமை தந்ததாகக் கொண்டாடுகிறார்கள். காலையில் மகாலட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், காட்சிதரும் அகிலாண்டேஸ்வரி, மாலையில் சரஸ்வதியாகக் காட்சித் தருகின்றார். காலை முதல் மாலை வரை பலவண்ண ஆடைகள் அலங்காரத்தில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி, இரவில் எப்பொழுதும் வெண்மையான ஆடையை உடுத்தி காட்சி தருவது
இவ்வாலயத்தின் சிறப்பு.

பக்தர்களை முறத்தால் அடிக்கும் விழா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பிரம்ம தேசத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோயில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மன் வழிபட்டகோயில். இக்கோயிலில் நடைபெறும் ஆண்டு விழாவில் திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், மங்கள முனிக்கு சாதம் ஊட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வு என்ன தெரியுமா? தீ மிதி திருவிழாவுக்கு முன் ஒரு சாங்கியமாக, பக்தர்களை முறத்தால் அடிக்கும் விழா தான். முறத்தால் அடி வாங்கினால் பேய், பில்லி சூனியம் பயம் தெளியும், நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

உடலில் சேறு பூசும் திருவிழா

வடமதுரை அருகே அய்யலுார் தீத்தாகிழவனுாரில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் உண்டு. இங்கு ஆண்டு விழா பங்குனியில் நடைபெறும். பூக்குழி இறங்குதல், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடக்கும். நிறைவு நாளில் வினோத நேர்த்திக்கடன் வழிபாடாக பலர் உடலில் சேறு பூசி, முகத்தில் கரி பூசி, மண் கலயத்தில் பழைய சோறு வைத்து கொண்டு கோயில் முன்பு அமர்வர். உறவினர்கள் அவர்களை விளக்குமாற்றால் அடித்தும், பழைய சாதத்தை உடலில் ஊற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துவர். பின்னர் கோயில் குளத்தில் நீராடி மேளதாளம் முழங்க அம்மனை அழைத்து செல்வர். வினோத வழிபாடு மூலம் உறவுகள் மேம்படும். மழை வளம் பெருகும். நோயில்லாத வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மாமன்மார்கள், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்து நேர்த்திக்கடன்

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவில் முதல் இரண்டு நாட்கள் பொங்கல் வழிபாடு, முளைப்பாரி, தீச்சட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். கடைசி நாளில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய மாமன்மார்கள், மைத்துனர்களை துடைப்பத்தால் அடித்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

கடிகாரம் கட்டிக்கொள்ளும் அம்மன்

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் என்கின்ற ஊரில் அருள் தருகின்ற அம்மன் திருநாமம் பரமகல்யாணி. இங்கு ஒரு விசேஷமான நேர்த்திக்கடன். கருவரைக்கு பக்கத்தில் ஒரு உரலும் உலக்கையும் மஞ்சளும் வைக்கப்பட்டிருக்கும். திருமண வரம் வேண்டி வருபவர்கள், அந்த மஞ்சளை இடித்து பூசிக்கொள்ள வேண்டும். இன்னுமொரு விசேஷம், பண்டிகைக் காலங்களில் அம்மன் அழகான தங்கக் கடிகாரம் கையில் கட்டிக்கொள்கின்றாள்.

பனை மரத்தில் மாங்கல்ய சரடு

சென்னை வாலாஜா சாலையில், ஒரகடம் அருகே எழுச்சூர் என்கிற கிராமத்தில், நல்லிணக்க நாதர் கோயில் உள்ளது. இங்குள்ள அம்மனின் பெயர் தெய்வ நாயகி. இங்கே பெண்கள் நேர்த்திக்கடனாக பனை மரத்தில் மாங்கல்ய சரடு கட்டுகின்றனர் குழந்தை வரம் வேண்டுபவர்கள், பொம்மைத் தொட்டிலைக் கட்டி வழிபடுகின்றனர்.

நோய் குணமானால் தாலி காணிக்கை

கும்பகோணம் நாகேஸ்வரர் கீழவீதியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ராகுகால காளிகா பரமேஸ்வரி மிகவும் விசேஷம். கோயிலில் பௌர்ணமி பூஜை மிகவும் சிறப்பாக நடக்கும். பெண்கள் கணவன்மார்களுக்கு நோய்நொடி ஏற்படும்போது, இங்கே வேண்டிக்கொண்டு காணிக்கையாக தாலிக்கொடியை சமர்ப்பிக்கின்றனர். இன்னும் பலப்பல ஆலயங்களில் வினோதமான நேர்த்திக்கடன்கள், வழிபாடுகள், சடங்குகள் இருக்கின்றன. சாதாரண ஜனங்களின் அழுத்தமான நம்பிக்கையின் பல்வேறு வடிவங்கள் அவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
– முனைவர் ஸ்ரீராம்.

 

You may also like

Leave a Comment

nine − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi