பாஜவுடன் கூட்டணி எதிரொலி மஜத சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கூண்டோடு ராஜினாமா

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள இஸ்லாமிய வகுப்பை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மஜதவில் இருந்து நாளை கூண்டோடு ராஜினாமா செய்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் வாழும் சிறுபான்மை வகுப்பினரின் வாக்குகள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த பல இஸ்லாமிய தலைவர்கள் முன்னாள் பிரதமர் தேவகவுடா மீதான நம்பிக்கை காரணமாக மஜதவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இதனால் மஜத சிறுபான்மை வகுப்பினரின் வாக்கு வங்கியதாக கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட மஜத உறுதி செய்தது. இது இஸ்லாமிய தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேற்கண்ட தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி கட்சி தலைமை மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மஜத தலைமையின் முடிவு காரணமாக அதிருப்தியில் உள்ள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அவரை தொடர்ந்து சில மூத்த தலைவர்கள் விலக முடிவு செய்துள்ளனர். இதனிடையில் மஜத கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத் தலைமையில் மஜதவில் உள்ள சிறுபான்மை வகுப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகி, அதற்கான ராஜினாமா கடிதத்தை நாளை கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கிறார்கள். பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது மிகுந்த வேதனை ஏற்படுத்துகிறது என்று அப்துல் காதர் ஷாஹித் வருத்ததுடன் தெரிவித்தார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!