ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று காலை நடந்தது. இதையொட்டி பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானம், யுகாதி (தெலுங்கு வருட பிறப்பு), வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றை முன்னிட்டு அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமைகளில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம். ஆனி மாதத்தையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் ஜூலை 16ம்தேதி சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு முடித்து புதிய கணக்கு தொடங்கப்படுகிறது. அதன்படி வரும் 16ம் தேதி வருடாந்திர கணக்கு முடித்து புதிய கணக்கு தொடங்கும் ஆனிவார ஆஸ்தானம் நடக்க உள்ளதால் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

இதையொட்டி இன்று அதிகாலை சுப்ரபாதம் மற்றும் நித்ய பூஜைகள் முடிந்தபின்னர் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. அப்போது மூலவர் மீது பட்டு துணியால் போர்த்தி கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுளமாதா சன்னதி, பாஷ்யகார சன்னதி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தது. பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகிழங்கு உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார்செய்யப்பட்ட கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. அதுவரை பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

Related posts

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்: ப.சிதம்பரம்

உத்தராகண்ட் நெய் நிறுவனத்தில் சோதனை

ஒகேனக்கல்-காவிரி ஆற்றில் 13,000 கனஅடி நீர்வரத்து