பழங்குடியின குடியிருப்புகளின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின்னர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் சிவகங்கை, ஈரோடு, கடலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்

* திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் நகர்ப்புரத்தில் உள்ள விடுதிகளில் ரூ.9 கோடி செலவில் ஒருங்கிணைந்த சமையலறை மூலம் சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்கும் ‘அமுத சுரபி’ திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் 3000 மாணாக்கர் பயன்பெறுவர்.

* பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கு விடுதிகளில் தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்யும் விதமாக படுக்கை உபகரணங்களான போர்வை கம்பளி மற்றும் அன்றாட தேவைக்கான பொருட்கள் அடங்கிய பெட்டகம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன்மூலம் 10,000 மாணாக்கர் பயன்பெறுவர்.

* பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளை பழங்குடியினரின் தேவைகளின் அடிப்படையில் ரூ.13 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்

* பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கரின் தனித்திறனை வளர்த்துக்கொள்ள திறன் சார்ந்த திட்டம் ரூ.10 கோடி செயல்படுத்தப்படும்

* உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாணாக்கருக்கு ‘உயர் திறன் ஊக்கத் திட்டம்’ ரூ.41 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

* முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர் (Post doctoral Fellowship) வல்லுநர்களின் வகையில் திறமைகளை இளம் பயன்படுத்தும் புத்தாய்வுத் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியை நிலை நாட்ட ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ வகுக்கப்பட்டுள்ளது. இது மகளிரின் பெயரில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கென ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* பழங்குடியினர் குடியிருப்புகளில் கண்டறியப்படும் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் தன்னிறைவு பெற்ற குடியிருப்புகளாக மாற்றிட ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

துணை கமிஷனர் அரவிந்த் மாற்றம் சென்னை உளவுத்துறை இணை கமிஷனராக தர்மராஜ் நியமனம்

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடக்கம்: மீதமுள்ள இடங்களை நிரப்ப 3 நாட்கள் அவகாசம்

தமிழகத்தில் 6 பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணியிடங்களுக்கு 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்பு