தடையை மீறி நடைபயணம் அமர்பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது: அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்த அரசு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டார்

கடையம்: தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட வழக்கில் பாஜ மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரை அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அரசு பஸ்சில் போலீசார் அழைத்து சென்றனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூரில் கடந்த செப்டம்பர் 4ம் தேதி பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நடைபெற்றது. அப்போது பாதயாத்திரையை பொட்டல் புதூரில் இருந்து தொடங்க வேண்டாம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே முதலியார்பட்டி அடுத்த சீவலப்பேரி சுடலை மாடன் கோயிலில் இருந்து கடையம் வரை நடைபயணம் செல்ல போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தடையை மீறி ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நடைபெற்றது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் தாஸ் அளித்த புகாரின் பேரில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ ஒருங்கிணைப்பாளரும், பாஜ மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவருமான அமர் பிரசாத் ரெட்டி, கடையம் கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் உள்ளிட்ட 10 நிர்வாகிகள் மற்றும் அடையாளம் காணக்கூடிய நபர்கள் மீது அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் கடந்த செப்.9ம் தேதி இரவே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கிலும் தற்போது அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து வழக்கு விசாரணைக்காக நாளை அம்பை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜராக உள்ளார். ஏற்கனவே அண்ணாமலை வீடு முன்பு தடையை மீறி கொடி கம்பம் வைத்த விவகாரத்தில் பொக்லைன் இயந்திரத்தை சேதபடுத்திய வழக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னையில் இருந்து அரசு பஸ்சில் போலீஸ் பாதுகாப்புடன் அமர் பிரசாத் ரெட்டி அழைத்து செல்லப்பட்டார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்