அம்பேத்கர், கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டி 271 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு: தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் வழங்கினார்

சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 271 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அவ்வை அருள் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2023-24ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடந்தன.

சென்னையில் கல்லூரி, பள்ளிப் போட்டிகள் (வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை) என மூன்று இடங்களில் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வடசென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரியிலும், தென்சென்னை ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னை பாரதி மகளிர் கலைக் கல்லூரியிலும் நடந்தன. இதில் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 44 மாணவ, மாணவியர்களும், கலைஞர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 34 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வடசென்னை பெரம்பூர், டி.ஆர்.பி.சி.சி மேல்நிலைப் பள்ளியிலும், தென்சென்னை சைதாப்பேட்டை, அரசு மாதிரிப் மேல்நிலைப் பள்ளியிலும், மத்திய சென்னை ராயப்பேட்டை, ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடந்தன. இதில் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 83 மாணவ, மாணவியர்களும், கலைஞர் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 110 மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 78 கல்லூரி மாணவர்கள் மற்றும் 193 பள்ளி மாணவர்களுக்கு நேற்று தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவ்வை அருள் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு