திருத்தணி அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல்

திருத்தணி: திருத்தணி அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேதினாபுரம் கிராமத்தில் சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லூரி இயங்கிவருகிறது. இக்கல்லுாரியில் கடந்த, 1993-1996ம் ஆண்டு வரை வரலாற்று பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த மாணவர்கள், 20 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் சத்யபிரியா தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர்கள் ஜெய்லாப்பூதின், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி பேராசிரியர் பொன் அரசு மற்றும் பாபுஜி ஆகியோர் பங்கேற்று தங்களிடம் படித்த மாணவ- மாணவிகள் பற்றி நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் பேராசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர். மேலும் மாணவர்கள் கல்லூரி காலத்தில் நடந்த இனிமையான சம்பவங்கள் குறித்து நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். முன்னாள் மாணவர்களில் பெரும்பாலானோர், காவல், பள்ளிக் கல்வி, கல்லுாரி உள்பட அரசுத் துறையில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் சிலர் வெளிநாடு மற்றும் சுயதொழில் செய்து உயர்த்த இடத்திலும், உயர்ந்த பதவியிலும் பணிபுரிகின்றனர். இதுதவிர சில மாணவர்கள் வழக்கறிஞர், விவசாயி மற்றும் வியாபாரிகளாகவும் உள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து எடுத்துக்கூறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர்கள் பொன்னரசு, ஜெய்லாபுதீன் பேசினர். துணை முதல்வர் சத்தியபிரியா பேசும்போது, கல்லூரியில் ஏற்கனவே பயின்று பல்வேறு பணிகளில் பணியாற்றி வரும் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து கல்லூரிக்குத் தேவையான அடிப்படை தேவைகளை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகள் முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரிக்கு வழக்கப்பட்டன. பேராசிரியர்களுக்கு சந்தனமாலை, சால்வை நினைவுப் பரிசுகள் வழங்கி மாணவ மாணவிகள் கவுரவித்தனர். இதனைத்தொடர்ந்து இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு மதிய விருந்தும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிறைவாக தற்போதைய வரலாற்றுத்துறை தலைவரும் முன்னாள் கல்லூரி மாணவியுமான அம்மு நன்றி கூறினார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி