அம்பத்தூரில் 30 அடி சாலையில் 21 அடி ஆழ திடீர் பள்ளம்: ரோந்து போலீசார் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

அம்பத்தூர்: அம்பத்தூரில் 30 அடி சாலையில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு நிலவியது. சென்னை மாநகராட்சி 7வது மண்டலத்துக்கு உட்பட்ட 82வது வார்டு கருக்கு மெயின்ரோடு பிரதான சாலையில் நான்கு முனை சந்திப்பு உள்ளது. இங்குள்ள 30 அடி சாலையின் மைய பகுதியில் நேற்று இரவு திடீரென 21 அடி ஆழத்திலும் 10 அடி அகலத்திலும் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் பள்ளத்தில் கழிவுநீர் ஆறுபோல் ஓடியது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி மற்றும் 7வது மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராட்சத பள்ளத்தை பார்வையிட்டனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த நேரத்தில் வாகனங்கள் வராததாலும் ரோந்து போலீசார் உடனடியாக தகவல் தெரிவித்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் அம்பத்தூர் ஐந்து ஆலமரம் மற்றும் புதூர் மார்க்கெட் பகுதியில் இருந்து கொரட்டூர் செல்லக்கூடிய மேனாம்பேடு பிரதான சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 8 இடங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “அரசு அனுமதி பெற்று முறையாக கேபிள் அமைக்காததால் போன்ற சம்பவம் நடக்கிறது. எனவே, தனியார் இன்டர்நெட் கேபிள் அமைக்கும்போது மாநகராட்சியின் அனுமதியோடு எவ்வளவு ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்படுகிறது போன்ற விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும்” என்றனர்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்