அமெரிக்கா வரும் மோடியை சந்திப்பேன்: முன்னாள் அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: அடுத்த வாரம் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில்,குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.இந்த தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரசாரம் தீவிரமாகி வருகிறது. இரு தலைவர்களும் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடியாக விவாதம் நடத்தினர்.விவாதத்தில் குடியுரிமை, பொருளாதார நிலைமை உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர். இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அதிபர் தேர்தல் களம் மாறியுள்ளது. முதலில் டிரம்புக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வரும் 21 ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில் தான் அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மிச்சிகன் நகரில் நடந்த பிரசாரத்தில் இதனை டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,‘‘இந்திய – அமெரிக்க வர்த்தக உறவை இந்தியா மிகப்பெரிய அளவில் துஷ்பிரயோகம் செய்கிறது. இருந்தாலும் இந்திய பிரதமர் மோடி அற்புதமானவர். அடுத்த வாரம் அமெரிக்கா வரும் அவரை நான் சந்திப்பேன்” என்றார்.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்