கூட்டணிக்கு யாருமே வரல… நட்டா வர்றார் நாளைக்கு சென்னையில் தமிழக பாஜ தலைவர்களுடன் முக்கிய பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் யாரும் கூட்டணி வைக்க முன்வராத நிலையில், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை சென்னை வருகிறார். அவர் தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜ, கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. தனித்து போட்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சிறிய கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க பாஜ முடிவு செய்துள்ளது. ஆனால் பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று கருதும் கூட்டணிக் கட்சியினர் தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுகவிலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டணியை இறுதி செய்யும் பணியை தொடங்கி விட்டார். அவர் கூட்டணியில் உள்ள தலைவர்களை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜ கூட்டணியில் உள்ள தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட கூட்டணியை இறுதி செய்ய மறுத்து வருகின்றன. இந்த நிலையில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 11ம் தேதி (நாளை) சென்னை வருகிறார். பாஜ நிர்வாகிகள் சந்தித்து பேசுகிறார். புதிய கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் பொது கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். காட்டாங்கொளத்தூர் அருகே பாஜ மாநில நிர்வாகிகள், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். கீழ்ப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ஜே.பி.நட்டா பங்கேற்று பேச உள்ளார்.

* 100 லட்சம் கோடியாம்பு.. அள்ளி விடுறார் அண்ணாமலை
கடந்த 10 ஆண்டுகளில் தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றி விட்டதாக தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை சென்று வருகிறார். திருவள்ளூருக்கு நேற்று வந்த அவருக்கு பாஜவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, அண்ணாமலை பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பாஜ அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அளிக்கப்போகும் வாக்குறுதிகளையும் பாஜ நிறைவேற்றும். கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மருத்துவ படிப்புக்கான இடம் 57 ஆயிரத்து 592 ஆக இருந்த நிலையில் தற்போது 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி இலவச வீடு திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்தியா முழுவதும் ரூ.100 லட்சம் கோடியில் கிராம சாலைகள் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* செல்லா காசுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: மாஜி மந்திரிகளை சீண்டிய மலை
கும்மிடிப்பூண்டி பஜாரில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘‘எங்களோட கூட்டணியை ஏன் முறிச்சார்னு தெரில. உண்மையான காரணத்தை எடப்பாடி பழனிசாமிகிட்ட தான் கேக்கணும். ஜெயக்குமார் சொல்ற மாதிரி அதிமுக கதவ நாங்க யாரும் தட்டல. மூடியிருக்கிற அந்த கதவ உடைச்சுட்டு தான் எங்ககிட்ட வர்றாங்க. நான் எல்லாம் ஒரு ஆளானு அதிமுக மாஜி மந்திரிகள் பேசுறாங்க. அந்த செல்லாகாசுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டிருக்க முடியாது. காலைல இருந்து இரவு வரை, ‘அண்ணாமல, அண்ணாமல’னு என் பேரைத்தான் அவங்க உச்சரிச்சுட்டு இருக்காங்க..’’ என்றார்.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!