கூட்டணியே கன்பார்ம் ஆகல… மல்லுக்கட்டுக்கு மட்டும் பஞ்சமே இல்ல…பாஜவில் நடக்கும் உள்குத்து பரபரக்கும் தென்மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் வருகைக்காக கதவு மற்றும் ஜன்னல் வரைக்கும் திறந்து வைத்து காத்திருக்கும் பாரதிய ஜனதாவை, ஏற்கனவே அவர்களுடன் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சிகள் கூட இதுவரை கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக பாரதிய ஜனதா பெரிதும் நம்பியிருந்த பாமக, தேமுதிக கூட அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை இறுதி கட்டத்திற்கு கொண்டுவந்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு இதுவரை சிறு, சிறு கட்சிகளே வந்துள்ளன.

கட்சிக்கு வெளியில் இருந்துதான் சிக்கல் என்றால், இப்போது கட்சிக்கு உள்ளே இருந்தும் தலைவலி ஆரம்பமாகி இருக்கிறதாம். பாரதிய ஜனதா கட்சியில் சீட் கேட்டு மல்லுகட்டுபவர்களை விட, தங்களது எதிர்முகாம் ஆட்கள் எப்படியும் சீட் வாங்கி விடக்கூடாது என்பதையே கவனமாகக் கொண்டு தேர்தல் களத்தில் தீவிர வேலை பார்க்கிறார்களாம் தென்மாவட்ட பாஜகவினர். இதனால், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்ட தொகுதிகளில் உள்குத்து வேலைகளுக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாய் போய் கொண்டிருக்கிறதாம்.

மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எப்படியும் இந்த முறை பெற்றுவிட வேண்டும் என்ற முடிவில் நீண்டகால கட்சியினரும், டெல்லி மேலிடத்திற்கு வேண்டியவர்களும் காய் நகர்த்தி வருகிறார்களாம். இவர்களுக்கு எப்படியும் சீட் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக மாநிலத் தலைவரின் கீழ் இயங்கும் பிரிவினர் அவர்களுக்கு எதிரான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனராம். ‘கட்சியில் தற்போது தீவிர பணியில் இல்லை. தேர்தல் நேரத்திற்கு மட்டும் வந்து தலை காட்டுகிறார்.

மாற்று கட்சியினருடன் தொடர்பு வைத்துள்ளார் என சரமாரியாக புகார்களை தட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்களாம். மதுரையில், சமீபத்தில் நடந்த தகுதியான வேட்பாளரை தேர்வு செய்யும் மாதிரி வாக்குப் பதிவில் அடிதடி சண்டை அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதோடு நிற்காமல் நீண்டகாலமாக கூட்டணியில் பயணிக்கும் சமுதாய அமைப்பினர் இருவரை கையை காட்டி, அவர்களுக்கு சீட் கொடுப்பதே சிறப்பானது என்றும் கூறிவருகின்றனராம்.

மதுரையில் இந்த நிலைமை என்றால், விருதுநகர் மாவட்ட கூத்தோ வீதிக்கே வந்துவிட்டது. மாநில பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் ஒருவர் எப்படியாவது எம்பி ஆகிவிட வேண்டும் என்ற கனவில் சில ஆண்டுகளாகவே களத்தில் இறங்கி வேலை பார்த்துவந்தார். முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமுதாய அமைப்பினரை சந்தித்து தனக்காக ஆதரவு கேட்டுவந்தார். அவர் வேலைக்கு பிரேக் போட்டது சமக தலைவர் சரத்குமார் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு என்ற தகவல்.

இதனால், ஆத்திரத்திற்கு சென்ற பேராசிரியருக்கு அடுத்த அடியை கொடுத்துள்ளார் டாக்டர் வேதா என்பவர். அவரோ தனக்கு தான் சீட் ஒதுக்க வேண்டுமென கட்சி தலைமைக்கு வேண்டியவர்கள் மூலம் நெருக்கடி கொடுத்துவருகிறார். இதனால், விருதுநகரிலும் பைட் சீனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலோ கடந்த இரண்டு ஆண்டுகளாக கோஷ்டி பூசலுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இதனால், கொலை முயற்சி சம்பவம் வரை அரங்கேற்றம் நடந்தது.

இதில் தற்போதைய மாநிலத் தலைவர் மற்றும் மாஜி நிர்வாகிகள் தரப்பு என இருபிரிவாகவும் சமுதாய ரீதியாகவும் தனித்தனியாக பிரிந்து கிடக்கின்றனராம். இதனால், டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் ராமநாதபுரத்தை கைப்பற்றும் வேலையில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனராம். சிவகங்கை மாவட்டத்திலோ, பழைய கட்சிக்காரர்கள் அணி, மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்கள் அணி என்றும் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களில் தனித்தனி அணி என்றும் அணிகளுக்கு குறையில்லாமல் சென்று கொண்டிருக்கிறதாம்.

இதனால், தன்னை யாரும் சீண்டுவதில்லை என புலம்பும் பரபரப்புக்கு பேர் போன மன்னர் தரப்பு சமீபகாலமாக சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறதாம். தற்போதைய மாவட்டத் தலைவர் தரப்பும், இலையில் இருந்து வந்த மாஜி எம்எல்ஏ தரப்பும் தற்போது மாநிலத் தலைமையை சரி செய்யும் பணியில் கவனம் செலுத்தி வருகிறதாம். ஆனால், இவர்களில் யாருக்கு சீட் கிடைத்தாலும், எந்தவொரு தரப்பும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது என தீர்மானமாக உள்ளனராம்.

இதனால், சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து கங்கை கரை வரை போகாமல் இருந்தால் சரி என பழைய கட்சிக்காரர்கள் புலம்புகின்றனராம். திண்டுக்கல்லை மாம்பழ கட்சிக்கும், தேனி தொகுதியை தர்மயுத்தம் தரப்புக்கும் ஒதுக்க முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால், இங்குள்ள பாஜவினர் இவர்களிடம் இருந்து எவ்வளவு பசை கிடைக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனராம். நெல்லையில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ சீட் கேட்கிறார். அவருக்கு இல்லாத பட்சத்தில் வாரிசுக்கு கேட்கிறார்.

ஆனால், இருவருக்கும் சீட் கொடுக்க கூடாது என அல்வா மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டி எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தென்காசியில் பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் பணத்தை வாரி இறைக்கிறார். அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரை களமிறக்க திட்டமிட்டுள்ளார். தூத்துக்குடியிலும் போட்டியிட ஆளுநர் முட்டி மோதி வருகிறார்.

அவருக்கு போட்டியாக அதிமுகவில் இருந்து வந்த மாஜி பெண் எம்பி மல்லுக்கட்டு வருகிறார். பண பலத்துக்கும், விஐபிக்கள் சீட் கொடுத்தால் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் போஸ்டர் மட்டும்தான் ஒட்டணுமா என்று தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர். எதுவாக இருந்தாலும் கூட்டணி பேரங்கள் முடிந்து, தொகுதி ஒதுக்கீடு செய்து வேட்பாளர்கள் அறிவித்தால் மட்டுமே பாஜவில் நடக்கும் உள்குத்து முடிவுக்கு வரும்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்