மூச்சும் அம்பிகையின் நடையும்…

இதற்கு முந்தைய நாமங்களான பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா என்ற நாமமும், சிஞ்ஜாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீபதாம்புஜா என்ற நாமமும், அம்பிகையின் இரண்டு திருவடிகளை குறித்து பேசுகின்றது. மேலும், இரண்டு திருவடிகளும் அம்பிகையின் நாத (ஒலி), பிந்து (ஒளி) வடிவமாக இருப்பதையும் பார்த்தோம். இந்த நாமமான மராளி மந்தகமநா என்கிற நாமத்தில், மந்த கமநா என்றொரு வார்த்தை வருகிறது. கமநம் என்றால் நகர்தல் (to move) என்று அர்த்தம். மேலும், இந்த இடத்தில் நடத்தல் என்று எடுத்துக் கொள்ளலாம். மந்த கமநா என்று சொல்லும்போது மெதுவாக நடத்தல். அம்பாள் அடிமேல் அடியெடுத்து மெதுவாக நடக்கிறாள். அவசர இல்லாமல் மெதுவாக நடப்பது. இது பொதுவாக பெண்களுக்கும் சேர்த்து சொல்லக் கூடிய ஒரு லட்சணம். அப்படி மெதுவாக நடப்பது என்பதில் ஒரு அழகும் சௌந்தரியும் இருக்கிறது. முடியாமல் தொய்வால் மெதுவாக நடப்பது என்பது கிடையாது. ஒரு சௌந்தரியத்தோடு மெதுவாக நடப்பது. அப்படி மெதுவாக நடப்பதை அன்ன நடை என்று சொல்லுவோம். அப்படித்தான் ஒரு பெண்ணின் நடையை ஒப்பீடு செய்வோம். அன்னம் என்கிற ஹம்ஸ பட்சிபோல் நடப்பது. பறவைகளிலேயே நடையில் அழகு பொருந்தியது அன்னப் பறவையே ஆகும். இங்கு மராளி என்று சொல்வது அன்னப் பறவையையே ஆகும். அம்பிகையானவள் அன்னப் பறவைபோல மெதுவாக நடக்கக் கூடியவள். அப்போது அம்பிகையின் நடை அழகை இந்த நாமம் குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த அன்ன நடையை சங்கர பகவத் பாதர் சௌந்தரியலஹரியில் குறிப்பிடுகிறார். அந்த சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தில் ஆதிசங்கரர் அன்னப்பறவை மாதிரி அம்பாள் நடக்கவில்லை. அம்பாள் ஸ்ரீபுரத்தில் நடக்கிறாள். அப்போது ஸ்ரீபுரத்தைச் சுற்றி நிறைய அன்னபட்சிகள் இருக்கிறது. ஹம்ஸ பட்சிகள் நிறைய ஸ்ரீபுரத்தில் இருக்கிறது. இந்த ஹம்ஸ பட்சிகளெல்லாம் அம்பாள் நடந்துபோவதை பார்த்துக் கொண்டே இருக்குமாம். அம்பிகை நடப்பதுபோல் தன்னால் நடக்க முடியுமா என்று முயற்சி செய்து பார்க்குமாம். ஹம்ஸம் நடப்பதுபோல் அம்பிகை நடக்கவில்லை. அம்பிகை நடப்பதைப்போன்று ஹம்ஸம் நடக்க முயற்சி செய்கிறது என்று சௌந்தர்ய லஹரியில் சங்கர பகவத் பாதர் சொல்கிறார்.

அடுத்து இதனுடைய இன்னொரு ஆழம் பார்ப்போமா! இதற்கு முன்னால் உள்ள நாமாவில் சிஞ்ஜாத மணி மஞ்சீர மண்டித ஸ்ரீபதாம்புஜா என்று பார்க்கும்போது, அந்தப் பாதத்தில் இருக்கக் கூடிய அந்த நாத சொரூபம், அந்த நாத சொரூபம் பிரணவ நாதமான “ஓம்’’ என்று வருகின்றது. அந்தப் பிரணவத்திலிருந்து வேதங்கள். வேதங்களுக்குரிய பிரம்மா. பிரம்மாவிற்குரிய சிருஷ்டி. அந்த சிருஷ்டி எந்த பாதத்தில் சென்று ஒடுங்குகிறதோ அதுவும் அங்குதான் சென்று ஒடுங்குகிறது. ஆனால், அது எப்படி ஒடுங்குகிறது என்று பார்த்தால், ஸ்ரீபதாம் புஜா என்று சொல்வதால் அந்த மந்திரங்கள் மூலமாக இன்னும் சொல்லப் போனால் ஸ்ரீவித்யா முதலான மந்திரங்கள் மூலமாக அந்தப் பாதத்தில் சென்று ஒடுங்குகிறது என்று பார்த்தோம். அப்படிப் பார்க்கும்போது ஸ்ரீபதாம்புஜா என்பது அம்பிகையினுடைய சகலவிதமான மந்திரங்களுக்கும் இருப்பிடமாகும். இந்த மந்திரங்களுக்கெல்லாம் இருப்பிடமாக இருக்கக் கூடிய அந்தப் பாதமானது நம்முடைய இருதய ஸ்தானத்தில் இருக்கிறது. அப்படி அந்த இருதய ஸ்தானத்தில் இருக்கக் கூடிய அந்த பாதம் என்ன செய்கிறது என்று பார்த்தால் இந்த சகலவிதமான அந்த மந்திரங்களையும் தனக்குள் வைத்து, அந்த மந்திரத்தை நாம் அந்த திருவடியில் வைத்து தியானமும் ஜபமும் செய்கிறோம் அல்லவா… அது எந்த மந்திரமானாலும் சரி, குருநாதர் அளித்த மந்திரமானாலும் சரி, ஸ்ரீவித்யா மந்திரமானாலும் சரி, அப்படி ஜபம் செய்யச் செய்ய அது எங்குபோய் முடியுமெனில்… இந்த ஜபம் என்பது அஜபா என்று மாறும். இந்த மந்திரம் ஜபம் என்பது அஜபம் என்று மாறும்.

அஜபா என்பது நம்முடைய முயற்சி இல்லாமலேயே தானாக ஜபம் நடப்பது. ஜபிப்பவன் மறைந்துபோய் ஜபம் தானாக நடந்து கொண்டே இருக்கும் உயர்ந்த நிலை. மந்திர சித்தியின் உயர்ந்த நிலை. இப்போது ஜே.கிருஷ்ணமூர்த்தி மந்திரம் என்பதற்கு என்ன பொருள் சொல்லியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும். Manthra means ponder over… not becoming. இன்னொன்றாக மாறாமல் அதாவது not becoming, but it’s being. இருப்பிலேயே இருத்தல் என்பதாகும். மந்திரங்கள் வேறு எதுவாகவும் மாறாமல் இருந்தால் அப்படியே சொரூபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இந்த மந்திரம் மனதிற்கு இல்லையெனில் அது தொடர்ச்சியாக ஏதேனும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கும். அப்படி அஜபாவாக மாறும்போது என்ன ஆகுமெனில், அந்த மந்திரம் நம்முடைய ஹ்ருதய ஸ்தானத்தில் சென்று ஒடுங்கி அந்த மந்திரமே நம்முடைய மூச்சாக மாறி, அந்த மூச்சே ஹம்ஸ மந்திரமாக மாறுகிறது. நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது ஹம் என்றும், இந்த மூச்சை வெளியே விடும்போது ஸ என்று வந்தால் ஹம்ஸ மந்திரம், அஜபா மந்திரமாக மாறி விடுகிறது. இப்போது அஜபாவில் சேர்க்கும்போது என்ன நடக்கிறது எனில், இந்த ஹம்ஸ மந்திர ரூபமாக, அஜபா மந்திரமாக நமக்குள் இந்த மூச்சு போய் வருகிறதல்லவா. அதுதான் அம்பிகையினுடைய நடை. மராளி மந்தகமநா. ஹம்ஸ நடை. ஸோஹம் ஹம்ஸ. நாம் ஹம்ஸ என்று எதைச் சொல்கிறோமே ஸோஹமாகவும் இருக்கிறது. மூச்சை உள்ளே இழுக்கும்போது ஹம். மூச்சை வெளியே விடும்போது ஸ. இது ஹம்ஸ மந்திரம். இதே ஹம்ஸ மந்திரத்தை இன்னொரு விதமாகவும் ஜபம் செய்யலாம். உள்ளே இழுக்கும்போது ஸோ. வெளியே விடும்போது ஹம். ஹம்ஸ என்பதற்கு மேலான ஞானம். ஸோஹம் என்பதற்கு நீயே அது என்று அர்த்தம். அதனால்தான் ஞானிகளை பரம ஹம்ஸர்கள் என்று சொல்கிறோம். அப்போது எது மேலான ஞானம் என்றால் ஸோஹம் தான் மேலான ஞானம். ஸோஹம் என்கிற பாவனைதான், ஹம்ஸ என்கிற மந்திரமாக வருகிறது. ஹம்ஸ என்பது அஜபா மந்திரம். அந்த மந்திரம் நமக்குச் சொல்லக்கூடிய பாவனை என்னவெனில் ஸோஹம் என்கிற பாவனை. ஹம்ஸ, ஸோஹம் என்பதற்கு பெரிய வேறுபாடுகள் கிடையாது. இதுவே ஞானத்தில் உயர்ந்த நிலையை விவரிப்பதாகும்.

இந்த வேதாந்த ஹம்ஸ, ஸோஹம் போன்ற மகாவாக்கியங்களை வெறுமனே mechanical ஆக கொண்டு போகக் கூடாது. இது நிகழ வேண்டும். ஹம்ஸ பட்சி மாதிரி அம்பிகை நடக்கிறாள் என்று சொன்னால், இல்லை இல்லை… அம்பிகை மாதிரிதான் ஹம்ஸ பட்சி நடக்கிறாள். சரி, அம்பிகையினுடைய நடை எதுவென்று கேட்டால் இந்த மந்திரம் சித்தியாகி அந்த மந்திரமே நம் மூச்சாகி அது கடைசியில் அஜபா என்கிற ஹம்ஸ மந்திரத்தில் தானே தானாயாக பரமஹம்ஸ நிலையான ஞானத்தில் கொண்டுபோய் விடுகிறதல்லவா… அந்த ஹம்ஸ மந்திரத்தில் கொண்டுபோய் விடுவதுதான் அம்பிகையினுடைய நடை.அப்போது இந்த நிலையை அடைந்த ஒரு சாதகனுக்கு அவன் விடக்கூடிய ஒவ்வொரு மூச்சும் அம்பிகையினுடைய நடையாக இருக்கிறது. அவன் மூச்சுக் காற்று என்பதே அம்பிகையின் நடை. அப்போது அம்பிகையே அவனாகி விட்டானல்லவா. அப்போது எந்த மூச்சு வந்து இந்த ஜீவாத்மாவையும் சரீரத்தையும் கர்ம வினைக்காக, பிராரப்தத்திற்காக இணைத்து வைப்பது மூச்சுதான். அப்படி பிராரப்தத்திற்காக இணைத்து வைத்திருக்கக்கூடிய இந்த மூச்சே, நமக்கு அம்பிகையினுடைய நடையாக ஞானத்தின் உச்சியில் transformation என்கிற மாற்றத்திற்குள்ளாகிறது. அவனுக்கு அதுக்கு மேல் அது மூச்சு கிடையாது. அது அஜபாவாகிறது. அவன் மூச்சு விட்டாலே அது மந்திரமாகி விடுகிறது. ஏனெனில், அந்த மூச்சில் அம்பிகையானவள் மராளி மந்த கமனா… என்று மூச்சு மூலமாக அம்பிகையானவள் முன்னாலும் பின்னாலும் நடந்து கொண்டிருக்கிறாள். இப்போது நாம் விடும் மூச்சுகூட நம் கையில் இல்லை. அந்த அம்பிகையே தானே மூச்சாக இருக்கிறாள். மூச்சும் அவளே எனும்போது நம் கையில் என்ன உள்ளது. மூச்சை உங்கள் முயற்சியிலா உள்ளேயும் வெளியேயும் விடுகிறீர்கள். வாங்குகிறீர்கள். கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து இந்த விஷயத்தை யோசித்துப் பாருங்கள் என்று இந்த நாமம் நம்மை தலையில் தட்டி உட்கார வைக்கிறது.

இதிலுள்ள மந்த கமனா என்று சொல்வதற்கு இன்னொரு அர்த்தத்தையும் சொல்லலாம். யோக சாஸ்திரத்தில் மூச்சானது எவ்வளவுக்கு எவ்வளவு slow down அல்லது மென்மையாக மெல்லிழையாக ஆகுதோ, அவ்வளவுக்கு அவ்வளவு யோகம் கைகூடும். மூச்சினுடைய வேகமானது குறையத் தொடங்கும். குறைய ஆரம்பிக்க ஆரம்பிக்க மூச்சினுடைய அளவு என்று இருக்கிறது. உடனே மூச்சு வெளியேயும் உள்ளேயும் போனால் மூச்சின் நீளம் குறைவாக இருக்கிறது என்று பொருள். அங்கு… கோபமோ அல்லது பயமோ மிகும்போது இப்படி ஆகும். ஆனால், உள்ளே போய் வெளியே போகும் மூச்சானது மூணு அங்குலம் நாலு அங்குலம் என்று சென்றால், மூச்சு நிதானமாக இருக்கிறது. அதாவது நீண்டு இருக்கிறது என்று பொருள். அஞ்சு அங்குலம் ஆறு அங்குலம் என்று போனால் நம்முடைய sensitivity மற்றும் intellect எல்லாம் sharp ஆகும். ஆறு அங்குலத்தை தாண்டிவிட்டால், சில விஷயங்களெல்லாம் நமக்கு தானாகவே தெரிய ஆரம்பிக்கும். எங்கேயோ நடக்கின்ற விஷயத்தினுடைய காட்சி கிடைக்கும். எங்கேயோ நடக்கக்கூடிய விஷயத்தினுடைய ஓசை இங்கு கேட்கும். பன்னிரெண்டு அங்குலம் மூச்சு நீண்டு போய் வந்தது என்றால் அவர் பெரிய யோகீஸ்வரன். பன்னிரெண்டு அங்குலம் மூச்சு நீண்டதாக போய் வருவதை காண்பிப்பதைத்தான் நாம் விநாயகப் பெருமானுக்கு அவ்வளவு பெரிய தும்பிக்கையை கொடுத்து வைத்திருக்கிறோம். விநாயகருக்கு தும்பிக்கை ஏன் நீளமாக இருக்கிறதெனில், இந்த மூச்சினுடைய நீளமானது அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அப்போது விநாயகர் என்பது யோக மூர்த்தி. யோகத்தின் சொரூபம். அவருக்கு ஏன் தும்பிக்கை எனில், அவர் யானை முகமாக இருக்கிறார் அதனால் அவருக்கு தும்பிக்கை இருக்கிறது என்பது ஒரு விஷயம். ஆனால், ஏன் அவர் யானை முகமாக இருக்கிறார், ஏன் அவருக்கு தும்பிக்கை இருக்கிறது என்று பார்த்தால், யோக தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது மூச்சினுடைய நீளமும் யானையின் மூச்சின் அளவும் ஒன்றாக இருப்பதாலேயே ஆகும்.
(சுழலும்)

Related posts

ருத்ராட்சம் யாரெல்லாம் அணியலாம்!

ஊர்த்துவ நடனம் புரியும் திருவாலங்காடு நடராஜர்!

கலை மணம் கமழும் கிருஷ்ணர் கோயில்