தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் கூட்டணி தயவு இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளனர். கூட்டணி தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: தனித்து வருவோம் என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளனர். கூட்டணி தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றி மகத்தான வெற்றி. எங்களது கூட்டணி சிறப்பான எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் இந்தியா கூட்டணி இந்த வெற்றியை கொண்டாடுவதில் எந்த தவறும் கிடையாது. மகிழ்ச்சியான ஒன்று தான். தமிழ்நாட்டில் முதல்வர் 40க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து, 40க்கு 40 என்ற சபதத்தை நிறைவேற்றி உள்ளார்.

அதிமுகவில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப்போகிறது, என்னென்ன புரட்சி வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழிசை சொன்ன குற்றச்சாட்டை தான் நாங்கள் ஏற்கனவே சொல்லி உள்ளோம். குற்றவாளிகளை பாஜ சேர்த்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். அதற்கு இப்போது தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

பாஜவுக்கு கிடைத்துள்ள வாக்கு வங்கி பாமக மற்றும் அதன் தோழமை கட்சிகளை சேர்த்து வாங்கியுள்ள வாக்கு தானே தவிர பாஜ தனித்து வாங்கிய வாக்குகளாக நாங்கள் கருதவில்லை. எங்களுடைய வாக்கு வங்கி என்றைக்குமே குறையாது. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டால் வரவேற்போம். அப்படி வரக்கூடியவர்களால் தமிழ்நாட்டிற்கு நல்லது கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தோடு வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு