கூட்டணிக்காக போன் அடிச்சார் மோடி; எடுக்கல எடப்பாடி.. பட்டியலுடன் டெல்லிக்கு பறந்தார் அண்ணாமலை

சென்னை: கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடியின் அழைப்பை, எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தார். அதேநேரத்தில் தமிழகத்தில் 39 தொகுதிக்கும் வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.

அதிமுக, பாஜ கூட்டணி உடைந்ததால், இருவரும் தனி அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தென் மாநிலங்களில் பாஜ முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா, தெலங்கானாவில் ஓரிரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் தனது கவனத்தை பாஜ செலுத்தியது. இதற்காக தென் மாநிலங்களுக்கு கூட நிதி வழங்காமல், வட மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கினர். மேலும், பல கட்சிகளை உடைத்து புதிய கட்சிகளை உருவாக்கி, அவர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டனர். இந்தியா கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகளை இழுத்து புதிய கூட்டணிக்கு முயன்றனர்.

ஆனால் அந்தக் கூட்டணிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் பீகார், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் பாஜ திணறி வருகிறது. அதேநேரத்தில் வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பாஜ என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இதனால் தமிழகத்தில் அதிமுக கூட்டணியை புதுப்பிக்க பாஜ மேலிடம் முடிவு செய்தது. இதற்காக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரைக் கூட கூட்டணியில் சேர்க்காமல் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் வைத்துள்ளனர். ஆனால் எவ்வளவுதான் அவமானப்படுத்தப்பட்டாலும் கூட்டணிக்காக அவர்கள் இருவரும் பாஜவின் அலுவலக வாசலில் காத்திருக்கும் பரிதாப நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாஜவோ எடப்பாடியை சமாதானப்படுத்தும் பணியை மேற்கொண்டது.

இந்தநிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு எடப்பாடி பழனிசாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டார். டெல்லியில் இருந்து அழைப்பு என்பதால், பழனிசாமி லைனில் வர மறுத்து விட்டார். மோடியிடம் பேசவும் மறுத்து விட்டார். இதனால், மோடி தரப்பில் இருந்து அதிமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான 2 பேரை தொடர்பு கொண்டு, நேற்று மாலை 6 மணிக்குள் அதிமுக கூட்டணி குறித்த முடிவை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவரைதான் காத்திருப்போம். அண்ணாமலைதான் உங்களுக்கு பிரச்னை. இதனால் மோடியே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால் கூட்டணிக்கு நாங்கள் வருகிறோம் என்று வெளிப்படையாக அறிவியுங்கள். மாலைக்குள் கூட்டணிக்கான சாதகமான முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மோடியின் இந்த தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக மூத்த தலைவர்கள் 2 பேர் தெரிவித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, இப்போதுதான் சிறுபான்மையினர் நம்மை நம்பத் தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்துக்காக பாஜ எதுவும் செய்யவில்லை. இப்போது பாஜவுடன் சேர்ந்தால், நாமும் அழிந்து விடுவோம். நம் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். இதனால் துணிந்து முடிவு எடுத்துள்ளோம். அதில் பின்வாங்கா மாட்டோம் என்று உறுதியான முடிவை அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். இந்த தகவலை பாஜ மேலிடத்தில் நீங்களே கூறிவிடுங்கள் என்றும் கூறிவிட்டார். இந்த தகவல் பாஜ மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பாஜவினர் மாலை 6 மணி வரை காத்திருந்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

இதனால் தனி அணி அமைக்க பாஜ முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வரும்படி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அவரும் விரைந்துள்ளார். 39 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலுடன் சென்றுள்ளார். பாமகவும் கூட்டணிக்கு வரலாம் என்று பாஜ கருதுகிறது. இதனால், முதல் கட்டமாக 5 முதல் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, 2வது பட்டியலுடன் வெளியிட மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அன்புமணிக்கு ஆசை காட்டி அழைக்கும் பாஜ
அதிமுக கூட்டணிக்கு வர மறுத்து விட்டதால், பாமகவை எப்படியாவது இழுக்க வேண்டும் என்று மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தருகிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இதனால் ஓரிரு நாளில் அன்புமணி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் ஒன்றிய அமைச்சர் தருவதாக கூறும் பாஜ ஏன் 10 ஆண்டுகளாக தரவில்லை. மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறவர்கள், எப்படி மீண்டும் அமைச்சர் பதவி தருவார்கள் என்று பாமகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் ஒன்றிய அமைச்சராக வேண்டும் என்று நினைக்கும் அன்புமணி, பாஜ மேலிடத்துடன் கூட்டணி பேசுவதற்காக டெல்லி செல்கிறார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவுடனும் பாமக தொடர்ந்து பேச திட்டமிட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரு தரப்பினருடன் பேசி கடைசி நேரத்தில் முடிவு எடுக்க பாமக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!