கூட்டணி முடிவாகுறதுக்குள்ள தொகுதியில் வேலையை ஆரம்பிச்ச இலை நிர்வாகி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சீட்டிங் காக்கிகளுக்கு புதுச்சேரி டிஜிபி புதுசா எச்சரிக்கை விடுத்திருக்காராமே.. தெரியுமா..’’ என கேள்வி எழுப்பினார் பீட்டர் மாமா.
‘‘ஓ! தெரியுமே… சேலத்தை சேர்ந்த 2 இளைஞருங்க சுற்றுலாவா புதுச்சேரிக்கு வந்திருக்காங்க. நகரை சுற்றிப்பார்த்துட்டு, கடையில ரூ.3 ஆயிரத்துக்கு சோமபானம் வாங்கிக்கிட்டு விடுதியை நோக்கி போயிருக்காங்க. சட்டசபையை சுற்றியுள்ள சாலையில போனப்ப அவங்களை வழி மறிச்ச பெரிய போலீஸ் ஸ்டேஷன் காக்கிகள் இருவர், சரக்குகளை பொது வெளியில் இப்படி ஓப்பனால்லாம் எடுத்துட்டு போக்கூடாதுன்னு அந்த இளைஞர்களை மிரட்டியிருக்காரு. அதுக்கே பயந்துபோன 2 பேரையும் வாங்க ஸ்டேஷனுக்கு போலாம்னுட்டு பக்கத்து தெருவுக்கு அழைச்சுட்டுப்போய், மொத்த சரக்கையும் அபேஸ் பண்ணிட்டு, எக்ஸ்ட்ராவா ரூ.2 ஆயிரத்தை பிடிங்கிக்கொண்டு துரத்திட்டாங்க. என்னடா இது குடிக்க வந்த இடத்தில் இப்படியா நடக்கனும்னு சோகத்தோட சென்றவங்களை, சட்டசபையில் இருந்த அதிகாரி அழைச்சு விசாரிச்சிருக்கார். அவங்க சோக கதையை சொன்னதும் அந்த அதிகாரி, தன் பேரைச் ெசால்லி அந்த 2 காக்கிங்க பேரை கேட்டுவரும்படி அனுப்பியிருக்காரு. அடுத்த வசூலுக்கு ரோந்தில இருந்த காக்கிகள பாத்து பெயரை கேட்டப்ப, போடா…ன்னு எகிறியிருக்காங்க. சட்டசபையில முதல்வருக்கு பக்கத்தில இருக்குற அதிகாரிதான் கேட்டு வரச்சொன்னாருன்னு சொன்னதும், பதறிப்போன காக்கிகள் சரக்கையும், பணத்தையும் திருப்பி கொடுத்துட்டு ஓட்டம் பிடிச்சிருக்காங்க. இந்த விஷயம் டிஜிபி கவனத்துக்குப் போக, சுற்றுலாப்பயணிகளுக்கு யாரேனும் தொல்லை கொடுத்தால் சஸ்பெண்ட்தான் என சீறியிருக்காராம்’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.
‘‘கூட்டணி அறிவிக்கும் முன்னமே போட்டியிட இலை கட்சி நிர்வாகி தயாராகுறாராமே?’’ அடுத்த கேள்வியைப் போட்டார் பீட்டர் மாமா.
‘‘தாமரையுடன் கூட்டணி முறிந்த பின்னர் தமிழ்நாட்டில யாரோட கூட்டணி வச்சி தேர்தலை சந்திக்கிறது, வேட்பாளரா யாரை நிறுத்துவதுன்னுட்டு இலைகட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்காம இருக்குதாம். ஆனா, மயில் நடனமாடிய மாவட்டத்துல இலை கட்சி சார்பில் போட்டியிட மாஜி எம்எல்ஏவும், நகர செயலாளரான கடைசி எழுத்தில் முடியக்கூடிய நாதன் என்பவர் முடிவு செய்துட்டாராம். இந்த முறை கண்டிப்பா எம்பி சீட்டு வேணும்னு சேலம்காரரிடம் பிரஷர் கொடுத்துள்ளாராம். எப்படியும் தனக்கு எம்பி சீட் கிடைத்திடும்கிற நம்பிக்கையில இருக்காராம். தொகுதிக்குட்பட்ட பகுதியில் திரைமறைவில் அதற்கான அனைத்து வேலைகளையும் ‘கப்சிப்’னு நடத்திட்டு வருகிறாராம்… ேசலத்துக்காரரிடம் நெருக்கமாக இருக்கிறதால அவருக்கு எளிதா எம்பி சீட் கிடைச்சுடும்னு சொந்த கட்சிக்குள்ளே அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்டுச்சேவலால் கல்லா குவியுதுன்னு சொல்றாங்க.. அந்த கதை என்ன” என்று ஆவலாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை புறநகர் காவல் எல்லைக்குள்ள பிரபலமான கோவில் அருகே மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு காவல்நிலையம் இருக்கு. இங்கு, “ராணி’’ பெயர் கொண்ட ஒரு பெண் ஆய்வாளர் பணியாற்றுறாரு. இவரு, நவீன முறையில கரன்சி குவிக்கிறதில் கில்லாடியாம். சமீபத்தில, பொங்கல் பண்டிகையையொட்டி, கட்டுச்சேவல் ரெய்டுக்கு போயிருக்கார். தடையை மீறி சேவல் சண்டை நடத்தும் கும்பலை தேடிச்சென்று, சேவல்களை பறிச்சுட்டாரு. சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களையும் பிடித்து வந்துள்ளார். அவங்க மீது வழக்கு பதியாமல் இருக்க, கரன்சி கேட்டிருக்கார். இப்படி ஒரே நாள்ல கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபா வசூலாகியிருக்காம். ஆனா, வெறும் 9 ஆயிரம் ரூபாய் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதா அரசுக்கு கணக்கு காட்டியிருக்காரு. மீதியை தனது பாக்கெட்டில திணிச்சிட்டாராம். இதேபோல், டாஸ்மாக் கடை விடுமுறை நாட்கள்ல, சட்டத்துக்கு புறம்பா சரக்கு விற்க, சில கும்பலை அழைத்து, இவரே ஐடியா கொடுத்திருக்கார். அதாவது, டாஸ்மாக் கடையில இருந்து சரக்கு எடுத்துவந்து, வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்க அனுமதி குடுத்திருக்கார். இதற்கு கமிஷனா, பாட்டில் ஒன்னுக்கு ரூ.25 வசூல் செய்திட்டாராம். இப்படியும், பல லட்சம் ரூபாய் தேறியிருக்காம். கரன்சி குவிக்க, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க… பாருங்கிறாங்க நேர்மையான காவலர்கள்” என்று விலாவாரியா விவரித்தார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில நீயா- நானான்னு பனிப்போர் அதிகமாகிடுச்சாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஒருங்கிணைந்த வெயிலூருல இலைகட்சி மாஜி மந்திரி வீரமானவரு ஒரு காலத்துல தெம்பா வலம் வந்தாரு. ஆட்சி மாற்றத்தால ஆளு அட்ரஸ்சே இல்லாம போய்ட்டாராம். இதுல மாவட்டம் பிரிஞ்சதுக்கு அப்புறம், 3 மாவட்டத்துல 4 டிஸ்ட்ரிக் செக்ரட்ரிகள் இருந்தாங்க. வீரமானவர் தலைமைக்கு எப்படி நெருக்கமோ, அதுபோல குயின்பேட்டை 2 எழுத்துக்காரரும் நெருக்கம். இதனால நாம இருக்கும்போது, இன்னொருத்தர் இருந்தா எப்படின்னு சமயம் பார்த்துகிட்டிருந்தாராம். அதுபோல, தனக்கு வேண்டியவருக்கு குயின்பேட்டைய பாதியா பிரிச்சு டிஸ்ட்ரிக் பதவிய வாங்கி கொடுத்தாராம். ஆரம்பத்துல நல்லா போகுற மாதிரி போச்சாம். இப்பத்தான் வீரமானவரு ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்காராம். குயின்பேட்டையில இருக்குற 2 எழுத்துகாரரோட, போட்டோ, பெயரு எதுவும் கட்சி நிகழ்ச்சிகள்ல இடம் பெறுவதே இல்லையாம். இப்படி ஒருங்கு இணைஞ்ச வெயிலூர் மாவட்டத்துல இலைகட்சியில நீயா, நானான்னு வீரமானவருக்கும், 2 எழுத்துக்காரருக்கும் பனிப்போர் அதிகமாகிடுச்சாம். இது வர்ற நாடாளுமன்றத்தோட தேர்தல்லயும் எதிரொலிக்கும்னு ரத்தத்தின் ரத்தங்களே பேசிக்கிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!