குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு எல்லாம் நல்ல போஸ்ட்டா என குமுறும் காவல்துறை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘ரெவின்யூ கோட்ட பெண் அதிகாரி பட்டியல் போட்டு சம்திங் வாங்குவதால மாதக்கணக்கில் சான்றுகள் கிடைக்காம பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் ரெவின்யூ கோட்டத்தில் பெண் அதிகாரி ஒருத்தர் பணிபுரிந்து வர்றாரு.. இவர்தான் அந்த கோட்டத்துக்கு உட்பட்ட பட்டா பெயர் மாற்றம், திருத்தம், இறப்பு சான்றுன்னு விண்ணப்பங்களை வாங்கி சரிபார்த்து வழங்கணும். ஆனா, அலுவலகத்துக்கு வர்ற விண்ணப்பங்கள் ஒவ்வொரு மேஜையாக தாண்டி போறதுக்குள்ள பல மாதம் ஆகிடுதாம்.. ஒவ்வொரு சான்றுக்கும் ஒரு பட்டியல் போட்டு சம்திங் வாங்குறதா குற்றச்சாட்டுகள் எழுந்திருக்குது.. எந்த மனு கொடுத்தாலும், அந்த மனுக்களை மாத கணக்கில் வெச்சிருந்து செய்றாங்களாம்.. அந்த ஆபீசுக்கு போற பொதுமக்களை இன்று போய், நாளை வா என்ற கதையாக அலைக்கழிக்குறதால ஜனங்க ரொம்பவே அதிருப்தியில இருக்குறாங்களாம்.. இதனால மாவட்டத்துல மக்கள் அதிகளவுல சென்று வர்ற அந்த ரெவின்யூ ஆபீசுல தேங்கி கிடக்குற ஆவணங்களை ஆய்வு செய்து, தேவையான சான்றுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பணிகள் முறைகேடு விஷயத்தில் டெண்டர் ரத்து, அதிகாரிகள் சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறாராமே மாஜி ஷாக் அமைச்சரின் உறவினர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலைக்கட்சியின் மாஜி ஷாக் அமைச்சரின் உறவினரான நான் கெழுத்து காரர், இலைக்கட்சி ஆட்சிக்காலத்தின்போது நிழல் அமைச்சர் போலவே செயல்பட்டு வந்தார். அமைச்சரை காட்டிலும் தன்னை முன்னிலைப்படுத்தி, கட்சியினரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இவரது நடவடிக்கை பிடிக்காமல் கட்சி மாறியவர்கள் ஏராளம். இவரால் அதிருப்தியடைந்த கட்சி நிர்வாகிங்க, மேலிடத்துக்கு பிரச்னையை கொண்டு போக, மாஜி ஷாக் அமைச்சரின் ராசியான தொகுதியே மாற்றப்பட்ட வரலாறு எல்லாம் இருக்கு.. தற்போது ஆட்சி மாறினாலும், இன்னும் அதே கெத்துடன் அலைந்து கொண்டிருப்பதால் நிர்வாகிங்க மீண்டும் முகம் சுளிக்கின்றனராம்.. தற்போது இவர் யூனியன் தலைவராக இருக்கிறாரு.. இவர் மீது இலைக்கட்சி ஒன்றிய கவுன்சிலர்களே கடும் அதிருப்தியிலதான் உள்ளார்களாம்..

சமீபத்தில் கூடரூ.1.50 கோடிக்கும் அதிக மதிப்பிலான பணிகளை முறைகேடாக ஒதுக்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. டெண்டரும் ரத்து செய்யப்பட்டதுடன், 4 அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வைச்சிருக்கு.. இவர் ஒதுக்கீடு செய்த டெண்டர்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென கோரிக்கை வலுத்து வருது.. முதலில், ‘அதிகாரிகளைத்தானே சஸ்பெண்ட் செய்தாங்க..’ என வெளியில் பேசிக் கொண்டு திரிந்தவர், தற்போது தன் மீது நடவடிக்கை பாயுமோ என நெருங்கிய ஆதரவாளர்களிடம் அச்சத்தோடு பேசி வருகிறாராம்.. வாய்ப்பு கட்டாயம் உண்டு என்பதே தற்போது பூட்டு மாவட்டத்தில் முக்கிய பேச்சாக ஓடுகிறது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்துக்காரர் மீது ரொம்பவே மன வருத்தத்தில் இருக்கிறாராமே மாஜி அமைச்சர். அவரு யாரு’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் வழக்கில் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இவரை சந்திப்பதற்காக சில தினங்களுக்கு முன் சேலத்துக்காரர் வீடு தேடி வந்து அவரிடம் நலம் விசாரித்தாராம்…. அவருடன் மாஜி அமைச்சர் உள்பட முக்கிய நிர்வாகிகளும் வந்து இருந்தாங்களாம்.. சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்து பேசிய அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு போயிட்டாங்களாம்.. இது மாஜி அமைச்சருக்கு ரொம்பவே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்… பெயரளவுக்கு தான் தன்னை வந்து சேலத்துக்காரர் பார்த்து விட்டு போயிருக்கிறாரு.. சிறிது நேர சந்திப்புக்கு எதற்கு வரவேண்டும். அதற்கு சேலத்துக்காரர் வராமலே இருந்திருக்கலாமேன்னு தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் புலம்பி தள்ளி இருக்கிறாரு.. தற்போது, இந்த டாப்பிக் தான் டெக்ஸ்டைல் மாவட்டத்தில் இலை கட்சியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல முக்கியமான நிர்வாகிக்கு எதிராக ஒன்று சேர்ந்து கோஷ்டியை வலுவாக்கப் போறாங்களாமே இலைக்கட்சிக்காரங்க…’’ என அடுத்த கேள்விக்கு போனார் பீட்டர் மாமா.

‘‘கடைக்கோடி மாவட்டத்தில் இலை கட்சியில் கோஷ்டி மோதல் தலைதூக்கி இருக்கிறதாம்.. எதிரிக்கு, எதிரி நண்பன் என்பது போல் ஒரு கோஷ்டிய பிடிக்காதவங்க, மற்றொரு கோஷ்டில போய் ஐக்கியமாகி விடுறாங்களாம்.. ஐக்கியமானது மட்டுமில்லாமல், ஏற்கனவே தங்களுக்குள் இருந்த பகை காரணமாக வழக்கு வரை சென்ற பிரச்னையையும் சுமுகமாக முடிச்சு, மிட்டாய் பரிமாறிக்கிட்டாங்களாம்.. இலை கட்சியில மறைந்த நடிகர் பெயரை கொண்ட அந்த முன்னாள் நிர்வாகி மீது, அவருடன் நெருக்கமான நண்பராக இருந்து விரோதியாக மாறிய மகிழ்ச்சியின் பெயரை கொண்ட அந்த நபர் கடும் கோபத்தில் இருந்தாராம்.. இவர்கள் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி மோதிக் கொண்டார்களாம்..

விவகாரம் வில்லங்கமாக வெடித்து கோர்ட் கேஸ் வரைக்கும் போனதாம்.. ஆனால் இப்போது எதிரிக்கு, எதிரி நண்பன் என்பது போல், இலை கட்சியில் அந்த முக்கியமான நிர்வாகியான சுந்தரமானவருக்கு எதிராக இவர்கள் ஒன்றாகி விட்டாங்களாம்.. ஒன்றானது மட்டுமல்ல, கேஸ்சையும் சுமுகமாக முடிச்சுட்டுட்டோம். நாங்கள் உயிர் நண்பர்கள் என்று மீண்டும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட ஆரம்பிச்சுட்டாங்களாம்.. இப்போது இவங்க ஒன்றாக போய், தங்கள் அணி கோஷ்டியை வலுவாக்கும் முயற்சியில இறங்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காவல்துறையில் என்ன பரபரப்பாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘அதிமுக ஆட்சியில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு உடந்தையாக இருந்ததாக நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போலீஸ் எஸ்பி கண்ணனுக்கு, விருதுநகர் மாவட்ட எஸ்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல சந்தன மரக்கடத்தல், பாலியல் குற்றச்சாட்டு, லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளான பல போலீஸ் அதிகாரிகளுக்கும் நல்ல பதவி வழங்கப்பட்டுள்ளதாம். அதேநேரத்துல அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்ட, முன்னாள் அமைச்சர்களின் மிரட்டலுக்கு ஆளான டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு நீதி கேட்டு போராடிய மகேஸ்வரிக்கு, தற்போதும் தண்டனை வழங்கும்விதமாக தூத்துக்குடி போலீஸ் பயிற்சிக் கல்லூரி வழங்கப்பட்டுள்ளதாம். இதுதான் போலீசில் தற்போது பேசுபொருளாகியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்