படிகாரம்

அலுமினியத்தின் நீரேற்றிய இரட்டை சல்பேட்டு உப்புதான் படிகாரம் (Alum) ஆகும். இது சீனக்காரம் என்ற பெயராலும் அழைக்கப்படும். படிகாரங்களின் பொதுவாய்ப்பாடு XAl(SO4)2.12H2O. இவ்வாய்ப்பாட்டிலுள்ள ‘X’ பொட்டாசியம் அல்லது அமோனியம் போன்ற ஒற்றை இணைதிறன் கொண்ட நேர்மின் அயனிகளைக் குறிக்கிறது.பெரும்பாலும் படிகாரம் என்பது பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்டு (KAl(SO4)2.12H2O) என்ற வேதிச் சேர்மத்தையும், அதைச் சார்ந்த வேதிப்பொருட்களையும் குறிக்கும். இது பொட்டாசு ஆலம் என்றும் பொட்டாசு படிகாரம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அலுமினியத்தை குரோமியம்(III) போன்ற மற்றொரு மூன்று இணைதிறன் அயனி இடப்பெயர்ச்சி செய்து உருவாகும் உப்பு அல்லது கந்தகத்தை செலீனியம் போன்ற மற்றொரு அயனி இடப்பெயர்ச்சி செய்து உருவாகும் உப்பு நீங்கலாக பொதுவாக ஒரே வாய்ப்பாடும் கட்டமைப்பும் கொண்ட உப்புகளையும் படிகாரம் என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். இவ்வகையில் மிகப் பொதுவாகக் கருதப்படும் படிகாரம் குரோம் படிகாரம் ஆகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு KCr(SO4)2.12H2O ஆகும். சில தொழிற்சாலைகளில் அலுமினியம் சல்பேட்டை (Al2(SO4)3.nH2O) ஆலம் என்கிறார்கள். பெரும்பாலும் தொழிற்சாலைகளில் கூழ்மத் திரட்டு அலுமினியம் சல்பேட்டு ஆலத்தை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. அலுமினியம் அடிப்படையில் உருவாகும் பல படிகாரங்கள் பொதுவான வேதிப் பண்புகளைக் கொண்டுள்ளன. அவை தண்ணீரில் கரைவதோடு இனிப்பு சுவையைக் கொண்டுள்ளன. லிட்மஸ் தாளை அமிலம் போல மாற்றுகின்றன. படிகாரங்களில் ஒவ்வொரு உலோக அயனியும் ஆறு நீர் மூலக்கூறுகளால் சூழப்பட்டுள்ளன. இவை சூடுபடுத்தினால் திரவமாகின்றன. தொடர்ச்சியாக சூடாக்கும்போது திரவமாதல் முடிவுக்கு வந்து படிக உருவமற்ற தூள் எஞ்சுகிறது. நீரில் பல்வேறு படிகாரங்களின் கரைதிறன் மிகவும் மாறுபடுகிறது. சோடியம் ஆலம் நீரில் உடனடியாகக் கரையக்கூடியது. அதே சமயத்தில் சீசியம் மற்றும் ரூபிடியம் படிகாரங்கள் நீரில் மிகக் குறைவாகவே கரையக்கூடியவையாக உள்ளன.

சில படிகாரங்கள் இயற்கையில் கனிமங்களாகத் தோன்றுகின்றன. அவற்றில் அலுனைட்டு மிக முக்கியமானதாகும். முக்கியமான பொட்டாசியம், சோடியம், அமோனியம் படிகாரங்கள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. அலுமினியம் சல்பேட்டுடன் சல்பேட்டு ஒற்றை இணைதிற நேர்மின் அயனியைச் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. பாக்சைட்டு, கிரையோலைட்டு போன்ற கனிமங்களுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதால் அலுமினியம்சல்பேட்டு தயாரிக்கப்படுகிறது.அலுமினியம் அடிப்படையிலான படிகாரங்கள் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல தொழில்துறை செயல்முறைகளில் இன்னும் கூட முக்கியமானவையாக கருதப்படுகின்றன. பொட்டாசியம் படிகாரம் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது பழங்காலம் முதலே திரவங்களை தெளிவுபடுத்துவதற்கு மரபுவழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாயத் தொழிலில் நிறமூட்டுதல் மற்றும் தோல் பதனிடுதல் போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். நீரைத் தூய்மைப்படுத்த, உணவுப் பொருட்களை பதப்படுத்துதல் போன்றவற்றுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள்.

Related posts

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது : சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை!!

முன்னாள் ஊழியரை தாக்கியதாக நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

பழனி பஞ்சாமிர்தம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்