பாதியில் கைவிடப்பட்ட அமராவதி பணிகள் ஆய்வு பிரஜாவேதிகா இடிக்கப்பட்ட இடம் ஜெகன்மோகன் அராஜக ஆட்சியின் நினைவாக அப்படியே வைக்கப்படும்

*முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு

திருமலை : பாதியில் கைவிடப்பட்ட அமராவதி பணிகளை ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரஜாவேதிகா இடிக்கப்பட்ட இடம் ஜெகன்மோகன் அராஜக ஆட்சியின் நினைவாக அப்படியே வைக்கப்படும் என்று கூறினார். ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு தனக்கு உண்டான பாணியில் தனது கனவு திட்டங்களை செயல்படுத்தும் விதமாக அதிகாரிகளை வேகப்படுத்துவதோடு தானும் நேரில் சென்று பார்வையிட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதலில் போலவரம் அணை கட்டும் பணிகளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

அப்போது ஒவ்வொரு திங்கட்கிழமையும் அணைக்கான வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமராவதியில் முதல்வர் சந்திரபாபு கவனம் செலுத்தினார். அதன் ஒரு பகுதியாக, தலைநகர் பகுதியில் தனது ஆட்சியில் மேற்கொண்டு ஐந்தாண்டுகளில் ஜெகன் அரசால் கைவிடப்பட்டவற்றை பார்வையிட்டு முதல்வர் சந்திரபாபு நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்காக கட்டப்பட்ட பிரஜா வேதிகா பகுதி இடிக்கப்பட்டதை பார்வையிட்டார். அந்த பகுதிக்கு சந்திரபாபு நாயுடு சென்றபோது அப்பகுதி முழுவதும் ஜெய் சந்திரபாபு, ஜெய் அமராவதி என்ற கோஷங்களால் எழும்பியது. ஜெகன் அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு சாட்சியாக பிரஜா வேதிகா இடிபாடுகள் அப்படியே வைக்கப்படும் என சந்திரபாபு அறிவித்தார்.

பின்னர் உத்தண்டராயுனி பாலத்தில் தலைநகருக்காக அப்போது பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் மண்டியிட்டு அமர்ந்து வணங்கினார். அங்கிருந்து யாகம் நடந்த பகுதியை ஆய்வு செய்தார். பெண் விவசாயிகள் நடத்திய பூஜையில் முதல்வர் சந்திரபாபு பங்கேற்றார். அதன் பிறகு அமராவதி தலைநகர் மாதிரி ஆய்வு செய்து நிலம் வழங்கிய விவசாயிகளுடன் பேசியதாவது: அமராவதியில் எம்எல்ஏ, எம்எல்சி என மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் குடியிருப்பு கட்டிடங்களின் கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டது.

2019ம் ஆண்டிலேயே, இந்தக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் 70 முதல் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதன் பிறகு ஜெகன்மோகன் அரசு வந்ததும் அமராவதி கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமராவதி என்பது மக்கள் தலைநகரம். வருங்கால சந்ததியினரின் அஸ்திவாரம். அதே போன்று போலவரம் அணையும் நமக்கு மிகவும் முக்கியம். மத்திய அரசு பணம் கொடுக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்தி நதிகள் இணைக்கப்பட்டால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ஏக்கருக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். ஆனால் போலவரம் அணையை கடந்த 5 ஆண்டுகளில் கோதாவரி ஆற்றில் கலந்து விட்டனர். இதனால் தற்பொழுது மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்றால் செலவு இரட்டிப்பாக மாறியுள்ளது.

இதேபோன்று அமராவதி தலைநகருக்காக அப்பொழுது பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் இருந்து மண்ணும், யமுனா நதியின் புனித நீர் கொண்டு வந்து பூஜை செய்தார். இதேபோன்று 16,000 முக்கிய நகரங்களில் இருந்தும் புனித ஸ்தலங்களில் இருந்து மண் மற்றும் புனித நீர் கொண்டு வந்து இங்கு சிறப்பு பூஜை மேற்கொண்டு தொடங்கப்பட்டது. அந்த புனிதமான செயல் காரணமாகவே அமராவதியை கடவுள் காப்பாற்றி உள்ளார்.

அமராவதியை மக்கள் தலைநகராக அமைப்பதோடு விசாகப்பட்டினத்தை பொருளாதார தலைநகராகவும், கர்னூலை மாடர்ன் சிட்டியாக கொண்டு வரப்படும். அதே போன்று மற்ற அனைத்து நகரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே எனது ஆட்சியில் மத்திய கல்வி நிறுவனங்களான 12 நிறுவனங்கள் திருப்பதி, கர்னூல், ஓங்கோல், விஜயநகரம் என அனைத்து நகரங்களுக்கும் சமமாக பிரித்து அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டது.

ஆனால் மாநில பிரிவினையாகி 10 ஆண்டுகளாகியும் தற்போது தலைநகர் இல்லாத நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். மாநில தலைநகருக்காக நான் கொடுத்த வாக்குறுதியை ஏற்று 29 ஆயிரம் விவசாயிகள் எந்தவித விவாதமும் இன்றி நீதிமன்றத்திற்கு செல்லாமல் அரசுக்கு நிலத்தை வழங்கினர். இதன் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதனை அரசு அலுவலகங்கள் மற்றும் தலைநகருக்கான வளர்ச்சிப் பணிகள் போக மேலும் பல ஏக்கர் இடங்கள் அரசிடம் இருக்கும்.

இந்த வளர்ச்சி பணிகள் செய்த பிறகு அதனை விற்றாலே தலைநகருக்கு தேவையான நிதி தானாக கிடைக்கும். மாநிலத்தை கடனில் மூழ்க வைத்து அரசு நிலங்கள் அனைத்தும் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. மதுபான விற்பனை கூட வருங்காலத்தில் விற்பனை செய்வதை வைத்துக் கூட கடன் வாங்கி உள்ளார்கள். அமராவதி தலைநகர் சேதப்படுத்தப்பட்டு 1631 நாட்கள் ஆகிறது. அவற்றை கூட்டினால் 11. அவர்கள் வெற்றி பெற்ற இடங்களும் 11 வருகிறது.

எனவே இது கடவுள் எழுதிய ஸ்கிரிப்ட். இருப்பினும் அரசியலில் இவர்கள் போல் இருக்க வேண்டுமா? அந்த 11 இடம் கூட மக்கள் தர வேண்டுமா என விவாதிக்க வேண்டும். அரசை ஒருபுறம் கடனில் தள்ளிவிட்டு ருஷிகொண்டாவில் சுற்றுச்சூழலை பாதிக்கும் விதமாக மலையை குடைந்து 500 கோடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்வேனே தவிர ஓடிப் போகமாட்டேன்.

விரைவில் நிதி நிலை பார்த்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஜப்பானில் இரண்டாம் உலக போரின்போது குண்டு வீசி தாக்கப்பட்ட ஹிரோஷிமா- நாகசாகி பகுதியில் இப்பொழுதும் நினைவுச் சின்னமாக வைத்து அதனை உத்வேகமாகக் கொண்டு அந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அதே போன்று ஜெகன்மோகன் ஆட்சியின் நாசமாக இடிக்கப்பட்ட பிரஜா வேதிகா மக்கள் பார்வைக்கு வைத்து இப்படியும் ஒருவர் ஆட்சி செய்தார் என்பதை காணும் விதமாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நகர வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related posts

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!