மேற்கு தொடர்ச்சி மலையில் மழை; அமராவதி அணையில் இருந்து மீண்டும் உபரிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: அமராவதி அணையில் இருந்து நேற்று மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்கைள சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதே போல கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும்.

பாசனத்துக்கு மட்டுமின்றி நூற்றுக்கணக்கான கிராமப்பகுதிகளில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணையில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். பருவமழைக் காலங்களில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் பாம்பாறு, கொடைக்கானல் பகுதியின் கூட்டாறு, வால்பாறை அக்காமலை பகுதியில் இருந்து வரும் சின்னாறு, தேனாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அமராவதி அணைக்கு வந்து சேர்கிறது. கடந்த டிசம்பரில் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருந்தது. அதன்பிறகு பருவமழை காலம் நிறைவு பெற்றதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது. இதனால் அணை நீர்மட்டம் குறைய துவங்கியது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

ஜூலை மாத தொடக்கத்தில் நீர்மட்டம் 62.24 அடியாக இருந்தது. ஜூலை 18ம் தேதி அணையின் நீர்மட்டம் 87 அடியை கடந்ததால் அணையின் மேல் மதகுகள் வழியாக ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. கடந்த 20 நாட்களாக அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது. உபரிநீரும் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்றுமுன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் அமராவதி ஆற்றுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் நள்ளிரவு 1 மணியளவில் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வந்ததால், உபரிநீர் முழுவதும் அப்படியே 9 கண் மதகுகள் வழியாக ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் நீர்வரத்து குறைந்ததால், நேற்று காலை உபரிநீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 88.09 அடியாக உள்ளது.

Related posts

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்