ஆழ்வாரின் திருமலை பிரமோற்சவ அனுபவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருமலை பிரமோற்சவம்

செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை

108 திவ்ய தேசங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது திருமலை.
‘‘மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’’
– என்பது ஆழ்வார் பாசுரம்.

ஒருவன் திருமலைக்குச் சென்று, அந்த எம்பெருமானைத் தொழுவதுகூட இரண்டாம் பட்சம். திருமலைத் திசையை நோக்கி வணங்கினாலே, இதுவரை நம்மை வாட்டி எடுத்த வினைகள் ஓய்ந்து, நமக்கு நல்வாழ்வைத் தரும். நாள் தோறும் திருமலையில் திருநாள்தான். ஆயினும், திருமலை ஏழுமலையான் கோயிலில் நடக்கும் முக்கியமான விழாக்களில் ஒன்று பிரம்மோற்சவம். அதிலும் விசேஷமாக இந்த ஆண்டு (2023) இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட்டது. இதில், ஆவணி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவத்திற்கு, `சலகட்லா பிரம்மோற்சவம்’ என்று பெயர். இந்த ஆண்டு சலகட்லா பிரம்மோற்சவம் செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கி, செப்டம்பர் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவ நிகழ்வு விவரம்
செப்டம்பர் 17 : அங்குரார்ப்பணம் (இரவு 7 முதல் 8 வரை)
செப்டம்பர் 18 : பங்காரு திருச்சி உற்சவம் – மாலை 3.30 முதல் 5.30 வரை
துவஜரோகனம் – மாலை 6.15 முதல் 6.30 வரை
பீடசேஷ வாகனம் – இரவு 9 முதல் 11 மணி வரை
செப்டம்பர் 19 : சின்ன சேஷ வாகனம் – காலை 8 முதல் 10 வரை

ஸ்னாபன திருமஞ்சனம் – பகல் 1 முதல் 3 வரை
ஹம்ச வாகனம் – இரவு 7 முதல் 9 வரை
செப்டம்பர் 20
சிம்ம வாகனம் – காலை 8 முதல் 10 வரை
ஸ்னாபன திருமஞ்சனம் – பகல் 1 முதல் 3 வரை
முத்தியபுபந்திரி வாகனம் – இரவு 7 முதல் 9 வரை
செப்டம்பர் 21
கற்பக விருட்ச வாகனம் – காலை 8 முதல் 10 வரை

சர்வபூபால வாகனம் – இரவு 7 முதல் 9 வரை
செப்டம்பர் 22
மோகினி வாகனம் – காலை 8 முதல் 10 வரை
கருட வாகனம் – இரவு 7 மணி முதல் 9 வரை
செப்டம்பர் 23
அனுமந்த வாகனம் – காலை 8 முதல் 10 வரை
தங்க ரத ஊர்வலம் – மாலை 4 முதல் 5 வரை

கஜ வாகனம் – இரவு 7 முதல் 9 வரை
செப்டம்பர் 24
சூரிய பிரபை வாகனம் – காலை 8 முதல் 10 வரை
ஸ்தாபன திருமஞ்சனம் – பகல் 1 முதல் 3 வரை
சந்திர பிரபை வாகனம் – இரவு 7 முதல் 9 வரை
செப்டம்பர் 25

ரதோற்சவம் – காலை 6.55 முதல் நடைபெறும்
ஹம்ச வாகனம் – இரவு 7 முதல் 9 வரை
செப்டம்பர் 26
பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி உற்சவம் காலை 3 முதல் 6 வரை
ஸ்தாபன திருமஞ்சனம் மற்றும் சக்ர ஸ்நானம் காலை 6 முதல் 9 வரை
த்வஜவரோகனம் – இரவு 7 முதல் 9 வரை

புரட்டாசி மாதத்தில், திருமலையப்ப சுவாமியின் அவதார திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவிற்கு ஓணப் பெருவிழா என்று பெயர். நவராத்ரி ஒட்டியும் பெருமாளின் அவதார நாளான புரட்டாசி திருவோணம் அனுசரித்து வருவதால், `நவராத்ரி பிரம்மோற்சவம்’ என்று பெயர். அக்டோபர் 14 முதல் அக்டோபர் 23 வரை நடைபெறுகிறது. இந்த 2-வது பிரம்மோற்சவத்திற்கு, கொடியேற்றம் இல்லை. த்வஜா ரோஹணம் நடைபெறாது.

பொதுவாக, திருக்கோயிலில் உற்சவம் நடப்பதன் தத்துவம், எல்லா மக்களும் ஈடுபட்டு, இறைவனை வழிபட்டு, நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே ஆகும்.உற்சவம் என்பதற்கு என்ன பொருள் என்று பார்க்க வேண்டும். `ஸவம்’ என்றால் துக்கம் அல்லது வருத்தம். `உத்’ என்றால் நீங்குதல். உத்+ஸவம் = உற்சவம். அதாவது துன்பம் நீங்கி ஆனந்தமடைதல்.“நித்திய உற்சவம்’’, “நைமித்திக உற்சவம்’’, “காமிய உற்சவம்’’, “பிரம்மோற்சவம்’’ என்று நான்கு வகை உண்டு. `பிரம்ம உற்சவம்’ என்பது என்ன என்று சிந்திக்க வேண்டும்.

மூன்று பொருள் உண்டு.1.பிரம்மனால் கொண்டாடப்பட்ட உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம்.

2.பிரம்மம் பெரிது. அதைப் போலவே இது, பெருவிழா என்பதால் பிரம்மோற்சவம்.

3. தான் பிரம்மம் (பரமாத்ம) என்பதை இறைவன் இந்த உற்சவத்தின் மூலம் காட்டுவதால் பிரமோற்சவம்.திருவோணத்தோடு தொடர்புடையதால், ஓணப் பெருவிழா என்று திருமழிசை ஆழ்வார் பாசுரமிடுகின்றார். திருவிழாவைப் பற்றி மற்ற ஆழ்வார்கள் நேரடியாகப் பாடவில்லை என்றாலும்கூட, பெருவிழாவின் பல்வேறு செய்திகளைத் தங்கள் பாசுரங்களில் பாடி இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட பிரமோற்சவத்தை, 1600 ஆண்டுகளுக்கு முன் ஆழ்வார் எப்படி அனுபவித்தார் என்று பார்க்க வேண்டும்.

அது ஒரு புரட்டாசி மாதம். திருவோண நட்சத்திரம். திருமலையப்பனின் அவதார நட்சத்திரம் அல்லவா. திருமலையில் பிரம்மோற்சவம். ஆழ்வார் கலந்து கொள்ளும் ஆவலில் செல்கிறார். “வீங்கு நீர் அருவி வேங்கடம்” என்று சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்பட்ட திருமலையில், துள்ளும் அருவிகளோடும், வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகளோடும் காட்சிதரும் திருமலையின் அழகை ரசித்துக் கொண்டே படி ஏறுகிறார் திருமழிசையாழ்வார். இந்த பிரம்மோற்சவத்தை காணத்தானே தேவர்கள் அனைவரும் திரண்டு திருமலைக்கு வருகின்றனர்.

எத்தனை குதூகலம் திருமலையில்?

எத்தனை ஆடல், பாடல்கள் திருமலையில்?
எத்தனை அடியார்கள் கூட்டம் திருமலையில்?
எத்தனை கோவிந்த நாம கோஷம் திருமலையில்?

“நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா” என்றும் பாடும் மனம்உடையவர்கள், திரண்டு வந்து திருமலையப்பனைச் சேவிக்கும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியல்லவா. அந்தக் காட்சியை காணத்தானே ஆழ்வாரும் விரும்புகிறார். அதற்காகத்தானே இன்று திருமலையில், ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டிருக்கிறார்.எம்பெருமானுடைய சர்வ வியாபகத்துவம் ஒவ்வொரு திருமலை காட்சியிலும் எதிரொலிக்கிறது.

பறவைகளின் ஒலி, அங்குமிங்கும் தாவும் மான்களின் ஒலி, மயில்களின் ஒலி, குளிர்ச்சியோடு கொட்டும் அருவிகளின் ஒலி, மரங்களும், இலைகளும், கிளைகளும் அசையும் ஒலி, என ஒவ்வொரு ஒலியும் ஆழ்வாருக்கு ஓங்காரமான பிரணவத்தையும் – பிரணவத்தின் அதிர்வையும் – பிரணவத்தின் அர்த்தத்தையும் – மனதில் எதிரொலித்துக் கொண்டே இருப்பதை அனுபவித்துக் கொண்டே செல்கிறார் அவர்.

எத்தனை அருமையானது எம்பெருமானின் பிரம்மோற்சவம்? `பவிஷ்ய புராணத்தில்’ முதல் முதலாக திருமலை அப்பனுக்கு பிரமோற்சவம், நான்முகனால் கொண்டாடப்பட்டது என்ற குறிப்பு இருக்கிறது.பிரம்மன் கொண்டாடியது பிரம்ம உற்சவம். பிரம்மத்தைக் கொண்டாடுவதால், பிரம்மோற்சவம். எது பெரிது? பிரம்மம் பெரிது. எம்பெருமான் பெரியவன் அல்லவா. அந்த எம்பெருமானுக்குக் கொண்டாடப்படும் உற்சவம் என்பதால், பிரம்மோற்சவம் ஆனது. இப்படி பிரம்மோற்சவத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இவன்தான் பிரம்மம். இந்த பிரம்மம்தான் திருமலையில் எழுந்தருளி இருக்கிறது, என்பதைக் காட்டுவதற்காகவே, உள்ள உற்சவம்தான் பிரம்மோற்சவம். புராணங்களிலும், கல்வெட்டுகளிலும் காட்டியபடி அன்று நடந்த பிரம்மோற்சவம், இன்றைக்கும் அதே உற்சாகத்தோடு கொண்டாடப்படுவது ஆச்சரியம் அல்லவா!பிரம்மோற்சவத்தின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனச் சேவை. எம்பெருமான் மாடவீதிகளில் காட்சிதர, மாலவன் பக்தர்கள் ஆடல் பாடல்களோடும் அந்வயிக்கும் காட்சி அற்புதமல்லவா! அமர்க்களமான வாத்திய ஒலிகளும், வேத ஒலியும், விழா ஒலியும் சேர்ந்து ஒலிக்க, மந்தகாசமான புன்னகையோடு எம்பெருமான் வலம் வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

இதை நினைத்துக் கொண்டே வருகின்றார் ஆழ்வார். அவருடைய மனம் முழுக்க அந்த விழாவின் பல்வேறு ஒலிகள்தான் நிறைந்திருக்கின்றன. இதோ “கல்” என்று அருவி கொட்டுகிறது. அது எம்பெருமானுடைய திருநாமத்தைக் கூறுவது போல இருக்கிறது. அந்த விழாவின் சப்த ஜாலங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து இதயத்தை மயக்குகிறது.திருமலையில் ஏறும் பொழுது விழாவின் ஒலி, மெல்லிய ஒலியாகத் துவங்கி, திருக்கோயிலை நெருங்க நெருங்க, கொஞ்சம் கொஞ்சமாக ஒலியின் அளவு கூடி, ஆழ்வார் உணர்வுகளை அப்படியே மயக்கம் கொள்ள வைக்கிறது.

அவருடைய மனம் முழுக்க திருவோணத் விழாதான். மனம் விழாவிலேயே லயித்து இருந்தது. தூராத மனக்காதல் தொண்டர்களோடு சேர்ந்து கலந்து ஆண்டவனை அனுபவிக்கும் வாய்ப்புக்காகத் துடித்துக் கொண்டிருந்தார். அந்த ஒலிகளை எல்லாம் கேட்டு ரசித்துக் கொண்டே இருந்தார். “பகவானே உன்னைக் காண, இதோ, இந்த அடியவன் வந்து கொண்டே இருக்கிறேன். இன்னும் சற்று நேரம்தான். இன்னும் சில படிகள்தான். இதோ வந்துவிட்டேன். விண்ணவரும் மண்ணவரும் காணத் துடிக்கும் வேங்கடவனே, உன் உருவம்தான் என் மனதில் நிறைந்து இருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே படியேற, திடீரென்று அந்த ஒலிகள் குறையத் தொடங்கியது.

“இது என்ன வியப்பு? கோயிலை நெருங்க நெருங்க ஒலிகூட வேண்டுமே. அந்த அனுபவத்தை நினைத்துக் கொண்டுதானே மலையேறி கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஒலி குறைந்து சுத்தமாக கேட்கவில்லையே. என்ன காரணம்?” என்று துடித்துப் போய் விடுகின்றார். எங்கும் அமைதி. எந்த ஒலியும் இல்லை. இப்பொழுது திடீரென்று ஒரு ஒலி மெல்லியதாகத் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வருகிறது. ஆழ்வார் உற்று, கூர்மையாகக் கவனிக்கிறார்.

வெளியிலிருந்து வருகின்ற ஒலிகளாகத் தெரியவில்லையே. அப்படியானால் இந்த ஒலி எங்கே இருந்து வருகிறது? ஒலி கொஞ்சம் கொஞ்சமாக, கூடிக் கொண்டே போகிறது. புறத்தில் இருந்து விலகி அகத்தை நோக்கினார். “அடடா… இந்த ஒலி உள் ஒலி அல்லவா… இது வெளியில் இருந்து வரவில்லை உள்ளே இருந்து அல்லவா வருகிறது. உற்று கவனிக்கிறார்… இந்த ஒலிகள் இப்பொழுது காட்சிகளாக விரிகிறது.

ஆழ்வார் ஆழ்ந்து அகத்தைப் பார்க்கிறார். அங்கே இருந்துதான் இந்த ஒலி வருகிறது. ஆனந்த நிலைய மாடவீதிகளின் காட்சிகள் இப்போது மனதில் விரிகின்றன.இதோ.. அந்த மலையப்பசுவாமி கருட வாகனத்தில் ஏறி வருவது கண்கொள்ளாக் காட்சியாக, வலம் வந்து கொண்டிருக்கிறான். எத்தனை ஆட்டங்கள்… எத்தனை பாட்டங்கள். தேவாதி தேவர்கள் கூடி பூமழை பொழிய, அந்த காட்சி மேலே மேலே பெருகிக் கொண்டே இருக்கிறது.

திருமழிசை ஆழ்வாரின் மனம் கசிகிறது. உள்ளம் குழைகிறது. “எம்பெருமானே, நான் உன்னைக் காணவும், ஓணப் பெருவிழாவை அனுபவிக்கவும் வந்து கொண்டிருந்தேன். ஆனால் நீயோ, அத்தனையும் வாரிச் சுருட்டிக் கொண்டு என் நெஞ்சில் புகுந்துவிட்டாய். உன் கருணைதான் என்னே… இதோ.. அற்புதத் தமிழாய் அந்த அனுபவப் பாசுரம் விரிகிறது.

காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர – பேணி
வருவேங் கடவா என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று.

“நானோ திருமலையில் வந்து உன்னைக் காண விரும்பியிருக்கின்றேன். நீயோ.. அங்கு நின்றும் என்னுள்ளத்தே வந்து உறைகின்றாய், இனி நான் என் செய்வேன்!’’ என்னும் ஆழ்வார் திருவுள்ளத்தை இந்தப் பாசுரத்தில் மூலம் அறிகிறோம்.ஈஸ்வர லாபம் பெற சேதனன் முயல, சேதன லாபம் பெற அந்த சர்வேஸ் வரனே வந்தான்.அதாவது, பகவானை அடைய பக்தன் முயல, பகவானோ இப்படிப்பட்ட பக்தி உடைய பக்தன் வேண்டுமே என்று பக்தனை அடைய வருகிறான்.

பஹுனாம் ஜன்மனாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:

(பல பிறப்புகள் மற்றும் இறப்புகளுக்குப் பிறகு, உண்மையில் அறிவில் உள்ளவன், எல்லா காரணங்களுக்கும், எல்லாவற்றுக்கும் நானே காரணம் என்பதை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அவன் மகாத்மா. அவனைக் காண்பது மிகவும் அரிது.) என்று சொன்னவன் அல்லவா.

அந்த லாபம் பெறத்தானே அவன், விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து, திருமலையில் நின்று கொண்டிருக்கிறான். அதற்குத்தானே பிரமோற்சவம் எல்லாம்…

நாம் பிரமோற்சவம் நேரில் கண்டாலும் தொலைக்காட்சியில் கண்டாலும், இந்தப் பாசுரம் நினைவுக்கு வரவேண்டும்.

தொகுப்பு: பாரதிநாதன்

Related posts

புண்ணியங்களை புரட்டித் தரும் புரட்டாசிப் படையல்

புண்ணியம் தரும் புரட்டாசியும் முன்னோர்கள் வந்தருளும் மஹாளயமும்

காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!