கார் அலர்ஜிக்கு இயற்கையான தீர்வு…

‘காரில் ஏறி அமர்ந்தவுடனேயே தலைவலியும் தலை சுற்றிலும் வருது’, என் குழந்தைகள் காரில் ஏறிய உடனே குமட்டல், வாந்தி என காரையே வீணாக்கிடுறாங்க…. இந்த பிரச்னை இப்போது பெருகி வரும் கார்களால் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரூ.30,000 சம்பளம் வாங்குவோர் கூட செகண்ட் ஹேண்ட் கார்கள் வாங்கும் முயற்சிகள் செய்கிறார்கள். காரணம் காலநிலை, மாற்றம், குடும்பமாக ஒன்று சேர்ந்து ஒரு பயணம் என திட்டமிட்டாலே பெரும் பிர்ச்னையாக நிற்பதே ‘எதில் செல்லப் போகிறோம்?’ என்கிற கேள்விதான். பேருந்து, இரயில் என கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு காரின் பெட்ரோலுக்கு நிகராக செலவு ஆகத்தான் செய்கிறது. அதற்காகவே இந்தக் கார் வாங்குவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக பெருகிவருகிறது.

கார் சிக் அல்லது கார் அலர்ஜி, அதாவது சின்ன அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு நகர்ந்து செல்லும் வாகனங்களில் இந்த கார் அலர்ஜியான தலைவலி, தலை சுற்றல், குமட்டல், வாந்தி, மயக்கம் என பலருக்கு உண்டாகும். குறிப்பாக பித்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு கார் போன்ற சின்ன வாகனங்களில் ஏறி அமர்ந்த உடனேயே இந்த கார் சிக் அல்லது கார் அலர்ஜி வருவது பொதுவானபிரச்சனை. பெரும்பாலும் காரை தினம்தோறும் சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருப்பதால் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் கார் நறுமணத் திரவங்களையும் பொருத்தலாம். ஆனால் பலருக்கும் இந்த கார் சென்ட் நறுமணமே கூட தலைவலியை உண்டாக்கும் பட்சத்தில் இதற்கு தீர்வாக இயற்கையான மூலிகைகளைக் கொண்டு கார் சென்ட் பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி. எப்படி இந்த ஆலோசனை தோன்றியது தற்போது இதன் விற்பனையும் தொழிலும் எந்த அளவிற்கு இருக்கிறது விவரமாக பேச துவங்கினார் பிரியதர்ஷினி.

‘கார் ஏர் ஃப்ரெஷ்னர், என ஆங்கிலத்திலும் அல்லது கார் காற்று தூய்மையாக்கி என தமிழிலும் சொல்லலாம். நெட்வொர்க்கிங் துறையில் இங்கிலாந்தில் படிச்சு முடிச்சேன். தொடர்ந்து சென்னை வந்த புதிதில் ஹெச் ஆர் மேனேஜராகவும் சில நாட்கள் வேலை செய்தேன். நல்ல சம்பளம் நல்ல வேலை ஆனாலும் ஏதோ என் வேலையில் சுவாரஸ்யம் குறைவதாகவே தோன்றியது. பிறகு குடும்பம் குழந்தை என சில நாட்கள் வீட்டில் இருந்த போது என்னுடைய கணவருக்காகத் தான் இந்த ஆர்கானிக் கார் ஏர் ஃப்ரெஷ்னரை உருவாக்க ஆரம்பிச்சேன். இப்போது இது சிறு பிசினஸ் ஆகவே உருவாகி இருக்கிறது. எனக்கும் என் கணவருக்கும் காதல் திருமணம் தான். நிறைய பிரச்னைகள், சவால்களுடன் தான் கல்யாணம் முடிஞ்சது. எனக்கும் என் கணவருக்கும் கூடுமானவரை நம்மைச் சுற்றி இருக்கிற அத்தனையும் இயற்கையான ஆரோக்கியமான பொருட்களாக இருக்கணும் என விரும்புவோம். குழந்தைக்கு டயப்பர் கூட நாங்கள் ஒரு நாளும் பயன்படுத்தியதே கிடையாது. சுத்தமான காட்டன் துணிகள் தான் பயன்படுத்தினோம். அதேபோல் அவளுக்கும் இந்த கடைகளில் விற்கும் பாக்கெட் ஸ்நாக்ஸ், கூல் ட்ரிங்ஸ், ஜங்க் உணவுகள், இப்படி எதையுமே வாங்கிக் கொடுத்ததே கிடையாது. எல்லாமே வீட்டில் செய்யக்கூடிய உணவுகள் தான்’ என வாழ்க்கை முறையில் குடும்பமாகவே கண்டிப்புடன் இருக்கும் பிரியதர்ஷினி இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னர் தயாரிப்பு குறித்து மேலும் விவரங்களை
அடுக்கினார்.

‘பெரும்பாலும் மார்க்கெட்டில் இருக்கக்கூடிய அத்தனை செயற்கை அல்லது கெமிக்கல் புராடக்டுகளுக்கும் பதிலாக இயற்கையாக என்ன செய்யலாம் அப்படின்னு அதிகம் யோசிச்சுக்கிட்டே இருப்போம். அந்த பட்டியலில் சேர்ந்தது தான் இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னர். என் கணவருக்கு அதிகம் காரில் பயணிக்க பிடிக்கும். ஆனால் ஒரு சில நேரங்களில் அதீத தலைவலியாலும் குமட்டலாலும் நிறைய பிரச்னைகளை சந்தித்தார். இதற்கு இயற்கையான தீர்வு யோசிச்சு தான் இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னரை உருவாக்க துவங்கினேன். ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் ஏலக்காய், பட்டை, கிராம்பு இப்படியான வாசனைப் பொருட்களை ஆங்காங்கே காரில் போட்டு வைக்க என்னுடைய கணவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்த கார் அலர்ஜி பிரச்னை சரியானது. இதையே ஏன் ஒரு துணியில் முடிச்சுப் போட்டு காரின் மூலைகளில் போடக்கூடாது எனத் தோணுச்சு. இது தொடர்ந்து ஒவ்வொரு வாசனை மூலிகைகளா சேர்க்க ஆரம்பிச்சு இப்ப முழுமையான ஒரு கார் ஏர் ஃப்ரெஷ்னரா மாறி இருக்கு’ என்னென்ன புராடெக்டுகளை இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னர் முடிப்பில் பிரியதர்ஷினி சேர்க்கிறார் என மேலும் தொடர்ந்தார்.

‘இந்த ஐடியாவை எங்களுக்கு கொடுத்தது என்னுடைய அம்மாதான். அம்மா எப்போதுமே காய்கறிகள், பழங்கள் கூட பெரும்பாலும் வீட்டில் இருக்கும் மாடி தோட்டத்தில்தான் எடுத்து சாப்பிடணும்னு நினைப்பாங்க. அதன்படியே எங்க வீட்டுக்கும் சேர்த்து இப்போ அம்மாவுடைய மாடித் தோட்டத்தில் இருந்து தான் காய்கறிகள் எல்லாம் வருது. அவங்கதான் என் வீட்டுக்காரருடைய இந்த அலர்ஜி பிரச்னைக்கு தீர்வாக ஏன் வாசனை பொருட்களை பயன்படுத்தக் கூடாது அப்படின்னு கேட்டாங்க. தொழில் சார்ந்த கொள்கை என்கிறதால இதில் நான் பயன்படுத்துகிற அத்தனை மூலிகைகளையும் சொல்ல முடியாது. காரணம் புதிதா ஏதாவது ஒரு தொழில் தொடங்கினாலே போட்டிக்கு நிறைய பேர் அதேபோல டூப்ளிகேட் செய்ய துவங்கிடுறாங்க, அதனால் இந்த முடிவு. ஏலக்காய், பட்டை, இப்படியான உணவுகள்ல பயன்படுத்துற வாசனை பொருட்கள்தான் இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னர்ல நான் பயன்படுத்துறேன். எங்களுக்கு நாங்களே பல மாதங்கள் ஒவ்வொரு மூலப்பொருளா சேர்த்து, குறைத்துக் கூட்டி எது சரியான நறுமணம் கொடுக்குது எது சுவாசத்தை இடைஞ்சல் செய்யாம இருக்கும். இப்படி முழுமையான புராடெக்டை உருவாக்கவே எங்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டுச்சு. மேலும் இது கார் அலர்ஜியை மட்டும் சரி செய்யறதோடு இல்லாம சில நம்பிக்கைகளுக்கும் உதவி செய்யும்.

அதாவது ஏலக்காய் இருக்கும் இடத்தில் செல்வம் இருக்கும்ன்னு சொல்லுவாங்க அதே போல் பட்டை வாசனை அதிகம் இருக்கும் போது உடலிலும், மனதிலும் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்ன்னு சொல்லுவாங்க. இப்படியான பலன்களையும் கூட இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னர் கொடுக்கும். அதேபோல. சிலர் ரோஜா, எலுமிச்சை, பழங்கள் சார்ந்த பிளேவர்களை பயன்படுத்தலாமே அப்படின்னு கேட்டாங்க. நான் இதை ஒரே நறுமணமாக தொடர்ந்து கொடுக்கணும்னு நினைக்கிறேன். மேலும் ஏராளமான ஃப்ளேவர்கள் இருக்கும் பொழுது பயன்படுத்துற வாடிக்கையாளர்களுக்கும் எது அவங்களுக்கு செட்டாகும் என்பதில் குழப்பம் உண்டாகும். ஒரு சிலருக்கு எலுமிச்சை மணம் பிடிக்காது, ஒரு சிலருக்கு மல்லிகை மணம் தலைவலியை உண்டாக்கும். அதனால் இப்படியான சோதனைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டாம் என நான் முடிவு செய்தேன். மேலும் ரோஜா, எலுமிச்சை, பழங்கள் சார்ந்த ஃப்ளேவர்களை கொடுக்கணும்னு நான் முயற்சி செய்தால் திரும்பவும் நான் கெமிக்கல் எசென்ஸ்களுக்கு தான் போகணும். அதனால் எந்த செயற்கை வாசனை எசென்ஸ்களும் சேர்க்கக்கூடாது என்கிறதிலும் கறாரா இருக்கேன்‘ கெமிக்கலே இல்லை என்றாலும் இதிலும் சில சிக்கல்கள் இருக்கு என்கிறார் பிரியதர்ஷினி.

‘பிரியாணியில் ரெண்டு மூணு ஏலக்காய் அதிகமாகிட்டாலே சாப்பிடற ஆசையே போயிடும். தப்பித்தவறி கிராம்பை கடிச்சிட்டா அடுத்து சாப்பாடே எடுக்காது. அப்படிதான் இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னரும் ஒரு மூலப்பொருள் கொஞ்சம் அதிகமாகிட்டா கூட அதுவே இன்னும் தலைவலியை உண்டாக்கும். அதனாலயே மிக்ஸியிலோ அல்லது மெஷினிலோ நான் அரைக்கிறதே கிடையாது. எல்லாமே கைகளில் அளவு பார்த்து சிறிய உரலில் இடிச்சு ஒவ்வொரு பாக்கெட்டுகளையும் தயார் செய்யறேன். தொடர்ந்து என் கணவருடைய ஆபீஸ் பிரெண்ட்ஸ் என்னுடைய சொந்தக்காரங்க அக்கம் பக்கத்தார் இப்படி எல்லோரும் எங்க காரில் ஏறும்போது இந்த வாசனை பற்றி கேட்க ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரா அவங்களுக்கு செய்து வாங்க ஆரம்பிச்சாங்க. இப்போ இது எனக்கு ஒரு சின்ன பிசினஸாவே மாறி இருக்கு. முழுவதும் மூலிகைகள் என்கிறதால் ஒரு மாதம், ரெண்டு மாதங்கள் எல்லாம் இந்த ஏர் ஃப்ரெஷ்னர் வராது. அதிகமாக 25 நாட்கள் பயன் தரும். மேலும் இதில் பயன்படுத்துகிற துணியும் சுத்தமான காட்டன் துணிகள்தான். காரில் மட்டுமின்றி பீரோ, அலமாரிகளிலும் கூட இதை பயன்படுத்தலாம்’ என்னும் பிரியதர்ஷினியிடம் ரூ.150 முதல் இந்த கார் ஏர் ஃப்ரெஷ்னர்கள் விற்பனைக்கு இருக்கின்றன.
– ஷாலினி நியூட்டன்

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி