உயர்பதவிக்கு போட்டியிடும் ஒருவரை தடை செய்ய முடியாது.. அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!!

வாஷிங்டன் : அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடனிடம் குடியரசு கட்சி வேட்பாளரும் அப்போதைய அதிபருமான ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் தோல்வியை ஏற்க மறுத்த அவர், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். அவரது ஆதரவாளர்கள் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14வது திருத்தத்தின்படி நாட்டிற்கு எதிராக போராடியதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீதும் கிளர்ச்சியை தூண்டியதாக அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த கொலராடோ நீதிமன்றம், ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளித்ததுடன் அவரது பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இது ட்ரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நாட்டின் உயர்பதவிக்கு போட்டியிடும் ஒருவரை மாநில நீதிமன்றம் தடை செய்ய முடியாது என்றும் ஒருமனதாக தீர்ப்பளித்தது. அரசியல் சாசனம் 14வது சட்டத் திருத்தம் இதற்கு பொருந்தாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கொலராடோ வாக்குப்பதிவில் இருந்து ட்ரம்பின் பெயரை நீக்கியதையும் ரத்து செய்தனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். ட்ரம்ப் பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்க்க தடை விதித்த நீதிமன்ற உத்தரவுகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு